இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்ச புராணத்தின் அடிப்படையில் காட்டு மிருகமான சிங்கத்திற்குப் பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயன். இவனே இலங்கையின் முதல் மன்னன் என இப்புராணம் கூறும். சிங்கபாகுவின் நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்கள் இந்தப் பல்கலக்கழகத்தில் பணியாற்றியவர். உலக அளவில் நாடகத்துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்களின் அனைத்து ஆவணங்களும், இந்தப் பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு அறையில் தனி முக்கியத்துவத்துடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் இந்த நூலகத்திற்கு உள்ள ஒரு சிறப்பு.
நூலகத்தின் அடித்தளத்தில் சுரங்கப் பகுதியில் ஒரு தனி அறை உள்ளது. இங்கு மிக அரிய சுவடிகளும் ஆவணங்களும் செப்பேடுகளும் பாதுகாக்கப்படுகின்றன. 5200 சுவடி நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள சுவடிகள் சிங்களம், தமிழ், சமஸ்கிருதம், தாய்லாந்தின் தாய் மொழி என பல மொழிகளில் அமைந்தவை.
பேராதனைப் பல்கலைக்கழ நூலகத்தில் இன்றைய எண்ணிக்கையின் படி ஏறக்குறைய 8 லட்சம் நூல்கள் உள்ளன. அவற்றுள் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழ் நூல்களும் அடங்கும். இலங்கையில் வெளியிடப்படுகின்ற நூலின் ஒரு பிரதி இந்த நூலகத்தின் சேகரத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென்பது ஒரு சட்டமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி : பேரா.முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]