Home பல்வேறு மானிட மடங்கல்

மானிட மடங்கல்

by admin
0 comment

மானிட மடங்கல்     
வித்துவான் மு.இரத்தின தேசிகர்.
தலைமைத் தமிழாசிரியர் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளி
திருவாரூர்.

இரணியன் தேவராலும், மக்களாலும், விலங்குகளாலும், பறவைகளாலும் சாவா வரத்தைப் பெற்றான்.  அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும், இரவிலும், பகலிலும் பகைவர்கள் தன்னை அழிக்க முடியாத நிலையும் அவன் வேண்டிப் பெற்றான். எந்த ஆயுதமும் தன் ஆவியைப் போக்கக் கூடாது என்பது அவன் பெற்ற வரம்.

         இந்த நிலையிலே சேற்றில் பங்கயம் தோன்றுவது போல அவனுக்குப் பிரஹலாதன் மகனாய்ப் பிறக்கிறான். நாத்திகம் பேசும் தந்தையை ஆத்திக நெறியில் திருப்ப அரும்பாடு படுகின்றான்.;குழந்தாய்! நீ கூறும் இறைவன் எங்கு இருக்கிறான்?'' என்ற வினா தந்தையினிடமிருந்து தோன்றுகிறது. தனயன், "யான் கூறும் இறைவன் எங்கும் இருக்கின்றான்;" இங்குள்ள இக்கம்பத்தும் இருக்கின்றான்!" என்ற விடையைத் தருகின்றான். தந்தைக்கு பொங்கி எழும்புகின்றது கோபம். "ஏ! பேதாய்! இக்கம்பத்தினிடத்தே; நீ சொன்ன இறைவனைக் காட்டுவாயின் அவனையும் கொன்று உன் செம்பொத்த குருதியைத் தேக்கி நின்னையும் செகுப்பேன்" என்று சினந்து கூறி அக்கம்பத்தைத் தாக்குகிறான் தந்தை; எழும்புகிறது ஒரு பெரிய உருவம்! அஞ்சத் தக்க உருவம்! வரபலங்களைக் கடந்த உருவம்! அதுதான் மானிட மடங்கல். ஆவேச நிலையிலே இரணியனை அழித்து ஆத்திகத்தை நிலை நாட்டியது அவ்வுருவம்.

         திருமாலின்  முக்கியமான பத்து அவதாரங்களில் இம்மானிட மடங்கல் பிறவியுமொன்று. இதுவே நரசிம்ம அவதாரம் என வழங்கப்பெறுகின்றது.  மக்கள் உருவும், சிம்மத்தலையும் கொண்டது அவ்வுருவம். இந்தத் தோற்றத்துக்குமுன்பு திருமால் மீன், ஆமை, பன்றி, என்ற தோற்றங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறும். இம்மானிட மடங்கல் தோற்றத்துக்குப் பின்னர் திருமால் குறுகிய வடிவமுடைய வாமனனாக வந்தார். அதனை  அடுத்து பரசுராமன், இரகுராமன், பலராமன், கண்ணன் அவதாரங்கள் எடுத்தார். மேலை நாட்டு விஞ்ஞானிகள் டார்வவின், ஹெக்கலஸ் போன்ற அறிஞர்கள் உயிர் நூல்களை நம்பிக்கை வாதத்துக்கு இடமின்றி நேரில் கண்ட நிகழ்ச்சிகளால் வரைந்து சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர் கூறுவார்கள். அவர்கள் கருத்துப்படி சிறு உயி ர் பேருயிராக வளர்ந்து பரிணமிக்கின்றது என்று நம்பப் படுகிறது.

         இருவேறு வகைப்பட்ட உடற்கூறுகள் அமைந்த இம்மானிட மடங்கலை இலக்கண நூலாரும் ஏற்ற இடங்களில் உவமையாக எடுத்தாண்டிருக்கும் திறம் வியத்தற்குரியதாகும்.  எழுத்தின் வைப்பு முறையைப் பற்றி உரை எழுதிவந்த நன்னூல் விருத்தி ஆசிரியர், "எகரமாவது அகரக்கூறும் இகரக் கூறும் தம்மொடு ஒத்திசைத்து நரமடங்கல் போல் நிற்பதொன்றாகலானும், ஒகரமாவது அகரக் கூறும் உகரக் கூறும் தம்மோடு ஒத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்றாகலானும், அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன." என்று கூறியிருப்பது  சிந்திப்பதற்குரியதாகும்.

         இம்மானிட மடங்கலைப்பற்றிய சிந்தனை சோலைகள் சூழ்ந்த ஆரூரை வந்தடைந்த குமரகுருபரரது உள்ளத்தே படிந்து நிற்கின்றது. அதே சமயத்தில் அவரது உள்ளம் ஆரூரையடுத்த இயற்கைக் காட்சிகளில் ஈடுபடுகின்றது. ஒளிமிக்க கிரணங்களைப் பரப்பும் செங்கதிர் செல்வனாகிய சூரியன், வேண்டியமட்டும் தன் வெயிலை வாரி வழங்குகின்றான். ஆனால், மேகங்கள்  படிந்துள்ள பூக்கள் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் தமது அடர்த்தியால் அச்சூரிய ஒளியைத் தடுத்துவிடுகின்றன;சோலையின் உள்ளிடமெல்லாம் செறிந்த இருள் ஒரே பிண்டமாகக் காட்சியளிக்கின்றது. இக்காட்சியில் திளைக்கும் அடிகளாருடய எண்ண அலைகள்
          "ஒண்கதிர் பரப்பும் செங்கதிர்க் கடவுள்
           வெயில்கண் டறியா வீங்கிருள் பிழம்பில்
           புயல்கண்படுக்கும் பூந்தண் பொதும்பில்"
என்ற பாவடிகளாக வெளிவருகின்றன. அச்சோலையில் காவலர்களுக்கு அஞ்சிய மந்தி ஒன்று ஒரு மரத்தின் அடியே ஒளிந்துகொண்டு வீற்றிருப்பதைக் குமரகுருபரர் காண்கின்றார். அம்மந்தி மயிரடர்ந்த தன் கழுத்தோடு சிங்கத்திற்கு ஒத்த முகத் தோற்றத்தினையும், மனித உடலுக்கு இணையான உடலமைப்பையும் கொண்டு கரிய விரல்களோடு ஒருவடிவாய்த் திகழ்வதைக் காண்கிறார்கள். கண்ட அடிகளாரது திருவாக்கினின்றும்,
           " காவலர்ப் பயந்து பாதவத் தொடுங்கிய
             இருவேறுருவில் கருவிரல் மந்தி"
என்ற பாவடிகள் தோன்றுகின்றன. மந்தி என்ன செய்கின்றது? பொன்னிறமாகப் பழுத்த இனிய சுளைகளையுடைய பலாப் பழமொன்றை அம்மந்தி தன் மடியில் வைத்துக் கொண்டது. பழங்கிடைத்த ஆனந்தத்தில் மந்தி நாணல் முனை போன்ற தன் பற்களையெல்லாம் வெளியே காட்டி நகைக்கின்றது. கூரிய தன் நகங்களைக் கொண்டு சக்கைகளால் தொகுக்கப்பட்ட பலாச்சுளைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயிலிட்டு உண்கின்றது. இத்தோற்றத்தினை அடிகள்,
           "பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
             முன்னுறக் காண்டலும் முளையெயி றிலங்க
             மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால்
             தொடுத்தபொற் சுளைபல எடுத்துவாய்மடுப்பது"
என்ற அடிகளாய்ப் பாடி அருள்கிறார். இந்த இயற்கை நிகழ்ச்சி அடிகளுக்கு மானிட மடங்கலின் வீரச் செயலை நினைப்பூட்டுகின்றது. மந்தி மானிடமடங்கலாய்க் காட்சியளிக்கின்றது. மந்தியின் மடியிலிருந்த பொன்னிறப் பலா இரணியன் என்ற பெயரைக் கொண்ட அரக்கனை நினைப்பூட்டுகின்றது. எடுக்கப்படும் ஒவ்வொரு சுளையும், அவனது மார்பைப் பிளந்து குடரோடு பின்னிக்கிடக்கும் நிணத் துண்டங்கள் எடுக்கப்படுவதை நினைப்பூட்டுகின்றது. இத்தகைய வியப்பைத் தரும் காட்சிகளை அமைத்து,
             மானிட மடங்கல் தூணிடைத் தோன்றி
             ஆடகப் பெயரின் அவுணன் மார்பிடந்து
             நீடுபைங் குடரின் நிணங்கவர்ந் துண்டென
             இறும்பூது பயக்கும்"
என்ற அடிகளைப் பாடினார். இவ்வடிகள் திருவாரூர் நான்மணிமாலைப் பாடலாய்த் திகழ்கின்றன.
           "ஒண்கதிர் பரப்பும் செங்கதிர்க் கடவுள்
            வெயில்கண் டறியா வீங்கிருள் பிழம்பில்
             புயல்கண்படுக்கும் பூந்தண் பொதும்பில்"
                  காவலர்ப் பயந்து பாதவத் தொடுங்கிய
             இருவேறுருவில் கருவிரல் மந்தி
             பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
             முன்னுறக் காண்டலும் முளையெயி றிலங்க
             மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால்
             தொடுத்தபொற் சுளைபல எடுத்துவாய்மடுப்பது
               மானிட மடங்கல் தூணிடைத் தோன்றி
             ஆடகப் பெயரின் அவுணன் மார்பிடந்து
             நீடுபைங் குடரின் நிணங்கவர்ந் துண்டென
             இறும்பூது பயக்கும்"
…………………………………………………………..திருவாரூர் நான்மணிமாலை
-குமரகுருபர அடிகளார்"
…..
      
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்.
   

, and web pages.

You may also like

Leave a Comment