Home Video மண்ணின் குரல்: மார்ச் 2019 – கல்வி வரம் தந்த துறவி சுவாமி சகஜானந்தா

மண்ணின் குரல்: மார்ச் 2019 – கல்வி வரம் தந்த துறவி சுவாமி சகஜானந்தா

by admin
0 comment

செய்யாறுக்கு அருகில் உள்ள பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் மேல் புதுப்பாக்கம் என்ற சிற்றூரில் அண்ணாமலையார், அலமேலு அம்மையார் தம்பதியருக்கு 27.1.1890 மகனாகப் பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. பிறந்தபோது இவருக்கு வைக்கப்பட்ட பெயர் முனிசாமி. பள்ளியில் சேரும் போது வைக்கப்பட்ட பெயர் சிகாமணி.

கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காடு மிஷனரி பள்ளியில் ஆரம்பக்கல்வியும் திண்டிவனம் ஆற்காடு மிஷன் மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பும் முடித்தார். கிருத்துவப் பள்ளியில் படித்தாலும் அவர் தீவிர சைவராகவே இருந்தார்.

மெய்யறிவு தாக்கம் கொண்ட சகஜானந்தா 1916ல் சிதம்பரம் ஓமக்குளக் கறையில் நந்தனார் பள்ளியையும் பிறகு ஒரு சைவ மடத்தையும் அதனுள் ஒரு சிவாலயத்தையும் தோற்றுவித்தார்.
முதலில் 50 மாணவர்களும் 50 மாணவிகளும் இணைந்தனர். நந்தனார் கல்விக்கழகம் பல இடங்களில் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கியது. இதனால் சிதம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற உதவினார்.

1926ல் சென்னை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதி திராவிட மகாஜன சபை மற்றும் நீதிக் கட்சியிலும் பங்கேற்றார். 11.9.1927 இவருடைய நந்தனார் மடத்திற்கு காந்தி வருகை தந்தார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்குக் கல்வி மட்டுமே தீர்வு என்ற நம்பிக்கையோடு பணியாற்றினார்.

சிதம்பரம் கோயிலில் நந்தனார் வாயிலைத் திறப்பதற்கான போராட்டங்களை மேற்கொண்டார். அதன் நினைவாக இன்றும் அவர் நிகழ்த்திய போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்படுகின்றது.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரை நிரந்தர செனட் உறுப்பினராக அமர்த்தியது.

இப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

 

யூடியூபில் காண: https://youtu.be/aFk4cebz3D8

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment