மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவை கூத்துக் கலைஞர்

இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு வெளியீட்டில்  தோல்பாவைக் கூத்துக் கலையை தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவருடைய பேட்டி இடம் பெருகின்றது.
பரம்பரை பரம்பரையாகயாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார் இக்கலைஞர். மராட்டிய பின்புலத்தைக் கொண்ட இவர்களது குடும்பத்தார், சரபோஜி மன்னர் காலத்தில் தமிழக நிலப்பகுதிக்கு வந்து வாழ்ந்து வரும் கணிகர் சமூகத்தில் உள்ள 12 பிரிவுகளில் ஒரு பிரிவினைச் சார்ந்தவர்கள்.
இவரது தோல்பாவை கூத்து பாணியில் ராமாயண கதைகளே முக்கியக் கதை களமாக அமைகின்றன. ராமாயணத்தில் உள்ள நகைச்சுவை கதைகளை எளிய சொற்களில் பாடல்களாக்கி பாடுகின்றனர். சினிமா துறைகளில் பிரபலமான சில பாடல்களையும் தமது பாடல்களில் இணைக்கும் முயற்சியும் அவ்வப்போது உண்டு எனச் சொல்கின்றார் இக்கலைஞர்.
சமகால சமூக நலன் தொடர்பான கருத்தாக்கங்களை உட்புகுத்தி புதிய வடிவங்களில் தோல்பாவை கூத்து நடத்துவதும் இன்று வழக்கில் வந்துள்ளது.
“பா கூத்து” என்று அடிப்படையில் வழக்கில் இருந்து பின்னர் தோல் பொம்மைகள் உட்புகுத்தப்பட்ட பின்னர் “தோல்பாவை கூத்து” என பரிமாணம் பெருகின்றது இக்கலை.
ஆய்வாளர் முனைவர்.அ.க.பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் புதுமையான முயற்சிகளையும் உட்புகுத்தி புதிய கதை வடிவங்களை தமது தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இன்று தோல்பாவை கூத்துக் கலை தொடர்கின்றது.
இக்கலைஞர்களில் பெரும்பாலோர் பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்குள் வாழும் நிலையே தொடர்கின்றது. கால ஓட்டத்தில் தோல்பாவை கூத்துக் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.  எட்டாவது தலைமுறையான இக்கலைஞரின் மகன் காலத்திலேயே இக்கலையைத் தொழிலாக ஏற்கும் வழக்கம் இல்லாது போய்விட்ட நிலை தான் கண்கூடு.
குடும்பக் கலையாக இத்தகைய கலைகள் தொடர்வது என்பது இக்கால சூழலில் சாத்தியப்படாது. தோல்பாவை கூத்து போன்ற மக்கள் கலைகள் மீட்கப்பட வேண்டுமென்றால் அவற்றிற்கு தகுந்த சமூக அங்கீகாரம் என்பது கிடைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும், கலைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இக்கலை ஒரு பாடமாக அமைக்கப்பட வேண்டும். மக்கள் மனதிலிருந்து படிப்படியாக மறையும் இவ்வகைக் கலைகளை மீட்டெடுக்க இதுவே ஆக்கப்பூர்வமான ஒரு வழியாக அமையும்.
யூடியூபில் காண:    https://youtu.be/XmqcsZ9BiNo
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *