திருவள்ளுவர் யார் – தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல் திறனாய்வு நிகழ்ச்சி

இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் உள்ள அரங்கில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பித்து வெளியிட்ட “திருவள்ளுவர் யார் கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்” என்ற நூல் வெளியிடப்பட்டு திறனாய்வு செய்யப்பட்டது.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பித்து வெளியிட்டிருக்கும் மூன்றாவது நூல் இது. முதல் இரண்டு நூல்கள் திருக்குறளுக்கான ஜெர்மானிய மொழிபெயர்ப்பாக 1803 மற்றும் 1856 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த பாதிரியார் ஃபரடரிக் காமரர் , டாக்டர் கார்ல் க்ரவுல் ஆகியோர் எழுதிய ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

நிகழ்ச்சியில் நூல் வெளியீட்டுக்குப் பின்னர் திறனாய்வு தொடங்கியது. முதலில் உரையாற்றிய டாக்டர் சங்கர சரவணன் அவர்கள், திருவள்ளுவர் மேல் கட்டப்பட்ட புனைகதைகள் ஒவ்வொன்றும் திருக்குறளுக்கு எந்தவிதத்திலும் தொடர்பு அற்ற நிலையில் இருந்தும் கூட அக்கதைகள் பொது வழக்கில் புழக்கத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எவ்வளவு தரம் குறைவாக வள்ளுவர் இக் கதைகளில் குறிப்பிடப்படுகின்றார் என்ற விஷயங்களை சுவைபட விளக்கினார்.

அதற்கடுத்து பேசிய டாக்டர் ஷாலினி அவர்கள் மருத்துவ மற்றும் உடற்கூறு அடிப்படையில் இப் புனைக்கதைகள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அறிவுக்கு புறம்பானது என்று மருத்துவக் குறிப்புகளோடு உதாரணம் காட்டி தெளிவுடன் விளக்கிப் பேசினார்.

இதற்கடுத்து பேசிய திரு பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள், புனைகதைகள் கட்டப்படுவது என்பது ஒரு நோக்கத்தோடு நடக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி பேசியதோடு, கட்டப்பட்ட புனைகதைகளைத் தகர்த்து அவற்றைச் சமூக சிந்தனையில் இருந்து மாற்றி அமைப்பது எவ்வளவு கடினம் என்பதை வலியுறுத்தி, அத்தகைய பணியை இந்த நூல் செய்கின்றது என்பதைக் கூறி, இப்பணியைப் பலரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டியது கடமை என்பதை விளக்கிக் கூறினார். பல நூல்களை ஆராய்ந்து பொய்யாக திரித்து எழுதப்பட்ட புனைகதைகளைத் தொகுத்து ஒரே நூலில் வழங்கிய நூலாசிரியர் கௌதமர் சனாவை பாராட்டியதோடு அயோத்திதாச பண்டிதர் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படாமல் போன விஷயத்தை முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்திப் பேசினார்.

நோக்க உரையும் அறிமுக உரையும் வழங்கிய தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் க. சுபாஷிணி இந்த நூல் வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கிக் கூறியதோடு ஐரோப்பிய மொழிபெயர்ப்புகளில் தமிழில் உருவாக்கப்பட்ட புராணக் கதைகளும் இடம்பெற்றிருக்கும் அவலத்தையும் சுட்டிக்காட்டி, ஐரோப்பிய மொழியில் திருக்குறள் புனைகதைகள் அற்ற மொழிபெயர்ப்புகள் வெளிவர வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

இறுதியில் உரையாற்றிய நூலாசிரியர் திரு கௌதம சன்னா, அயோத்திதாச பண்டிதர் மேற்கொண்ட திருவள்ளுவர் பற்றிய ஆய்வுகளை விளக்கியதோடு விசாகப் பெருமாளையர் தொடங்கி சரவணப் பெருமாள் ஐயர் மற்றும் ஏனையோர் உருவாக்கிய புனைகதைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் உருவாக்கியிருக்கும் தாக்கத்தைச் சுட்டிக் காட்டியதோடு இந்த நூல் எழுதப்பட்டது பின்னணியையும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக பொறுப்பாளர் திரு குமரகுருபரன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இன்றைய நிகழ்வு குறிப்பிட்டிருந்தபடி சரியாக காலை 10:30க்குத் தொடங்கி மதியம் 1க்கு நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் ஜெர்மனியில் நிகழ்ந்த திருவள்ளுவர் சிலைகள் வைத்த நிகழ்வின் காணொளிக் காட்சிகள் காட்டப்பட்டன. தமிழ் ஆர்வலர்கள் ஏறக்குறைய 120 பேர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.

முனைவர். க. சுபாஷிணி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *