Home Video மண்ணின் குரல்: ஜூலை 2019 -கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி

மண்ணின் குரல்: ஜூலை 2019 -கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி

by admin
0 comment
தமிழகத்தின் கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறை சாற்றும் நோக்கத்தில் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு ஆய்வாகளாகும்.
கொடுமணலில்  மேற்கொள்ளப்பட்ட முந்தைய கள ஆய்வுகளில் முதலில் பெருங்கற்கால பண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புலவர் இராசு அவர்களின் கள ஆய்வுகள் கொடுமணல் நாகரிகத்தின் தொண்மையை வெளிக்கொணர்ந்தன. அதனைத் தொடர்ந்து டாக்டர்.க.ராஜன்  இப்பகுதியில் பல கள ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதுவரை அங்கு 120க்கும் மேற்பட்ட தொல்லியல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பேராசிரியர் சுப்பராயுலு அவர்களுடன் இணைந்து கொடுமணலில் ஆய்வுகள் தொடரப்பட்டன. பின்னர் 1990க்குப் பின்னர்  பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.க.ராஜனின் தலைமையில் இங்கு தொல்லியல் அகழ்வாய்ப்பணிகள் தொடர்கின்றன.
  • இந்தக் கள ஆய்வுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்தியா முழுமைக்குமான அகழாய்வுப் பணிகளில், மிக அதிகமாகத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணிலில் தான் கிடைத்துள்ளன.
  • கரிமச் சோதனைகள் இப்பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் கி.மு 5ம் நூற்றாண்டு பழமையானவை என்பதை நிரூபிக்கின்றன.
  • பண்டைய வணிகப் பெருவழிகளைப் பற்றிய விரிவான பல சான்றுகள் இந்த ஆய்வுகளில் கிடைத்துள்ளன.
இப்படி மேலும்  பல சுவாரசியமான அகழ்வாய்வுச்செய்திகளை நம்மிடம் பகிர்கின்றார் தொல்லியல் அகழ்வாய்வு அறிஞர் டாக்டர்.க.ராஜன்.
தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் தமிழர் நாகரிகத்தின் தொண்மையைக் கீழடி அகழ்வாய்வுகளுக்கு முன்னராகவே வெளிப்படுத்திய பெருமை கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, அழகன்குளம், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் சான்று பகர்கின்றன. ஆயினும் கூட   இவ்வாய்வுச் செய்திகள் விரிவாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதும் ஒரு குறைபாடாகவே உள்ளது.
தமிழகத்தின் கொடுமணல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொல்லியல்  பகுதி.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment