Home E-Books THF Announcement: E-books update: 8/3/2018 *மீனாம்பாள் சிவராஜ் உரை – உலக மகளிர்தின சிறப்பு வெளியீடு

THF Announcement: E-books update: 8/3/2018 *மீனாம்பாள் சிவராஜ் உரை – உலக மகளிர்தின சிறப்பு வெளியீடு

by admin
0 comment

உலக மகளிர்தின சிறப்பு வெளியீடு: அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஆற்றிய தலைமையுரை

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …

இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூலாக வெளிவந்த, 31-1-1937 அன்று அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களால் திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் மகா நாட்டில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரை மின்னூலாக, இன்றைய உலக மகளிர்தினத்தையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளையால் சிறப்பு வெளியீடாக வெளியிடப்படுகிறது.

 

 

நூல்: திருநெல்வேலி ஜில்லா – ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம்
ஆண்டு: 31.1.1937

நூல் குறிப்பு:

அன்னை மீனாம்பாள் சிவராஜ்:
(26 டிசம்பர், 1904 – 30 நவம்பர், 1992)


தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று 21.04.1938 அன்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார். “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்று முழக்கமிட்ட முன்னணி பெண்ணியத் தலைவர், ஈ.வெ.ரா. அவர்களை நாம் “பெரியார்” என அழைக்கக் காரணமானவர், அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்து அம்பேத்கரால் எனது அன்புச் சகோதரியே என்று அழைக்கப்பட்டவர், தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்க சமூகப்பணிகளையாற்றிய மீனாம்பாள் அவர்கள் புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.

பர்மாவிற்குக் குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின், முதன் முதலாகக் கப்பலோட்டிய மதுரைப் பிள்ளை என்றழைக்கப்பட்ட செல்வந்தரின் வழித்தோன்றலாக பர்மாவில் பிறந்து, வளர்ந்து தனது உயர்கல்விக்காக இந்தியா வந்தவர். நீதிக்கட்சியில் இணைந்து கணவருடன் பணியாற்றியவர். பின்னர் பெரியார் மீது பேரன்பு கொண்டவராகச் சுயமரியாதை இயக்கத்திலும் தொடர்ந்தார். சாதி எதிர்ப்பு ஆதரவாளரான இவர் சைமன் கமிஷனை ஆதரித்து உரையாற்றி 1928 ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் துவக்கினார்.

மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மகா நாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அன்று அவர் வழங்கிய உரையின் சுருக்கம் இக்கட்டுரை. இந்துமதம் கடைப்பிடித்த வர்ணாசிரம தர்மமே நாட்டு மக்களின் கல்வி மற்றும் ஒற்றுமை சீர்குலைவு, மகளிர் வாழ்ந்த அடிமைநிலை வாழ்வு யாவற்றுக்கும் காரணம் என இன்று நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மீனாம்பாள் தனது உரையில் நாட்டின் கல்வி, ஒற்றுமை, சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் முன்னேற்றம், நீதிக் கட்சி செய்த மனிதநேய நன்மைகள் ஆகியவற்றைக் குறித்து தமது கருத்துகளை இந்தத் தலைமையுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 469

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு. கௌதம சன்னா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு. கௌதம சன்னா
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

_______________
மேலும் தகவலுக்கு:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html

You may also like

Leave a Comment