Home Video மண்ணின் குரல்: ஜூன் 2018:கேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்

மண்ணின் குரல்: ஜூன் 2018:கேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்

by admin
0 comment

இன்று மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று கேமரன் மலைப்பகுதி. மலேசியாவின் புகழ்மிக்க சுற்றுலா தளமாக இன்று உலகளாவிய புகழ்பெற்ற மலைப்பகுதி இது.

தமிழகத்திலிருந்து மலாயா தீபகற்பத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மலேசிய தீபகற்பத்தின் பல பகுதிகளில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். கடந்த 300 ஆண்டுகளுக்கான தமிழர்களின் புலம்பெயர்வு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் மலாயாவிற்குப் புலம்பெயர்க காரணமாக அமைந்தது. பிரித்தானிய காலணித்துவ அரசினால் வேலைக்காக அழைத்து வரப்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களில் பலர் மலேசியக் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் காடுகளை அழித்து அப்பகுதிகளை விளை நிலப்பகுதியாக மாற்றியமைத்ததில் பெரும் பங்காற்றியிருப்பதை மலேசிய வரலாற்றிலிருந்து நாம் தவிர்க்க முடியாது.

கேமரன் மலைப்பகுதி பஹாங், பேராக் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தது. புவியியலாளர் வில்லியம் கேமரன் இப்பகுதியை அளந்து ரிங்லட், தானா ராத்தா, ஊலூ தெலோன் என மூன்று பகுதிகளாகப் பிரித்து பெயரிட்டார். அவரது பெயரே பின்னர் இப்பகுதி முழுமைக்குமான பெயராக, கேமரன் மலைப்பகுதி என வழங்கப்படுகின்றது.

ஆங்கிலேய காலணித்துவ அரசின் அதிகாரிகள் ஓய்வெடுக்க குளிர்பிரதேசம் தோதாக இருக்கும் என்ற திட்டத்தோடு இம்மலைப்பகுதி தயார் செய்யப்பட்டது. 1920ம் ஆண்டு வர்த்தகரான திரு.ரஸ்ஸல், இப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டு பணிகளைத் தொடக்கினார். ஆங்கிலேய காலணித்துவ அரசு ஏற்கனவே தென்னிந்திய தொழிலாளர்களைக் கொண்டு இந்தியாவிலும் இலங்கையிலும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய அனுபவம் இருந்ததால் இப்பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சீனர்கள் பலர் இப்பகுதிக்கு விவசாயம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டனர். பின்னர் தமிழகத்தின் பல பகுதிகலிலிருந்து குறிப்பாக நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து உடல் உழைப்பு தொழிலாளர்களாக இங்கு வேலைக்காகப் தமிழ் மக்கள் வந்தனர்.

அடர்ந்த காடுகளை அழித்தனர்.
தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர்.

ரஸ்ஸல் ஆரம்பித்த போ தேயிலை நிறுவனம் 1920ம் ஆண்டு முதல் இங்கு செயல்படுகின்றது. 8000 ஏக்கர் நிலப்பரப்பில் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய தேயிலைத் தோட்டமாக இது அமைந்திருக்கின்றது. தோட்டத்திலேயே இத்தொழிலாளர்கள் தங்குவதற்கு சிறிய வீடுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் கல்வி கற்க அன்று தமிழ்ப்பளிகள் உருவாக்கப்பட்டன. கோயில்களும் எழுந்தன.

1980களுக்குப் பிறகு கேமரன் மலைப்பகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதர வளம் பெருகியமையாலும் உயர் கல்வி பெற்று இவர்களது சந்ததியினர் வளமான வாழ்க்கையைத் தொடர்ந்தமையினாலும் தமிழர்கள் பலர் சொந்தமாக நிலங்களை வாங்கி காய்கறித்தோட்டங்களை உருவாக்கி இன்று நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக, வர்த்தகத்துறையில் சிறப்புடன் செயல்படுகின்றனர்.

கேமரன் மலையில் மலேசியாவின் பூர்வக்குடிகள் காடுகளில் இன்றும் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் இன்று காடுகளிலிருந்து வெளியே குடியேறி சிறு சிறு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பூர்வக்குடிகளின் பிள்ளைகள் சிலர் தமிழ் மக்களோடு சேர்ந்து தமிழ்ப்பள்ளிகளிலும் பயில்கின்றனர்.

கேமரன் மலை பூர்வக்குடிகளின் சமூகவியல் பண்பாட்டுக்கூறுகளும் மொழியும் ஆராய்ச்சிக் குறியது. இன்று கேமரன் மலைப்பகுதியில் சீனர்கள், தமிழர்கள், மலாய்க்காரர்கள், பூர்வ குடிகள் எல்லோரும் இணைந்து வாழ்கின்றனர்.

இந்தப் பதிவு 1920ம் ஆண்டு ஆர்ம்பிக்கப்பட்ட போ தேயிலை தொழிற்சாலை, கேமரன் மலை தமிழ் மக்கள் பற்றிய பதிவாக அமைகின்றது.

இப்பதிவில் தகவல்களை வழங்கியிருக்கும் திரு.கணேசன், அவரது துணைவியார், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தலைவர் திரு.ப.கு.சண்முகம் பேட்டியில் உதவிய நண்பர்கள் கௌதம சன்னா, திரு.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எமது நன்றி.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/06/blog-post_10.html
யூடியூபில் காண: https://youtu.be/ggDkxd17dfA

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment