Home Video மண்ணின் குரல்: ஜூலை 2017: திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

மண்ணின் குரல்: ஜூலை 2017: திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

by admin
1 comment
வணக்கம்.


பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்து அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் கட்டிய கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது. 
ராஜராஜ சோழன் இளவரசராக நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான். 
ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு. 
பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர். இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன. 
ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. 
நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான். 
இந்தப்பதிவில் 
  • கோயிலில் உள்ள வட்டெழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள்.. 
  • ராஜராஜ பாண்டியமண்டலம் என ராஜராஜன் தான் வெற்றி கொண்ட பகுதிக்குப் பெயர் சூட்டி பாண்டி நாட்டு மக்கள் நன்கறிந்த வட்டெழுத்திலேயே தனது கோயிலின் கல்வெட்டுக்களை அமைந்த விபரங்கள், அதன் காரணம் 
  • அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து அவர்கள் அந்த நிலத்தினை வரிகளுடனோ அல்லது வரிகளே இல்லாமல் அதனை அனுபவிக்கலாம் என்ற வகையில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் 
  • ஒரே காலகட்டத்தில் இரண்டு எழுத்துருக்கள் மக்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான காரணம் 
  • வட்டெழுத்து கல்வெட்டுக்களைத் தமிழ் எழுத்தில் படியெடுத்து சிதிலமடைந்த கோயிலின் தகவலை புதுப்பித்து தமிழ் கல்வெட்டுக்களைச் செதுக்கிய செய்தி 
  • வட்டெழுத்தின் தொடர்ச்சியாக மலையாள லிபியின் பரிணாம வளர்ச்சி 
  • சிற்பங்கள் உருவாக்கப்படும் அறிவியல் 
  • சோழவந்தான் என்ற ஊரின் பெயர்க்காரணம் 
.. 
இப்படிப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன. 
ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார்.. 
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர்..இந்தியா முழுதும் கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராகிய ஓவியர் சந்துரு அவர்களும், தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்களும், பாண்டிய நாட்டில் ராஜராஜன் அமைத்த இக்கோயிலைப் பற்றிய பல செய்திகளை இப்பதிவில் வழங்குகின்றனர். 
 
 
விழியப் பதிவைக் காண:  ​  http://video-thf.blogspot.de/2017/07/blog-post_15.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=ca7zEZHzYcs&feature=youtu.be
இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய  நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர். கருணாகரன், சகோதரர் விஜய், நெல்லை மாவட்ட அரசு தாசில்தார். திரு.கௌதம சன்னா ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

1 comment

Mathu S July 18, 2017 - 2:22 pm

அருமையான அறிமுகம்

Reply

Leave a Reply to Mathu S Cancel Reply