கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

1,200 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் 1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இரு மாவட்ட எல்லையிலுள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயத்தில் புனரமைப்புப் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணியின்போது மண்ணில் புதைந்திருந்த தொன்மையான கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றை ஆய்வு நடத்தி வரும் குடவாசல் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை(23/10/2008) கூறியது:

இக்கோயில் வளாகத்தில் கிடைத்த 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்களை படி எடுத்தோம். கி.பி. 800ல் தொடங்கி 1,600ஆம் ஆண்டு வரையுள்ள பல ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சாசனங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் மூன்று சாசனங்கள் முழுமையாகவுள்ளன. கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் அரிய தமிழ்ப் பாடல்களிலுள்ள புள்ளி பெற்ற மெய்யெழுத்துகள் காணப்படுகின்றன.

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி பட்டம் புனைந்த ஆதித்த கரிகால் சோழனின் (இராஜராஜ சோழனின் அண்ணன்) 4ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 960ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சாசனத்தில், புதுக்குடி என்னும் அவ்வூரின் பழம்பெயர் “நாங்கூர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜேந்திர சோழனின் சாசனங்களும் காணப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இவ்வூரின் பெயர் மீசெங்கிளி நாட்டுப் புதுக்குடி என குறிக்கப்பட்டுள்ளது. “மீசெங்கிளி நாடு,” தற்போதைய தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதியாகும் என்றார்.

நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *