Home பல்வேறு வ.ஐ.ச.ஜெயபாலன் பாடல்கள்

வ.ஐ.ச.ஜெயபாலன் பாடல்கள்

by admin
0 comment

ஈழத்து முன்னணிக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எப்போதும் அறிமுகமானவையே. ஆயினும் நோர்வே நாட்டிற்குப் புலம் பெயர்ந்த பின் இக்கவிஞர் தன் கவிதைகளை, தனது கவிதா விசிறியும், வாழ்க்கைத் துணைவியும், இனிய பாடகியுமான வாசுகியுடன் சேர்ந்து இசைப் பாடல்களாக உருவாக்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் ‘மெல்லிசை மன்னன்’ எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் தொழில் புரிந்த கலைஞர் உ.தியாகராஜன் அவர்கள் ஜெயபாலன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்கள். “பாலை” எனும் இவ்விசைத்தகடு வாசுகி ஜெயபாலனும் ஆர்.ஜெயபிரகாஷ் அவர்களும் சேர்ந்து தயாரித்த வெளியீடாக வந்துள்ளது!

இசை நகலெடுப்பது என்பது மறைமுகமில்லாத ஒரு பொதுத் தமிழ் பண்பாக இருப்பதை அறிந்து இவர் தனது குறுந்தட்டில் வெளிப்படையாகவே நகலெடுப்போர் அன்பளிக்க வேண்டிய முகவரி என்று தனது நோர்வே வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் “யாழ்” எனும் மின்னரங்கில் அத்தனை பாடல்களையும் mp3 கோப்புகளாக்கி பொதுப் பார்வைக்கு வைத்துள்ளார். தரவிறக்கம் செய்வோர் பணம் அனுப்புவர் எனும் நம்பிக்கையில். இந்த ஆச்சர்யமானக் கவிஞரை உங்கள் சார்பாக தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு பேட்டி எடுத்துள்ளது.

எமது கேள்விகளும் வ.ஐ.ச.ஜெயபாலன் பதில்களும்:

கேள்வி:
ஈழத்தின் சமகாலக் கவிஞர்களுள் தனக்கெனத் தனியிடம் வகிக்கும் தங்களுக்கு எப்போது, உங்கள் கவிதையை இசைப்படுத்த வேண்டுமென்று தோன்றியது? ஏன்? அதற்குக் காரணிகள் உண்டோ?

பதில்:
என்மீது நிரந்தரமான செல்வாக்குச் செலுத்தும் சங்கக் கவிதைகள் பாடப் பெற்றவையே என்பதை உணர்ந்த காலதில் இருந்தே என்னுள் இந்த ஆசை இருந்தது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்கள் அதற்கு வழி திறந்தது. சித்தர்கள், ஊத்துக்காடு, கோபாலகிருஸ்ண பாரதியார், பாரதிதாசன் இவர்கள் பாடல்கள் எல்லாம் பிடித்திருந்தது. கடந்த 21 வருடங்களாக என்னை வைத்திருக்கும் பாடகி வாசுகியும் என் பாடல்களுக்காகவே என்னில் ஆர்வம் கொண்டார். இசை என் கற்பனைகளின் ஒழுங்கும் ஒழுங்கின்மையுமாகும்.

கேள்வி:
பொதுவாக புதுக்கவிதை தேவாரம், திவ்யப்பிரபந்தம் போல் “இசைப்பா” அல்ல. சந்தம், அலகு என்று ஏதும் இல்லாமல் பரவும் கவிதையை இசைக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது?

பதில்:
புதுக்கவிதை பற்றிய பிரபலமான கருத்து அது. ஆயினும் கவிதைக்கு கோட்பாட்டுகளால் வேலிகட்டிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்து கவிதையை இசைக்குப் பலியாக்காத முயற்ச்சிதான் புதுக்கவிதை. இசையும் கவிதையும் கருத்தொருமித்து ஆதரவுபடுகிற இன்பத்தை கோட்பாட்டுக்காக கொல்வதும் புதிய கவிதை முயற்சிக்கு பாதகமானது என்றே கருதுகிறேன்.

கேள்வி:
எப்போது உங்கள் முதல் இசைக்கவிதை வெளி வந்தது?

பதில்:
ஐந்து வயதில் சக நண்பனுக்கு எங்களூர் நாட்டுப்பாடல் பண்ணில் வசைப் பாடல் எழுதிய போது என்று நினைக்கிறேன். 1970களில் இலங்கை வானொலி ஈழத்துப் பாடல் நிகழ்ச்சிக்கும் பின்னர் 1980களில் விடுதலைக்கான கலைக்குழுக்களுக்குமாக எழுதியிருக்கிறேன். எனினும் பாலை குறுந்தட்டுத்தான் எனது முதல் இசைத் தொகுப்பு

கேள்வி:
உங்கள் கவிதைகளை உங்கள் துணைவியாரை வைத்தே ஒரு குடும்ப (குடிசை) தொழிலாகச் செய்வதன் மர்மம் என்ன?

பதில்:
😉

பிறரும் பாடுகிறார்கள். ஆனாலும் என் முதல் தொகுதியை வாசுகி பாடாமல் வெளியிடமாட்டேன் என 1987ல் வாக்குக் கொடுத்திருந்தேன். இல்வாழ்வென்கிற மேடை நாடகத்தில் என் துணைவி பாத்திரத்தில் நீடிப்பவரோடு உண்மையாகவே நட்பு இருக்கு. அது நீண்டகால அடிப்படையில் என்னுடைய களவு தந்திரங்களைவிடவும் பலமானதாகவும் இருக்கு.

கேள்வி:
பாலை எனும் சமீபத்திய இசைத்தொகுப்பிற்கு இசை அமைத்தது யார்? அவர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

பதில்:
தியாகு எம் எஸ் விஸ்வநாதனின் உதவியாளர். அவரது தொலைபேசி 0091 -9283110603. ஒலிப்பதிவில் கவிதை/பாடல் சரியான உச்சரிப்போடு பாவத்தோடு பாடப் படுவதை எப்பவும் உறுதி செய்கிறவர். தொகுப்பில் மாரி மழைக்கரத்தால் பாடலை அவரே பாடியிருக்கிறார்.

கேள்வி:
மிகவும் சிரமப்பட்டு, கடன் பட்டு ஒரு இசைத்தட்டை வெளியிட்டு விட்டு அதை “நம்பிக்கையின்” பேரில் தரவிறக்கம் செய்யும் யோசனை (வலைத்தானம்) ஏன் தோன்றியது? தரவிறக்கம் செய்தோரெல்லாம் பணம் அனுபினரா?

பதில்:
இப்பொழுதுதான் ஒரிருவர் தொடர்புகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் பலியானாலும் நம்பிக்கை அடிப்படையில் சக கலைஞர்கள் செயல் படக்கூடிய மரபை நாம் தோற்றுவிக்க முடிந்தால் அது தமிழ் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுமென்று தோன்றியது. ஆகஸ்ட் 25, 2008ல் வலைப்படுத்திய பாலை இசைத் தொகுதியை இன்று மதியம்வரை (செப்டம்பர் 10, 2008) 1315 பேர் நேரடியாக தரவிறக்கம் செய்துள்ளார்கள். அவர்கள் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுடன் பரிமாறியதையும் கணிக்க முடியுமெனில் தொகை மிக அதிகமானதாக இருக்கும்.

இதுவரை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் 100 அவுஸ்திரேலியன் டொலரும் அமரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி 100 அமரிக்க டாலர்களும் கனடாவில் இருந்து கவிதாயினி ஒருவர் தானும் தோழிகளும் சேர்ந்து 20 கனடிய டாலர்வீதமும் அனுப்புவதாகவும் வாக்களிதிருக்கின்றனர். கடன்வாங்கி முதலீடு செய்த இந்தியப் பணம் 150000 ரூபாவைப் (US$ 3300) பெற முடிந்தால் இரண்டு காரணங்களுக்காக மகிழ்வேன்.

முதலாவது மகிழ்ச்சி கடன் சுமையில் இருந்து தமிழ்க் கலை ஆர்வலர்களால் மீட்கப்பட்டமைக்காக.

இரண்டாவது மகிழ்ச்சி நம்பிகை அடிப்படையிலான கொள்வனவு கொடுப்பனவு மரபு ஒன்றைத் தமிழ்க் கைலை உலகில் ஆரம்பித்து வைத்தமைக்காக. ஒரு போராடும் கவிஞன் என்கிற முறையில் இன்னமும் காலம் கடந்துவிடவில்லையென்றே நம்புகிறேன்.

கேள்வி:
எப்போதும் ஓசிச்சோறுக்குப் பழகிய தமிழ்ச் சமுதாயம் தரமான இசைத்தகடு என்று அறிந்தவுடன் பணம் அனுப்பும் என்று நம்புகிறீர்களா? தமிழக இசைக் கலைஞர்களெல்லாம் யார், யாரோ எழுதிய கீர்த்தனைகளைப் பாடி காசு சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவிதையை எப்படி இலவசமாகக் கொடுக்கத்தோன்றியது? கவிதையைக் காசு பண்ணும் யுத்தி அறிந்தோரும் நம்முள் உள்ளனரே. அதைப் பார்த்த பின்பும்?

பதில்:

நான் வணிகக் கவிஞன் அல்லேன்! என்றும் சங்கப் பெருங்கவி பெருஞ்சித்திரனாரின் வாரிசாகவே உணர்கிறவன். கவிஞனாய் இயங்குவது என்பது ஒரு life style அல்லவா! 1000 தடவைகள் விழுந்தாலும் என் வாழ்வியலைத் தொடர்வேன் என்பதையும் என்னுடைய பாடல்களின் ஆர்வலர்கள் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கவே விரும்புவேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்படிப் பதில் சொல்லும் சங்கக்கவி வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் என்றும் நிற்கும் என்பதற்கு இவ்விசையும் கூடுதல் கனத்தைக் கொடுக்கிறது! வாழ்த்துக்கள்!

இப்பாடல்களைக் கேட்க விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவிற்கு வருமாறு அழைக்கிறோம்.

இசை கேட்டபின் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனத் தோன்றில் “யாழ்” மின்னரங்கத்திற்குச் செல்லவும்.

இப்பேட்டி கண்டபின், இசை கேட்டபின் நம் கவிஞரை ஆதரிக்க வேண்டுமெனத் தோன்றினால், அவரது வங்கி விவரம் கீழே:

Bank Address
Postbanken: N-0021 Oslo, Norway.
Name: Shanmugampillai Jayapalan
Bank Account no. 0532 51 18328
Payment from abroad, use the IBAN number No6105325118328, and BIC-code (Swift-address) DNBANOKK.

கவிஞர் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டு நிதி உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்: Mobile No: 00919941484253.

You may also like

Leave a Comment