தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்த தென்தமிழக வரலாற்றுப் பயணத்தின் முதல் நாள் பயணத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை, புன்னைக்காயல், தேரிக்காடு, சாயர்புரம் மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளுக்கான இன்றைய பயணத்தில் கலந்து கொண்டோர் நேரடி கள ஆய்வு அனுபவத்தைப் பெற்றனர்.
கொற்கையில் கொற்றவை கோயில், அக்கசாலை விநாயகர் (ஆரம்பத்தில் சிவன் கோயில்) வன்னி மரம் ஆகிய மூன்றையும் பார்வையிட்டனர். குறிப்பாக இங்குள்ள சூலம் மற்றும் அனுமார் வடிவத்தையும் கொற்றவை கோயில் சிற்பத்தையும் விநாயகர் கோயில் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்தனர். டாக்டர்.சசிகலா கல்வெட்டுக்கள் மற்றும் நகரின் வரலாற்றை விளக்கினார்.
புன்னைக்காயலில் போர்த்துக்கீசியர் தமிழகம் வந்த போது கி.பி.16ம் நூற்றாண்டில் கட்டிய, ஏறக்குறைய 550 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான, தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் தேவாலயத்தைச் சென்று பார்வையிட்டனர். இன்று தேர் திருவிழாவிற்குச் சிறப்பு வருகை புரிந்திருந்த அமுதன் அடிகள் முதல் அச்சுஇயந்திரம் புன்னைக்காயலுக்குக் கொண்டு வரப்பட்டு பாதிரியார் ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளார் அச்சுப் பணிகளைத் தொடர்ந்தார் என்ற செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
சாயர்புரத்தில் சேலைகளையும் வேட்டிகளையும் தறிபோடும் அனுபவத்தை நேரில் பெற்றனர். வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து ஆர்வத்துடன் எங்களுடன் தறிபோடும் கலையைப்பற்றி விளக்கிய சாயர்புரத்து மக்களுக்கு நன்றி. எங்களுக்குத் தேநீரும் பலகாரங்களும் வழங்கி களைப்பைப் போக்கிய சாயர்புரத்து மக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
இறுதியாக ஆதிச்சநல்லூர் வந்தடைந்த போது அங்கு தன் குழுவினருடன் எங்களை வரவேற்று தனது பல்வேறு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கைகள் வெளிவரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கத்து. தொடர்ந்து இப்பகுதிக்கு வரும் எல்லா வரலாற்று ஆர்வலர்களுக்கும் அலுக்காமல் சலிக்காமல் தன்னால் இயன்ற அளவு ஆதிச்சநல்லூரின் பெருமைகளைக் கூறி வருகின்றார்.
நாள் முழுவதும் பல்வேறு அனுபவங்களைச் சுமந்தவாறு இப்பயணக்குழுவினர் முதல் நாளை இனிதே நிறைவு செய்தனர். நாளை சோழர்கால கோயில் கட்டுமானம் பாண்டி யர் கால கோயில் கட்டுமானம் என இக்குழுவின் பயணம் தொடர்ந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் தூத்துக்குடி நெல்லை வரலாற்றுப் பயணத்தில் மூன்று பார்வையற்ற சகோதர சகோதரிகளும் இணைந்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் காட்டும் வரலாற்று சின்னங்களும் தகவல்களும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டுகளைத் தொட்டுக் காட்டியும் வரலாற்றுச் செய்திகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் ஆழமாக விளக்கியும் இந்த பயணத்தில் நமது குழுவினர் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.
எரிச்சா உடையார் கோவில் அம்பாசமுத்திரம்.
வரகுண பாண்டியன் காலத்து எட்டாம் நூற்றாண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவிலில் வரலாற்று ஆய்விலிருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் இரண்டாம் நாள் வரலாற்றுப் பயணம் தொடங்கியது.
பிரம்மதேசம் – கைலாசநாதர் உடையார் கோயில். கிபி 12,13ம் நூற்றாண்டு பாண்டியர் கால கோயில். கோயில் வரலாற்றில் சதுர்வேதி மங்கலங்கள் உருவாக்கத்தைப் பற்றி டாக்டர் பத்மாவதி விளக்கம் .அளித்தார். வருகை புரிந்த வரலாற்று ஆர்வலர்கள் கோவிலின் கட்டுமானம் மற்றும் அக்கால வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டனர்.
ராஜேந்திர சோழ விண்ணகரம் – மன்னார் கோயில்.
சேர சோழ பாண்டிய மூவேந்தர்களின் தொடர்பு கொண்ட ஒரு வைணவ திருத்தலம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் நெல்லை தூத்துக்குடி வரலாற்றுப் பயணத்தில் இறுதி நிகழ்வு சேரன்மாதேவி ராஜராஜன் காலத்து ராமசாமி கோயில் கல்வெட்டு வாசிப்பு மற்றும் கோவில் கட்டுமானத்தை ஆராய்வதாக அமைந்தது. இந்த இறுதி நிகழ்வில் மகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியமாக எங்களுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார்.
மரபு பயணத்தில் கலந்து கொண்ட அனைவருடனும் ஆர்வத்துடன் உரையாடியதோடு கல்வெட்டுக்களைப் பற்றி கேட்டறிந்தார் .
கோயிலில் மேற்பகுதியில் முளைத்திருக்கின்ற செடிகளை அகற்ற வேண்டும் மற்றும் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கைகளை செவிமடுத்தார். பயணத்தில் கலந்து கொண்ட பார்வையற்ற சகோதரர்களுடன் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் பேசி அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். இது மரபு பயணத்தில் கலந்துகொண்ட எமது குழுவினர்அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-சுபா