சாம்ராட் அசோகர் கலிங்கப் போர் அளித்த மன உளைச்சளினால் வன்முறையிலிருந்து மீண்டு அகிம்சைக்குத் திரும்பினார். புத்தரின் போதனைகள் அவருக்கு வழிகாட்டியதாக அவர் கருதினார். எனவே மக்களையும் அமைதி வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் தனது பிள்ளைகளையும் பௌத்தம் ஏற்கச் செய்து, அவர்களின் மூலமாக பௌத்த நெறியைப் பல நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க முனைந்தார். அதன் காரணமாக தென்னிந்தியா முழுமையும் அவரது ஆட்சி ஆளுமையினால் பௌத்தம் பரவியது. அது மட்டுமன்றி தமிழகம் மற்றும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டு சேர்க்க தமது பிள்ளைகளான மகன் மகேந்திரன், மகள் சங்கமித்தை ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் போகின்ற போது புத்த கயாவிலிருந்து அரச மரத்தின் கன்று ஒன்றை கொண்டு போய் இலங்கையில் பதியமிடக் கொண்டு சென்றார்கள். தமிழகம் வழியாகக் கடல் மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தார்கள். அவர்கள் கி.மு. 3ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வந்திறங்கிய பகுதியாக யாழ் குடா நாட்டின் மாதகல் சம்பில்துறை பகுதி குறிப்பிடப்படுகிறது.
புத்த கயாவிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் துறைமுகம் வந்து அங்கிருந்து கப்பலில் இலங்கைக்கு சங்கமித்தையின் குழுவினர் வந்தனர் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் இச்செய்தி சொல்லும் வகையில் இவ்வழிப்பாதை சரியானதுதானா என்பதும் கேள்வியாகின்றது.
அசோகர் இந்திரப்பிரஸ்தம் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியிலிருந்து தமிழகத்தின் வேலூர் வரை ராஜபாட்டை என அழைக்கப்படும் ஒரு அரச நெடுஞ்சாலையை அமைத்தார். இச்சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். பயணிகள் ஓய்வெடுக்கும் சத்திரங்களைக் கட்டினார். இறுதியாக தமிழகத்தின் வேலூரில் வினையலங்கார விகார் என்ற பெயரில் ஒரு மடாலயத்தையும் அமைத்தார் என அறிகின்றோம். அனேகமாக இந்த ராஜபாட்டை வழியாக மகேந்திரனும் சங்கமித்தையும் தமிழகம் வந்து பின்னர் கடற்கரையோரப் பகுதிகளை வந்தடைந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கலாம். இதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
சங்கமித்தை பெண்களுக்கான பிக்குணிகள் சங்கத்தை இலங்கையில் தோற்றுவித்தார். சங்கமித்திரையின் பயணப் பாதை தொடர்பான ஆய்வுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் .அதே போல மணிமேகலை காப்பிய நாயகியான மணிமேகலையின் இலங்கை வருகையும், பின் ஏனைய பல தீவுகளுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அவர் அட்சயபாத்திரத்தினைக் கையிலேந்தி பௌத்த நெறியைப் பரப்ப மெற்கொண்ட பயணங்கள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வகையான ஆய்வுகள் தமிழகத்திலிருந்து பௌத்த நெறி ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கும் தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியமைக்கான ஆதாரங்களை வழங்கும்.
இன்றைய இலங்கை அரசியல் சூழலில் சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அடையாளம் காட்டப்படும் மாதகல் சம்பில்துறை சிங்களவர்கள் பகுதியாக அடையாளம் காட்டப்படுவதற்கான முயற்சிகள் தெரிகின்றன. இந்தச் சம்பில் துறை பகுதியில் ஐயனார் கோயில், கிருத்துவ தேவாலயம் மற்றும் வரைவர் கோயில்கள், சிவன் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் சிலவும் உள்ளன.
பௌத்த மதம் சிங்களவருக்கும், ஏனைய சைவ கிருத்துவ மத வழிபாடுகள் தமிழருக்கும் என இருக்கும் இன்றைய சமூக சிந்தனை நிலைப் போக்கு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்ட சூழலுக்குப் புறம்பானதே. பண்டைய இலங்கையில் பௌத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாக நீண்ட காலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சூழல் இருந்ததைப் புறந்தள்ளி விட முடியாது. ஆக, யாழ்ப்பாணத்தின் மாதகல் சம்பில்துறை பகுதி தமிழ்மக்கள் வாழ்விடப் பகுதி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
இன்று இப்பகுதி, பௌத்தமதம் சிங்களவருக்கான மதம் என்ற தட்டையான புரிதல், சிங்களவர், தமிழர் இருசாராருக்கும் உள்ளமையால், இரு சாராரும் குழப்பம் நீங்கி இப்பகுதியின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு உள்ள முக்கியத்தையும் காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகின்றது. மதத்தை மையப்படுத்திய தவறான புரிதல் இருப்பதால் இப்பகுதி சிங்களவர் பகுதி என அடையாளப்படுத்தப்படும் முயற்சி இன்று தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குச் சாட்சியாக இப்பகுதியில் இராணுவத்தினர் அதிகமாக நடமாடுவதையும் இப்பதிவுக்காகச் சென்றிருந்தபோது (அக்டோபர் 2018 இறுதி) நேரில் காண நேர்ந்தது.
வரலாற்றுப் பார்வையில் யாழ்ப்பாணத்தின் மாதகல்-சம்பில்துறை பகுதி தமிழர் வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற வேண்டிய ஒரு பகுதியே!
இப்பதிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் காணலாம்.
யூடியூபில் காண: https://youtu.be/IYqzUPjfizI
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]