Home பல்வேறு மண்ணின் குரல்: மார்ச் 2014: மலையடிப்பட்டி குடைவரை கோயில்

மண்ணின் குரல்: மார்ச் 2014: மலையடிப்பட்டி குடைவரை கோயில்

by admin
1 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
குடைவரைக் கோயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் காணக் கிடைப்பவை. இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலை காட்டும் ஒரு விழியப் பதிவே!
Inline image 1
திருச்சியிலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக்கோடையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடைவரைக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஒன்று சிவபெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப ஸ்வாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த  தந்தி வர்மன் எனும்  பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது. இதே தந்தி வர்மனால் அமைக்கப்பட்ட ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை ஒரு தனி விழியப் பதிவில் முன்னர் நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவீர்கள்.
இக்கோயிலின் உள் அமைப்பு புதுக்கோட்டையில் இருக்கும் திருமயம் ஆலயத்தை வடிவத்தில் ஒத்திருக்கின்றது. தெளிவாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை   செதுக்கபப்ட்டிருக்கின்றது. மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கின்றது.
Inline image 2
இக்கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டு கிபி.960ம் ஆண்டைச் சேர்ந்தது. இது சோழ மன்னன் ராஜ கேசரி சுந்தரச் சோழனின் கால கல்வெட்டு.
இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
Inline image 3
கிபி. 7க்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் மிக விரிவாக பரவி செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுகின்றது. எண் 134, 135 http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp
இக்கோயிலைப் பற்றிய மிக விரிவான கட்டுரை ஒன்று வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ளது http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658 !
வலைப்பூவில் காண: http://video-thf.blogspot.de/2014/03/blog-post_27.html
யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=lbwAvYsuIIU
பதிவு செய்யப்பட்ட நாள்: 03.03.2013
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like

1 comment

Innamburan S.Soundararajan March 28, 2014 - 2:50 pm

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

Reply

Leave a Comment