கிராமக் கிளைநூலகமும் உலகம் சுற்றிய தமிழரும் பேரறிவாளர் திருவும் – நெற்குப்பை சோமலெ

11.02.2013 அன்று நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த சோமலெ அவர்களது 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் பெண்களுக்கான எம்ராய்டரி பயிற்சி தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றும் பேறு வாய்த்தது.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் 1921 ஆம் ஆண்டில் பிறந்தவர் உலகம் சுற்றிய தமிழர் எனப் போற்றப்படும் சோம.லெக்ஷ்மணன் செட்டியார் அவர்கள். 85 நூல்கள் எழுதியவர். அவற்றில் 42 பயண இலக்கிய நூல்கள். “இமயம் முதல் குமரி” வரையென்று பாரத தரிசனமும் அன்றைய 10 மாவட்டங்கள் வழி தமிழகப்பார்வையும் தமிழுலகிற்குத் தந்தவர்.    “அமெரிக்காவைப் பார்”, “ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்” என 1950ல் பயண நூல்கள் எழுதியவர். ”செட்டி நாடும் தமிழும்” இன்றைக்கும் பேசப்படும் மரபியல் நூல். பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மறைக்காடு தந்த மாமனிதர் வேதரத்தினம் பிள்ளை, விவசாய முதலமைச்சர் ஓமந்தூரார் பற்றிய அவரது நூல்கள் ஆவணங்களாகும்.
 

எட்டுத்திக்கும் சென்றாலும் பிறந்த ஊருக்குச் சேவைசெய்யும் நோக்கில் அஞ்சலகம், வங்கி, தொலைபேசி நிலையம் எனக்கொண்டுவரக் காரணமானவர் சோமலெ. தந்தையார் வழியில் அவர்களின் திருமகன் அமெரிக்கவாழ் வேளாண் விஞ்ஞானி திரு சோமசுந்தரம் நெற்குப்பை கிளை நூலகத்திற்குப் பெருஞ்செலவில் தந்தையார் பெயரில் அருமையான கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளார். இணையத்துடன் கணினி நிறுவியுள்ளார். கணிப்பொறிகள் தந்துள்ளார். மேலும் தகுந்த பயிற்சியாளர் மேற்பார்வையில் மாணவரும் ஊராரும் தினமும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வேறு நூலகத்திற்கில்லாத தனிச் சிறப்பு இதுவாகும்.
அமைத்ததை விடப் பாராட்டுக்குரியன பராமரிப்பதும் பயனுறச் செய்வதும். அமெரிக்காவில் இருந்தாலும் ஒவ்வொரு நொடியும் நூலகத்தைப்பற்றிச் சிந்தித்து இயக்குதல் அவரது ஆர்வத் திறன்.
 
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிதல்          

என்ற சொற்களுக்கு இணங்க இன்றையச் சூழல் கணினி அறிவு கொடுத்தலும் எழுத்தறிவித்தலேயாகும். பாரதியின் வரிகளை நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அன்னம் இட்டால் அந்த வேளைக்குப் பசியாறலாம். ஆலயத்தில் வழிபட்டால் அந்த நொடியில் மனம் அமைதியுறும். ஆனால் கல்வியறிவால், கணினி அறிவால் வாழ்நாள் முழுதும் பயனடையலாம். எழுமையும் ஏமாப்புடைத்து. அதனால் தான் பாரதி புண்ணியம் கோடி என உயர்வாகச் சொன்னார் போலும்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராம நூலகத்தில் நூலகர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதையும் வந்தாலும் மதியத்திற்கு இல்லாது சென்றுவிடும் நிலையையும் கண்டிருக்கிறேன்.ஆனால் 12.30 கு அடைத்து 4.00 மணிக்குத் தொடங்க வேண்டிய நூலகம் அடைக்காமல் செயல்படுகிறது. பக்கத்தில் உள்ள மேநிலைப் பள்ளி மாணவர்கள் கணினிப் பயிற்சி பெற வருவதால் இந்த ஏற்பாடு. நூலகர் திருமதி விஜயா பாராட்டுக்குரியவர். நூலக உதவியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அருகிலுள்ள வடுகபட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களும் நூல் நிலையத்தைப் பயன்படுத்த ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

திரு சோமசுந்தரம் உதவியால் பெண்களுக்கான எம்ராய்டிரி பயிற்சி, மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி என நூலகப்பணி சமுதாயப்பணியாக வளர்கிறது. அடுத்த மாதங்களில் இணையப் பயிலரங்கு பாண்டிச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் மூலம் நடக்கவிருப்பதாகத் தொலைபேசியில் சோமசுந்தரம் அவர்கள் பேசியபோது கூறினார்கள்.

விழாவில் முனைவர் வள்ளி சிறப்புரை ஆற்றினார்கள்.எனது உரையில் சோமலெ அவர்களின் நூல்களைப் பற்றியும் நூலகம், கற்றல், கணினி பற்றியும் குழுமங்கள், தளங்கள் பற்றியும் குறிப்பிட்டேன். நூலகத்தைப் போற்றி திரு சோமசுந்தரத்தின் அருமையான செயல்பாட்டிற்குப் பாராட்டினேன். அமெரிக்காவாழ் மருத்துவர் பில்.வி அறக்கட்டளை திரு வெங்கடாஜலம், நாச்சியாபுரம் பள்ளிச் செயலரும் திருப்பணியாளருமான திரு வயி.ச. இராமனாதன், தலைமைஆசிரியை சாந்தி, வாசகர் வட்டத்தினர், ஊர்ப்பெரியவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். எம்ராய்டிரி பயிற்சிப் பெண்களும், மாணவ மாணவியரும், ஊராரும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பயண நூல் இலக்கியத்தின் முன்னோடியின் புகழையும் பிறந்த ஊருக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் பண்பையும் நூலகத்துடன் இணைந்த சமுதாயப் பணியையும் போற்றுகிறேன். அவை மனம் கவர்ந்ததால் நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *