மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தமிழ் மரபு கண்காட்சி

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
​இளம் குழந்தைகளுக்கான கல்வி என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்து ஒப்புவித்துத் தேர்வுக்கு தயார் செய்யும் பழக்கத்தை மட்டும் வளர்ப்பதால் ஒரு குழந்தைக்கு முழுமையான கல்வி வளர்ச்சி ​ஏற்பட்டு விடாது. குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சி என்பது பாட புத்தகங்களையும் கடந்து அன்றாட வாழ்வியல் விசயங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். சுற்றுச் சூழலில் பார்க்கும், கேட்கும் ,அனுபவிக்கும் விசயங்களை ஒதுக்கி விட்டுப் பாட நூல்கள் மட்டுமே அறிவைத் தரும் என நினைப்பது போலியான கனவு மட்டுமே. 

இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் ஆர்வம் அறிந்து அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம். பெற்றோருக்கு மட்டும் தான் இந்தக் கடமை உள்ளதா என்பதல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தைகளின் சுய வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றலாம். பள்ளிக்கூட பாடத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்கும் வகையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளைத் திட்டமிடலாம். 

அந்த வகையில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு நாள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம். 

இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் தாமே முயற்சித்து மிகத் திறமையாக இந்தக் கண்காட்சி முழுமையையும் ஆசிரியர்களின் உதவியோடு செய்திருந்தனர். 
கண்காட்சியில் ஏறக்குறை 500 க்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரவர் இல்லங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், உழவுக் கருவிகள், ஓலைச்சுவடிகள், பண்டைய தமிழர் விளையாட்டுப் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள், என வெவ்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தவிர்த்து மாணவர்களே கிராமிய உடையலங்காரங்களுடன் வந்து வயல்களிலும் இல்லங்களிலும் பணி புரிவதை நாடகக்காட்சிகளாக நடித்துக் காட்டினர். 

தமிழர் வாழ்வில் சிறிது சிறிதாக மறைந்து வரும் கிராமிய நடனங்களையும் மாணவர்கள் பாடியும் ஆடியும் காட்டி, கலைகளில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக 2 காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி பயணமும் இடம்பெற்றிருந்தது. 

கிராமத்து மண் வாசனையை வெளிப்படுத்தும் உணவுப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெறத் தவறவில்லை. பலகாரங்களில் இத்தனை வகைகளா என வந்தோரை வியக்க வைத்தன மாணவர்களின் இந்தப் பாரம்பரிய உணவுக் கண்காட்சி. 

மாணவர்கள் கல்வி கற்பதோடு பொது விசயங்களிலும் ஈடுபாடும் ஆர்வமும் காட்ட வேண்டும் என்று தன்முனைப்போடு செயல்படும் இந்த அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருமதி.புனிதாவும் அவரது துணைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைப் பகுதி பொறுப்பாளரும், மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியருமான முனைவர் மலர்விழி மங்கை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுக்கள். 

இந்த நிகழ்வில் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினேன். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடன் ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது . 

அழகுமலர் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தாளாளர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_10.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=hHdrYldPl3I&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *