திருப்புடைமருதூர் ஸ்ரீநாறும்பூநாதர் சித்திரக்கூடம்

திருநெல்வேலியின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள திருப்புடைமருதூர் என்ற சிற்றூரில் அமைந்திருக்கும் சுவாமி நாறும்பூ நாதர் திருக்கோயில் கோபுர சித்திரகூடத்தையும் அதில் இடம்பெறும் சில காட்சிகள் வெளிப்படுத்தும் செய்திகளுக்கான விளக்கங்களையும் கொண்டு வருகிறது இந்தப் பதிவு.

திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் ஏறக்குறை 26கி.மீ தூரத்தில் வீரவநல்லூர் என்ற ஊர் வருகின்றது. அவ்வூருக்கருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் திருப்புடைமருதூர்.
கடனா நதி என்ற ஆறு தாமிரபரணியில் சேரும் இடத்தில் இந்த திருப்புடைமருதூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள நாறும்பூசுவாமி கோயில் கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள சித்திரக்கூடம் தமிழக ஓவியக் கலைக்கும் மரச்சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்டதாக அறியப்படும் இக்கோயிலில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன.
ஏறக்குறைய 10,ம் நூற்றாண்டு தொடங்கி 19 நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவை. – கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை விவரிக்கும் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இவை அமைகின்றன. அவற்றுள் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அடங்கும்.

கி.பி.9ம் நூற்றாண்டு தொடங்கி அறியப்படும் இக்கோயில் சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் என பல மன்னர்களின் ஆட்சி காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து இக்கோயில் சிறப்புடன் திகழ்கின்றது.

இக்கோயிலின் வாயிற்புரத்தில் 5 நிலைகளைக் கொண்ட கோபுரம் உள்ளது. இந்த ஐந்து நிலைகளிலும் ஏறிச்செல்ல படிகள் உள்ளன. ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவேலைப்ப்பாடுகளாகும்.

இச்சித்திரக் கூடத்தில் இடம்பெறும் சித்திரங்களுள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைச் சிற்பங்கள் ஓவியங்களாக உள்ளன; தென் தமிழக வரலாற்றில் இடம்பெறும் தாமிரபரணி போர் பற்றிய விரிவான காட்சிகள் ஒரு தளத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

இவை மட்டுமன்றி சிவபுராண கதைகள், விஷ்ணு புராணத்தில் வரும் சில கதைகள், திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற கதைகள், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராணக் கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.

இக்கோயிலின் சுவர்ச்சித்திரங்களை மிக ஆழமாக ஆராய்ந்து புகைப்படங்களுடன் ஒரு நூலாக வெளியிட்டவர் பேராசிரியர் சா.பாலுசாமி. இக்கோயிலின் 2ம் தளத்தில் அமைந்திருக்கும் தாமிரபரணிப் போரைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்ற போர் என்று குறிப்பிடுகின்றார்“.

தமிழக கோயில்களில் உள்ள சுவர்ச்சித்திரங்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் சிலரால் சிதைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

இத்தனைச் சிறப்பு வாய்ந்த இச்சுவர் சித்திரங்களின் மீது தங்கள் பெயரையும் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து இவற்றைச் சிதைப்பவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் அல்ல, மாறாக நமது தமிழகத்திலேயே வாழும் மக்கள் தான்.

நம் சூழலில் இன்று வரை புராதனச் சின்னங்களையும் கோயில் கலைகளையும் மதித்துப் போற்றி பாதுகாக்கும் சிந்தனை பொது மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது தான் உண்மை. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் உள்ள கடமை அல்ல. மாறாக நாம் அனைவருக்குமே இருக்கும் கடமை என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.

கோயில் என்பது பக்தர்கள் வந்து வரம் கேட்டு வேண்டிக் கொண்டு, வந்து வழிபட்டு விட்டு குப்பைகளைப் போட்டு விட்டுச் செல்லும் இடமல்ல. கோயில் என்பது கலைகளின் இருப்பிடம். கோயில்கள் பண்பாட்டுத் தளத்தின் மிக முக்கிய சான்றுகள். கோயிலையும் அவை கொண்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் சேதப்படுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதன் சிறப்பு குறையாமல் விட்டுச் செல்வதும் தமிழர் நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்!

இப்பதிவில் சுவர்ச்சித்திரங்களைப் பற்றிய விளக்கங்களை அளிக்கின்றார்சென்னை எழும்பூர் அரசு கவின்கலைக்கல்லூர்யின் முன்னாள் முதல்வரும், கவிஞர், சிற்பி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட திரு. ஓவியர் சந்ரு.

யூடியூபில் காண: https://youtu.be/oJ8H-IPJS14

 

இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டில் உதவிய முன்னாள் திருநெல்வேலி ஆட்சியர் முனைவர்.கருணாகரன், சகோதரர் தீக்கதிர் விஜய் ஆகியோருக்கு நமது நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *