Home E-Books THF Announcement: E-books update: 5/3/2018 *மத்தவிலாச அங்கதம் – வெளியீடு

THF Announcement: E-books update: 5/3/2018 *மத்தவிலாச அங்கதம் – வெளியீடு

by admin
0 comment

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …

இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்: மத்தவிலாச அங்கதம் (முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னன் எழுதிய அங்கத நாடகம்)
மூல நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது.
பதிப்பாசிரியர்: மைக்கேல் லாக்வுட்
தமிழாக்கம்: இ. ஜாண் ஆசீர்வாதம்
பதிப்பு: கிறிஸ்துவ இலக்கிய சங்கம்
ஆண்டு: 1981

நூல் குறிப்பு:
நமக்குக் கிடைக்கும் பழைய நாடகங்களுள் ஒன்று “மத்தவிலாச அங்கதம்” (மத்தவிலாச பிரகசனம்). இதைப் படைத்தவர் பல்லவ அரசின் மன்னர்களில் ஒருவரான மகேந்திர வர்மர். இந்த நூல் கி பி 640 எழுதப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எனினும் அவர் எத்தனை இலக்கியங்களைப் படைத்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், இரண்டு நூல்களை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவை ‘மத்தவிலாச பிரகசனம்’ மற்றும் ‘பகவத்தஜ்ஜூக அங்கதம்’ ஆகியன.

இந்த இரண்டு நாடகங்களும் சமஸ்கிருத மரபினை பின்பற்றி எழுதப்பட்டவை என்பதை தமது பகவதஜ்ஜூகத்தில் தெளிவு படுத்தியுள்ளார் மகேந்திர வர்ம பல்லவர். சமஸ்கிருதத்தில் பத்து வகையான நாடகங்கள் உள்ளன, அவை: வார (வேண்டுதல்), இகம்ரிக (ஒருதலைக் காதல்), திம (முற்றுகை), சமவக்கார (தொடர்பற்றுத் தொடங்கி ஒரு முடிவை அடைதல்), வியாயோக (போர்பூசல்), பாண (ஒரு நபர் காதல், வீர நாடகம்), சல்லாப (தொடர்பற்ற உரையாடல்), வீதி (ஒருவர் அல்லது இருவர் காதல்), உத்சிரிஷ்டிகாங்க (துக்க), பிரகசன (அங்கத அல்லது நையாண்டி) என்ற வகையில் உள்ள நாடக பாணிகளில் அங்கத வகையில்தான் மன்னர் மகேந்திரர் தமது நாடகங்களை எழுதியுள்ளார். மன்னரது இரண்டு நாடகங்களும் பௌத்தத்தைக் கடுமையாகக் கேலி செய்கின்றன. பௌத்தத்தை அழித்தவருக்கு அதை மக்கள் தளத்தில் அழிக்க வேண்டும் என்றால் அதற்கு ஊடகமும் ஓர் எளிய வழிதானே! அதில் ஒன்றாக நிகழ்த்துக் கலையை மன்னர் தேர்ந்தெடுத்தார்.

மகேந்திரப்பல்லவர் எழுதிய மத்தவிலாச அங்கதம். மத்தவிலாச நாடகத்தின் வசனத்துள் இருபத்துமூன்று பாடல்கள் இணைந்துள்ளன. மத்தவிலாச நாடகத்தின் பின்னணியாக அமைந்திருப்பது பல்லவ அரசின் தலைநகரான காஞ்சிபுரம். சைவர்களில் மற்ற பிரிவினரான கபாலி, பாசுபதர் மற்றும் பவுத்தர் ஆகியோர் நாடகத்தில் இடம் பெறுகிறார்கள். கபாலவோட்டைத் தானவோடாகப் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் கபாலிகள். சத்தியசோமன் என்னும் கபாலதபசியும் அவனுடைய துணைவி தேவசோமாவும் குடிவெறியில் களியாட்டம் போடுவதைச் சுற்றி நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. தனது தானக் கபாலத்தை தொலைத்துவிட்டு, அந்தப்பழியை ஒரு புத்த துறவி மீது சுமத்துகிறான் சத்தியசோமன். இவர்களது சர்ச்சைக்கு மத்தியஸ்தராகிறார் ஒரு பாசுபதர். இறுதியில் ஒரு நாயிடமிருந்து கபாலவோட்டை மீட்கிறார்கள். ஏகாம்பரநாதர் கோயில் இந்நூலில் குறிக்கப்படுகிறது.

நாடகப்பாத்திரங்கள்: சூத்திரதாரி – நாடகக்கலைஞர், அவரது நடிகை மனைவி, சத்தியசோமா என்ற கபாலி, அவனது துணைவி தேவசோமா, நாகசேனன் என்ற புத்ததுறவி, பாப்ருகல்பன் என்ற பாசுபதன் மற்றும் ஒரு பைத்தியக்காரன்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 468

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு. கௌதம சன்னா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு. கௌதம சன்னா
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

குறிப்பு: மகேந்திரவர்மனின் மற்றொரு நாடக நூலான பகவதஜ்ஜூகமும்  திரு. சன்னா அவர்களால் மின்னூலாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் உள்ளது.

You may also like

Leave a Comment