
ஊவ மாகாணம் இலங்கையின் மலையகப்பகுதிக்குள் உள்ள பகுதி. இன்று 50 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1100, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி உரை நிகழ்த்தினார். மாணவர்களின் பல்வகைப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இதற்கு அடுத்து ஏறக்குறைய 800, 12 மற்றும் 13ம் வகுப்பு மாணவர்களுடன் தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றிய உரையாடல் தொடர்ந்தது. ஊவ மாகாண கல்வி அமைச்சர் திரு.செந்தில் தொண்டமான் மற்றும் ஊவ மாகாண கல்விப் பிரிவின் அதிகாரி திருமதி.கலையரசி ஆகியோர் இணைந்து உரையாற்றினர்.
இதனை அடுத்து ஊவ மாகாணத்தைச் சார்ந்த 11,12,13ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு டாக்டர்.க.சுபாஷிணி ஆவணப்படுத்துதல் பற்றிய தகவல்களை மையமாகக் கொணு உரை நிகழ்த்தினார். இதில் ஏறக்குறைய 500 ஆசிரியர்கள் பங்குபெற்றனர். இந்த நிகழ்ச்சியிலும் மாண்புமிகு அமைச்சர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
காலை 10:30 தொடக்கம் மதியம் 3:30 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏனைய சில அதிகாரிகளும், தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளையைச் சேர்ந்த செல்வி.துவாரகியும் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து பதுளை பெண்கள் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். அங்கு கல்லூரியின் வகுப்புகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பார்வையிட்டோம். திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் காலத்துக்கு முன்னர் குடிசை பள்ளியாக இருந்து பின்னர் அவர்காலத்தில் கட்டிடங்களுடன் வளர்ச்சி பெற்றது. இப்போது மேலும் ஒரு கட்டடம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஏறக்குறை 1100 பெண் மாணவியர்கள் இந்தத் தமிழ்ப் பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.
முதியாகன ஸ்ரீரஜமகா விகாரை – இது பதுளையில் உள்ளது. இந்த விகாரை யில் உள்ள தனி சன்னிதிகள் அழகிய புத்தர் சிற்பங்களுடன் காணப்படுகின்றன. இன்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிகழும் சிறப்பு பூசையும் நிகழ்ந்தது. பூசை வேளையின் பக்தர்கள் கைகளில் திருஓடுகள், மற்றும் தாமரை மலர்களையும் விளக்குகளையும் ஏந்தி வந்து புத்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். விகாரையில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வமலர் நீர் (சிங்களத்தில் பெலிமல்) மற்றும் சிங்கள பலகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த நீர் சிரட்டையில் (தேங்காய் மூடி) ஊற்றி வழங்கப்படுகிறது.
-சுபா
இலங்கை – 18.9.2019