மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: திருவதிகை – அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தலம்

வணக்கம்.
திருவதிகை என்கின்ற திருத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த 
வீரட்டானேசுவரர் திருக்கோயில்,  தென் கங்கை என்று கூறப்படும் கெடில நதியின் வடகரையில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயில்  இது.  மூலவருக்கு உரிய கோபுரத்து உச்சியின் நிழல் தரையில் விழாதபடி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர நிழல் கீழே விழாதவாறு கட்டுவதற்கு இந்தக் கோயிலே முன்மாதிரியாக இருந்திருக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்கோயிலின் இறைவன்  வீரட்டேசுவரர், வீரட்டநாதர், அதிகைநாதர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். இறைவி திரிபுரசுந்தரி, பெரியநாயகி  என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். சரக்கொன்றை  இக்கோயிலின் தலமரமாகும்.
இக்கோயிலின் பல பகுதிகளில் பல்லவர் காலத்து, பாண்டியர் காலத்து பிற்காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் ஒரு சுவர் பகுதியில் திருவதிகை என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். 
தேவாரம் முதன்முதலில் பாடப்பட்ட தலம் இது என்பதோடு  சைவக்குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற பெருமையையுடையுது இத்திருத்தலம். 
இக்கோயிலில் சுவாமி வீரட்டானேஸ்வரர்  மிகப்பெரிய வடிவில் காட்சி தருகிறார். கோயில் தூண்கள் 16 பட்டைகளுடன் விளங்குகின்றன.  உழவாரப்பணி முதன்முதலில் திருநாவுக்கரசு சுவாமிகளால் இங்குதான் செய்யப்பெற்றது என்ற பெருமையும் இக்கோயிலுக்குண்டு.
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக விளங்குகிறது. கோயிலின் முகப்பில் 16-கால் மண்டபம் ஒன்று உள்ளது. இது திருநீற்று மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. திருநீற்று மண்டபத்தைத்தாண்டிச் சென்றால், ஏழு நிலைகளும், ஏழு கலசங்களும் கொண்டுள்ள இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து நிற்கின்றது. அந்தக் கோபுரத்து வாயிலின் இரண்டு பக்கங்களிலும் பரத சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 தாண்டவ லட்சணங்களை விளக்கிக் காட்டுகின்ற நாட்டியக் கலைஞர்களின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 
இராஜகோபுரத்திற்கு அடுத்தபடியாக, உட்புறம் மற்றொரு 16-கால் மண்டபம் உள்ளது. இது தீர்த்தவாரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இடது பக்கம் அன்னதானக் கூடம் புதிதாக அமைத்துள்ளார்கள். அதையடுத்து, தல தீர்த்தங்களில் ஒன்றான சக்கரதீர்த்தம் என்னும் குளம் உள்ளது. 
இக்கோயிலின் வாசல் பகுதியில் இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கரிய மேனியுடன் திகழும் இந்தச் சிலை  இப்பகுதியில் பண்டைய காலத்தில் பௌத்த சமயம் செழிப்புற்று இருந்தமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
உட்பிரகாரத்தில் தெற்குப்புறமாக நகர்ந்தால் அங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் உள்ள உற்சவமூர்த்தியின் சன்னிதியைக் காண்கிறோம். அதையடுத்து அறுபத்து மூவர் சன்னிதியும் தலவிருட்சமான சரக்கொன்றை மரமும் உள்ளது.  அதன் அருகே, சரக்கொன்றைநாதர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். அவருக்கு அருகில், அப்பர் பெருமானின் தமக்கையாரான திலகவதி அம்மையாரின் சன்னிதி உள்ளது. திலகவதி அம்மையார் சன்னதிக்கு எதிர்ப்புறம், தெற்குப் பக்க வாயிற்படிகள் வழியே சென்றால் திரிபுர சம்கார மூர்த்தியின் உற்சவ சன்னிதி உள்ளது. அவருடைய சன்னிதி தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. அவருக்கு முன் உள்ள இரண்டு தூண்களிலும் கருணாகரத் தொண்டைமான் பற்றிய கல்வெட்டுகள் பாடல்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 
 
மூலவர் வீரட்டானேசுவரர் பதினாறு பட்டைகளையுடைய பெரிய சிவலிங்கத் திருமேனியாக, கிழக்கு திசையை நோக்கியவாறு காட்சிதருகிறார். இவருக்குப் பின்புறம் கருவறைச் சுவரில், சிவன்-பார்வதி திருவுருவங்கள் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்குப்பிரகாரத்தில், பெரியநாயகி அம்மையின் திருக்கோயில் மூலவர் கோயிலுக்கு வலது புறம் தனிக்கோயிலாக அமைந்து உள்ளது. 
மூலவர் கோயிலின் விமானம், எண் கோணத்தில், மிக அழகாகச் சுதையில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானம் பல்லவர் காலத்தில் நிறுவப்பட்டது. 
விமானம் ஒரு தேர் வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விமானத்தின் அடித்தளத்திலிருந்து உச்சி வரை சுதையால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு அடித்தளத்திலிருந்து உச்சி வரை சிற்பங்கள் உள்ள விமானத்தை மற்ற கோவில்களில் காண்பது அரிது. விமானத்தைச் சுற்றிலும் வண்ண வண்ணப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி கண்களைக் கவர்ந்து நிற்கின்றது. 
கருவறையைச் சுற்றிலும் குடவறைச் சிற்பங்களாக விநாயகர், அவருடன் நிற்கும் தேவகணங்கள், கோவர்த்தனதாரி, அக்னி, ஏகபாத மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், இப்படிப் பலவிதமான சுதைச் சிற்பங்கள் கண்களுக்கு  விருந்தளிக்கின்றன.
எண் கோணத்தில் அமைந்த விமானத்தின் எட்டு பக்கங்களில் ஒவ்வொன்றிலும் நந்தி தேவரின் குடவறைச் சிற்பம் ஒன்று, சற்று உள்ளடங்கியவாறு இருப்பது கூர்ந்து நோக்கவேண்டிய ஒன்றாகும். அவற்றில் சில, சிறிய இடைவெளிக்குள் நுழைந்து பார்த்தால்தான் தெரியும்படி அமைந்துள்ளன.
கட்டிடக் கலைக்கும் சுதைச்சிற்ப வடிவமைப்புக்கும் ஒரு உதாரணமாக இக்கோயில் திகழ்கின்றது.
குறிப்பும் நன்றியும்.
1.2நூல் திருவதிகை, திரு.அன்பு ஜெயா
2. பதிவில் இடம் பெறும் தேவாரப் பாடல் – திருத்தணி  N.சுவாமிநாதன்

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_11.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=f7VKDb-l3Oo&feature=youtu.be
இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *