Home பல்வேறு சிதறிக் கிடக்கும் கல்வெட்டுகளுக்கு மத்தியில் சிவபெருமான்

சிதறிக் கிடக்கும் கல்வெட்டுகளுக்கு மத்தியில் சிவபெருமான்

by admin
0 comment
சென்னை- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் மறைமலை நகரை அடுத்துக் கிழக்கே செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் கரும்பூர் அமைந்துள்ளது. பசுமையும் செழிப்பும் நிறைந்த இந்த ஊரின் வடகிழக்கு மூலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலின் இன்றைய நிலை கவலைக்குரியது. கோயிலின் கட்டடப் பகுதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் சதுர வடிவமான ஆவுடையார். தொன்மையான சிவலிங்கத் திருமேனி. கருவறையில் அம்மன், சூரியன் ஆகிய வடிவங்கள் உரிய பீடமில்லாமல் வழிபாடு இல்லாமல் உள்ளன. கோயிலின் எதிரே நந்தி பகவான் அமைதியாக அமர்ந்திருக்கிறார். வடக்குப் பகுதியில் சண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார்.
கோயிலின் அதிட்டானப் பகுதி கல்லால் கட்டப்பட்டும் மேற்பகுதி செங்கற்களால் ஆனதையும் ஊகிக்க முடிகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை 1934-35-ல் மத்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் படியெடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது கரும்பூர் என்றழைக்கப்படும் ஊர் முன்பு ‘கருமூர்’ என்று அழைக்கப்பட்டது. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் பிற்காலச் சோழர்களும் இக்கோயிலில் சிறப்பான வழிபாட்டிற்காகவும் விளக்கு எரிப்பதற்காகவும் தானம் அளித்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயிலில் பரிவார ஆலயங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான வழிபாடுகள் நடந்துள்ளதாக செய்திகள் உள்ளன. இன்று கோயிலைச் சுற்றி கல்வெட்டுகள் சிதறிக் கிடக்கின்றன.
கோயிலுக்குச் சற்று கிழக்கே வயல்வெளியில் சற்று மேடான பகுதியில் துர்க்கை சிற்பம் போன்ற வடிவத்தில் ஒரு சிற்பம் இருந்துள்ளது. அவ்வடிவம் ஜேஷ்டா தேவியின் வடிவத்தில் உள்ளது. வளமையின் வடிவமாக வணங்கப்படும் உருவம் ஜேஷ்டா தேவி. இச்சிற்ப வடிவம் பல்லவர் கலைப் பாணியுடன் விளங்குவதால் கரும்பூர் திருக்கோயில் மிகத் தொன்மையானதாக இருக்கவேண்டும்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக விளங்கும் கரும்பூர் கோயிலை புனர்நிர்மாணம் செய்து வழிபாடு செய்ய இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
நன்றி. தி ஹிந்து

You may also like

Leave a Comment