Home THFi News தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

by admin
0 comment

Subashini Thf 

தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

செயல்திட்டங்கள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்கள்.
—————————–

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் (07.07.2020)
——–

தமிழ் மரபு அறக்கட்டளையின் (தமஅ) மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் செயற்குழு கூட்டம் இணையக் காணொளி மூலம் 07.07.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த மூன்று மாதங்கள் நடந்த செயல்பாடுகள் சீராய்வு செய்யப்பட்டன. மேலும் அடுத்து வருகின்ற மூன்று மாதங்களுக்கான செயல்திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி அறிவிப்பு தீர்மானங்கள்

1. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு கடந்த மூன்று மாதங்களாக கோவிட்-19 தொற்றுகாலத்தில் இடைவிடாமல் தொடர் இணையக்காணொளி கருத்தரங்குகளை நடத்தி சாதனைப் படைத்துள்ளது. இச்சாதனையில் பங்கெடுத்த தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. இந்தியா மற்றும் உலகின் பிறநாடுகளிலிருந்தும் இந்தத் தொடர் காணொளிக் கருத்தரங்குகளில் பங்கேற்று, தமது சிறப்பான பங்களிப்பின் மூலம் கருத்துரைகளை வழங்கிய அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பான்னாட்டு அமைப்பு தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. இந்தத் தொடர்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள், ஆய்வு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றிற்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் எமது அமைப்பு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

4. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்ட கடிகை – பன்னாட்டு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகத்தின் செயல்பாடுகளில் ஊக்கமுடன் பங்கெடுத்த அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. கடிகை நடத்தும் பன்னாட்டு பெண்கள் தொடர் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

5. தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொள்ளும் செயல்பாடுகளில் இணைந்து செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் ஆகியவற்றிற்குத் தமது நன்றியினைத் தமிழ் மரபு அறக்கட்டளை தெரிவித்துக் கொள்கிறது.

6. எமது அமைப்பு முன்னெடுக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் தோளோடு தோள்நின்று ஆதரவு கொடுக்கும் அனைத்து தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவ மாணவியர்கள், தமிழார்வமுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினைக் காணிக்கையாக்குகிறது தமிழ் மரபு அறக்கட்டளை.

செயல்திட்டத் தீர்மானங்கள்

7. கடிகையின் செயல்பாடுகளில் ஒன்றாக இணையப் பாடதிட்டங்களை வடிவமைப்பதற்கான குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

8. தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்கள் வெளியிடும் திட்டம் விரிவுபடுத்தபடுகிறது. கோவிட்-19 பிரச்சினையினால் புத்தகங்களை அச்சிடும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியிருக்கிறது. எனவே மாற்று ஏற்பாடாக கிண்டில் (Kindle) இணைய வெளியீடுகளைக் கொண்டு வருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதை நிறைவேற்ற இணையப் பதிப்பு குழு அமைக்கப்பட்டது.

9. ஐரோப்பாவில் முதல் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டு வரும் திசம்பர் மாதம் 4ம் நாள் முதலாமாண்டு நிறுவுறுகிறது. அந்நாளை ஐரோப்பிய தமிழர் நாளாக கொண்டாட வேண்டும் என ஜெர்மனியில் நடந்த சிலை திறப்பு விழாவில் எமது அமைப்பு முன்மொழிந்தது. அதை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஐரோப்பில் விரைவில் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

10. மேலும், ஐரோப்பாவில் திருவள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்ட முதலாமாண்டு நிறைவு நாளில் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை ஐரோப்பாவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

கண்டனத் தீர்மானங்கள்

11. தமிழ் மரபு அறக்கட்டளை என்பது தனிநபரல்ல, இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் சட்டப்படியான அமைப்பு. மேலும் மற்ற நாடுகளிலும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. எனவே சட்டப்படி அமைக்கப்பட்ட இந்த அமைப்பினையும் அதன் நிறுவன தலைவர்களான டாக்டர்.க.சுபாஷிணி, டாக்டர்.நா.கண்ணன் மற்றும் அமைப்பினர் மீது மோசமான அவதூறுகளை தீய எண்ணம் கொண்ட சிலர் பரப்பி வருகின்றனர். அது தொடர்பான காணொளிகளை இணையத்தில் பரப்பி வரும் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

12. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் தமிழ் மரபு அறக்கட்டளையினால் சேகரிக்கப்பட்ட சுவடிகளும் அனைத்தும் முழுவதுமாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அதற்கான ஒப்புகை சான்றும் பெறப்பட்டுள்ளது. இது குறித்து மேல் விவரம் வேண்டுவோர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தையோ அல்லது தொடர்புடைய துறையினையோ அணுகி கொள்ளலாம். இதைத் தவிர்த்து இணையம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை மீது அவதூறுகளைத் தவறான உள்நோக்கத்துடன் சிலர் பரப்பி, அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்ளும் இந்த அற்பமான தமிழ்ப் பகைவர்களைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சட்ட நடவடிக்கைகள்

13. ஏற்கெனவே நடந்த தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு முடிவின் படி இணையத்தில் அவதூறு பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல்துறை தலைவர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது அறிவிக்கிறோம். தேவையான அனைத்து ஆவணங்களையும் அவரிடம் அளித்துள்ளோம். அந்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்பதைத் தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

14. தற்போது இணையத்தில் அவதூறு பரப்பி விழியப் பதிவுகளை வெளியிடுவோர் மீதும், பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களின் வழி அவதூறுகளைப் பரப்புவோர் மீதும் அறக்கட்டளையின் சார்பாகவும், தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் தனித்தனிப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்தச் செயற்குழு அறிவிக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் சட்டபடியான தண்டனைகள் பெறும்வரையில் உறுதியாக செயல்படும் எனபதில் செயற்குழு உறுதியாக இருக்கிறது. மேலும் இப்படி அவதூறு பரப்பிச் செயல்படுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான சட்ட விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரும் என எச்சரிக்கை விடுக்கிறது செயற்குழு.

மேற்கண்ட செயற்குழு தீர்மானங்கள் மற்றும் தன்னிலை விளக்கத்தைத் தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இதன் மூலம் வைக்கிறது.

இப்படிக்கு
டாக்டர்.க.சுபாஷிணி (நிறுவனத் தலைவர்)
டாக்டர்.நா.கண்ணன் (நிறுவனத் தலைவர்)
செயற்குழு-தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நாள் 07.07.2020


You may also like

Leave a Comment