வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று கி.பி 19ம் நூற்றாண்டின் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் காலணித்துவ அரசு உருவாக்கி சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய பணியாளர்களுக்கானப் பதிவு செய்வதற்கான சட்ட வரையறைகளை விவரிக்கும் கையேடு ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது.
கையேடு: Servants Pocket Register-Original (Ceylon) – வீட்டு வேலைக்காரர்களை றெஜிஸ்தர் பதிவுசெய்வதற்கான வரைவுபாடு பண்ணுவதற் கேற்படுத்தப்பட்ட கட்டளை நிருபித்தல்
Under Ordinance No 28 of 1871
நூலைப் பற்றி
இது இணையத்தின் வழி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறிய நூல். இது 1870களில் இலங்கையில் வீட்டு வேலைக்காக பதிந்து கொண்டு பணிபுரிய வந்த தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு. இந்த நூல் ஆங்கிலம். சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது. முதலில் ஆங்கிலத்தில், பின் அதே தகவல்கள் சிங்களத்திலும் அதனையடுத்து தமிழிலும் வழங்கப்பட்டுள்ளன. இறுதிப்பகுதியில் பணியாளர்கள் வெவ்வேறு வீடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பணிபுரிவதனைப் பதிந்து வைக்கும் வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கையேடு வீட்டு வேலைக்காகப் பணிபுரிய வருகின்ற மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்குகின்றது. பணியில் இருக்கும் ஒருவர் எப்போதும் இந்தக் கையேட்டை தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் உறுதி செய்கின்றது. மாறாக இதனை ஒரு பணியாளர் ஏதாவதொரு காரணத்திற்காக தொலைத்து விட்டால் அபராதத் தொகை அன்றைய சிலோன் பணம் ரூபாய் 200க்குக் குறையாமல் செலுத்த வேண்டும் என்றும் இந்தக் கையேடு குறிப்பிடுகின்றது.
இந்தக் கையேட்டில்
- இப்போது இருக்கும் பணியாளர்கள்
- பொதுவான கட்டளைச்சட்டம்
- அபராதம்
- எசமானர்களைப்பற்றி
- வேலைக்காரர்களைப்பற்றி
- மறுபேர்களைக் குறித்து
- செலவுகள்
எனப் பிரிவுகளாகப் பிரித்து விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களின் வீட்டுப்பணியாளர் தொழில் தொடர்பான சட்டங்களை விவரிக்கும் ஆவணங்களில் ஒன்றாக இதனைக் கருதலாம்.
நன்றி-
சேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டு ஆவணம்)
மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி , ஜெர்மனி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 475