Home Video மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்

மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்

by admin
0 comment
வணக்கம்
தமிழகத்தில் சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில்  சமண மலை குறிப்பிடத்தக்க ஒரு பகுதி.
பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்கள் இருக்கும் பகுதியின் அடிவாரத்தில்  நாட்டார் வழிபாட்டுக்கென்று ஐயனார்  கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பாண்டியராஜன், உக்கிர பாண்டியன், முனியாண்டி சாமி, சோணை சாமி, முத்துக்கருப்பண்ண சாமி, பேச்சியம்மன்,  இருளாயியம்மன் போன்ற மக்கள் வழிபாட்டு தெய்வங்கள் வைக்கப்பட்டு இக்கோயிலில்  வழிபாடுகள் நடக்கின்றன.   வரிசை வரிசையாக கோயிலைச் சுற்றிலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
பேச்சிப்பள்ளம்  சிற்றூரில் தாமரைக் குளத்திற்கு மேலே ஒரு இயற்கை சுனையை ஒட்டியவாறு கிழக்குப் பார்த்த வகையில் பாறைமேல் சமணச் சிற்பங்கள் வரிசையாக வெட்டப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனைச் செதுக்கக் காரணமானவர்களின் பெயர்கள் வட்டெழுத்துத் தமிழில் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி ஆகிய தீர்த்தங்கரர்களின் உருவங்கள் உள்ளன. பாகுபலி தன் சகோதரிகள் பிராமி சுந்தரி இருவருடன் நிற்கும் சிற்பம் உள்ளது.
கி.பி. 9ம் நூற்றாண்டில்  தமிழ் நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள சிதரால்  தொடங்கி கழுகு மலை தவிர ஏனைய எல்லாச் சமணக் குன்றுகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களை உருவாக்கக் காரணமாயிருந்தவர் அச்சணந்தி முனிவர்.
பேச்சிப்பள்ளம் பார்சுவநாதர் சிற்பத்தின் கீழ் அச்சிற்பத்தை உருவாக்கியவர்   அச்சணந்தி முனிவரின் தாயார் குணமதி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சொல்லும் பாடம்
1. ஸ்ரீ அச்சணந்தி
2. தாயார் குணமதி
3. யார் செய்வித்
4. ததிருமேனி ஸ்ரீ
அடுத்த கல்வெட்டு இங்கு செயல்பட்டு வந்த சமணப்பள்ளியின் தலைவர் குணசேனதேவர் என்பதைக் காட்டுகின்றது.
இக்கல்வெட்டு சொல்லும் பாடம்
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி உடையகு
2.  ணசேனதேவர் சட்டன் அந்தலையான்
3. மாசேனன் மருமகன் ஆச்சஞ் சிரிபாலனை
4. ச் சார்த்தி செவித்த திருமேனி
இதற்கு அடுத்த கல்வெட்டு அவரது மாணாக்கன் அரையங்காவிதி, காவிதி எனும் பட்டம் பெற்றவர் என்ற செய்தியைச் சொல்கிற்து.   இக்கல்வெட்டு சொல்லும் பாடம் 
1. ஸ்வஸ்தி ஸ்ரீஇப்ப
2. ள்ளி உடைய குண
3. சேனதேவர் சட்டன்
4. அரையங்காவிதி த
5. ங்கணம்பியைச் சா
6. ர்த்திச் செய்விச் ச
7. திருமேனி
 
தொடர்ச்சியாக உள்ள கல்வெட்டின் பாடம்
ஸ்ரீ வெண்பு நாட்டு
திருக்குறண்டி
பாதமூலத்தான்
அமித்தின் மரை
கள்கனகன் திசெ
விச்ச திருமேனி
அடுத்து
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி
2. உடைய குண சேனதே
3. வர் சட்டன் சிங்கடை
4. ப்புறத்து கண்டன் பொற்
5. பட்டன் செய்வித்த
6. திருமேனி ஸ்ரீ
அடுத்து வரும் கல்வெட்சு
1. ஸ்வஸ்திஸ்ரீ  மதுரைக்காட்டா
2. ம் பள்ளி அரிஷ்ட நேமிஅ
3. டிகள் செய்வித்த
4.  திருமேனி
 
 
மற்றுமொரு கல்வெட்டு
1.ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூரூடை
2. யான் வேஸின் சடையனைச் சார்த்தி
3. இவன் மணவாட்டி வெண்புணாட்டு நால்
4. கூர் சடைய ….
 
அடுத்த கல்வெட்டு
 
இப்பள்ளி உடைய குணசேன தேவர் மாணாக்கா…
சர் சந்திரப்பிரப, வித்த….
 
சில கல்வெட்டுக்கள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.
பேச்சிப்பள்ளத்திற்கு மேல் மலையில் இருபது அடி உயரத்தில் கி.பி.10 வாக்கில் சமணப்பள்ளியான கட்டுமானக் கோயில் ஒன்று இருந்தமையை அதன் அடித்தளப்பகுதி உறுதி செய்கிறது. அங்கு காணப்படும் கல்வெட்டு இப்பள்ளியை மாதேவிப்பெரும்பள்ளி என அடையாளப்படுத்துகின்றது.
1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு
இருபத்தேழிதனெதிராண்டினெ திரான்
2. டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து
மாதேவிப் பெரும்பள்ளிபள்ளிச்
3. சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளியங்குன்றூர் நீர்நில மிருவே
4. லியாலும் கீழ்மாந்தரனமான வயும் அதன் துடவரும் மேற்றி நில
5. மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீ
6. ழ் சிறிபால வயக்கலு மிதன் தென்வய…
 இப்பள்ளியை கி.பி.860லிருந்து 905 வரை ஆட்சி செய்த பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் கட்டியுள்ளான். இங்கிருந்த கோயில் உடைந்து விட்ட நிலையில் இங்கு கிடைத்த இயக்கர் இருவரது உருவச் சிலைகள் கீழ் கோயிலில் வைக்கப்பட்டு ஐயனார் சாமியாக வழிபடப்படுகின்றது. மலைமேல் உள்ள பகுதியில் தமிழும் கன்னடமும் கலந்த வகையில்  ஒரு கல்வெட்டும் காணப்படுகின்றது.
 
1. ஆரியதேவரு
2. ஆரிய தேவர்
3. மூலசங்க பெளகுள தவள
4. சந்திர தேவரு நமிதேவரு சூர்ய
5. பிரதாப ஆஜித சேனதேவ(ரு) மா
6. …….(கோ) தானதேவரு நாக
7.தர்ம தேவரு மட.

இதில் சமணத்துறவிகளின் பெயர்கள் காணப்படுகின்றன.

சமண சமயத்தின் மூலச்சங்கமாக செயல்பட்ட சரவனபெளகுளம் என்னும் பகுதியிலிருந்து வந்தோரது பெயர்களாக இவை இருக்கலாம்.
.

பேச்சிப்பள்ளம் கி.பி 9, 10ம் நூற்றாண்டு வாக்கில் மதுரையில் சமண சமயம் செழிப்புற்று இருந்தமைக்கு நல்லதொரு  சான்றாகும்.

குறிப்பு – மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_19.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=4k8hFIbjhi0&feature=youtu.be

 

 

 

 

 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
 

You may also like

Leave a Comment