Home Magazine மின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]

மின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]

by admin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]
https://books.google.com/books?id=ntndDwAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]
https://books.google.com/books?id=ntndDwAAQBAJ

தலையங்கம்:
இணையம்வழியே தொடரும் நம் வரலாற்றுத் தேடலுக்கான பயணம்

வணக்கம்.

உலக மக்கள் அனைவரது சிந்தனையும் இன்று COVID-19 வைரஸ் பற்றியதாகவே இருக்கின்றது. ஒட்டுமொத்த உலகின் பெரும்பகுதியைச் செயலிழக்க வைத்திருக்கிறது இந்த நுண்ணுயிர் கிருமி. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது; உலகப் பொருளாதாரம் எப்படி மீண்டு வரும் என்பது நம் முன்னே எல்லோருக்கும் இருக்கின்ற மிகப் பெரிய கேள்வி. இதற்கிடையே தான் தொடர்கிறது நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுத் தேடலுக்கான பயணம்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பாக வெளிவந்த திருவள்ளுவர் யார்- கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர் என்ற திறனாய்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. திருக்குறள் ஐரோப்பியத் தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு லத்தின் மொழி தொடங்கி வெவ்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த காலகட்டத்திற்குப் பிறகு கிபி 19ஆம் நூற்றாண்டில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றி பல்வேறு புனை கதைகள் உருவாக்கப்பட்ட சூழலைச் சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு தான் இந்த நூல். அறிவுக்குப் பொருந்தாத கதைகளைத் திருவள்ளுவரின் பின்புலத்தின் மீது ஏற்றி, திருவள்ளுவரின் பெருமையைக் குறைத்துச் சிதைக்கும் முயற்சிகளை வெளிச்சப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது இந்த நூல். வரலாற்றில் கட்டமைக்கப்பட்டுள்ள பொய்க் கதைகளை உடைத்துச் சிதைத்து மக்கள் சிந்தனையில் தெளிவு ஏற்படுத்த வேண்டியதும் நமது கடமைகளில் ஒன்றாக அமைகின்றது.

ஐரோப்பா மட்டுமன்றி, இந்தியாவிலும் ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே இருக்கின்ற பலருக்கு அறிவுத் தேடலுக்கு உகந்த வகையில் பயனுள்ள நடவடிக்கைகளை உருவாக்கித் தரவேண்டும் என்ற சிந்தனையில் தமிழ் மரபு அறக்கட்டளை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் இணையவழி உரைகளை ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்திய-இலங்கை நேரம் காலை 11 மணிக்கும் இரவு 10 மணிக்கும் குறிப்பிட்ட ஒரு துறையில் ஆய்வு தரத்துடன் கூடிய வகையிலான உரைகள் இப்போது தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த பேஸ்புக் நேரலை உரைத்தொடர் நிகழ்ச்சி தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மூன்றாம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரண்டு ஆய்வுச் சொற்பொழிவு என்ற வகையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் மக்களின் கவனத்தை வரலாற்று ஆய்விலும், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுச் சூழலிலும் குவிக்கும் வகையில், உலகின் பல நாடுகளிலிருந்து ஆய்வறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றார்கள். ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஆய்வறிஞர்கள் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து ஆற்றிய உரைகளின் பட்டியலை இந்தக் காலாண்டிதழில் காணலாம். அந்த வகையில் முதல் 15 நாட்களில் 30 ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் சாலைகளும் பிற பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லல்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் உலகின் பல பகுதிகளில் அடிப்படைத் தேவைகளும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்குக் காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் இயன்ற வகையில் உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமை தான்.

இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தை தேயிலை பெருந்தோட்டப் பொதுமக்களுக்குத் தேவைப்படுகின்ற அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) நன்கொடையை வழங்கி உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 600 பெறுமானமுள்ள உணவுப்பொருட்கள் என்ற வகையில் 190 குடும்பங்களுக்கு இந்த அவசரக்கால உதவித்தொகை வழங்கப்படுகின்றது. நம் கண்களுக்கு எதிரே பொதுமக்களும் குழந்தைகளும் பசியால் வாடித் தவிப்பதைத் தவிர்ப்பதற்கு நம்மால் முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டி கை கொடுப்போம். சக மனிதரின் பசிப்பிணியைப் போக்குவது தான் நாம் இந்தப் பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமையாகத் தமிழ் மரபு அறக்கட்டளை கருதுகின்றது.

COVID-19 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளிலிருந்து உலக மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் கட்டுக்கோப்புடனும் மீண்டு வருவோம். இவ்வாண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும்கூட இணையம் நமக்கு அளித்திருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் வரலாற்று பாதுகாப்பு பற்றியும் வரலாற்று ஆய்வுகளைப் பற்றியுமான ஆய்வுரைகளை பேஸ்புக் வழி நேரலையாகத் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்றது. அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்கள் வரலாற்று ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் எனத் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இத்தொகை இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் மலை உச்சியில் மக்கள் குறைவாக நடமாடும் பகுதியில் கொரோனா நிவாரண நிதி கிடைக்காமல் அல்லல்படும் மக்களுக்காக ஆசிரியர் சிவராஜ் கேட்டுக் கொண்டமையினால் வழங்கப்பட்ட நிதி உதவியாகும்.

இந்த நிதி உதவி வழங்கியதில் பங்கு கொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர்:
ஜெர்மனி – இலங்கை ரூபாய் 72,325.00/-

  1. ஆசிரியர் சிவஞானம்
  2. திரு.ஸ்ரீகந்தா குடும்பத்தினர்
  3. திரு.கௌதம சன்னா
  4. திரு. கார்த்தீஸ்வரன் காளிதாஸ்
  5. திரு.கார்த்திக் சௌந்தரராஜன்
  6. திரு.பாலலெனின்
  7. முனைவர்.க.சுபாஷிணி

டென்மார்க் – இலங்கை ரூபாய் 6,000.00/-

  1. திரு. தருமகுலசிங்கம்

நோர்வே – இலங்கை ரூபாய் 21,675/-

  1. திரு.வேலழகன் மற்றும் நண்பர்கள்

ஒரு குடும்பத்திற்கு 600 ரூபாய் வீதம் பெறுமானமுள்ள ஒரு வாரத்திற்கான உணவுப்பொருட்கள் இத்தொகையிலிருந்து 190 குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று இத்தொகை அனுப்பப்பட்டு அவசரக்கால உதவிக்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் வழி இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.

இதன் வழி மலை உச்சியில் தேயிலைத் தோடங்களில் பணி புரியும் 190 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உணவுத் தேவைக்கு நாம் உதவியிருக்கின்றோம். தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் செல்லவில்லையென்றால் அன்றைய சம்பளம் இல்லை என்ற நிலையில் இம்மக்கள் வாழ்கின்றார்கள். ஊரடங்கு காலத்தில் இந்த உதவித் தொகை பல குடும்பங்களின் அடிப்படை உணவுத் தேவைக்கான தற்காலிக உதவியாக அமைகின்றது.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like

Leave a Comment