மண்ணின் குரல்: ஜனவரி 2018: பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்

வணக்கம்
காகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன.  பழையது உடைந்து சேதமடையும் போது  ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக  படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள்  அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும்   தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ.  அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.
ஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து  தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
தமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள்  எனலாம். பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில்  (Bibliothèque Nationale de France) உள்ளவை குறிப்பிடத்தக்கவை.
2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள்  மின்னாக்கம் செய்து பதியப்பட்டன. 
பிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார்.  பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி  தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது.  இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது. 
இப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.
விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2018/01/blog-post_28.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=sXz6Tspqshc&feature=youtu.be

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *