
https://books.google.com/books/about?id=rU3yDwAAQBAJ
மின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]
https://books.google.com/books/about?id=rU3yDwAAQBAJ
தலையங்கம்:
பொது முடக்கக் காலம் தனிமனித வளர்ச்சிக்கான காலம்
வணக்கம்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – (குறள் எண்:394; அதிகாரம்:கல்வி)
கட்டாயமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்ட போதும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளைச் செயலாற்றிக் கொண்டே வருகின்றோம். கடந்த மூன்று மாதங்களில் இணைய வழியாகச் சிந்தனைக்கு விருந்தாகப் பலதரப்பட்ட நிகழ்வுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கி இருக்கின்றோம் என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.
ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை மலையகப்பகுதியின் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் வசிக்கின்ற 58 தோட்டங்களில் 232 பிரிவுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஐரோப்பியக் கிளை வழங்கிய நன்கொடை 190ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒருவார கால உணவுப் பொருள் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைந்தது. இதே போலத் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளூர் ஒன்றியம், காக்கழனி-நுகத்தூர் ஊராட்சியில் வசிக்கின்ற 150 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை நன்கொடை வழங்கி உதவினோம்.
நீண்ட கால திட்டங்களில் ஒன்றான இணையவழிக் கல்விக் கழகத்தைத் தொடக்கும் முயற்சி இவ்வாண்டு சாத்தியப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இவ்வாண்டு மே மாதம் 19ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்.மாண்புமிகு திரு.க. பாண்டியராஜன் அவர்கள் தொடக்கி வைத்த இந்த நிகழ்வில் தமிழக அரசின் அதிகாரிகளும் கலந்து சிறப்பு சேர்த்தனர். கடிகை
இணையக் கல்விக் கழகம் உலகத் தமிழ் மக்களின் அறிவுத்தேடலுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் ஓர் கல்விப்பாலமாகும்.
கடந்த ஆண்டு, அதாவது 2019 ஆம் ஆண்டில், இரண்டு முறை கல்வெட்டுப் பயிற்சிகளைத் தமிழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தினோம். இதன்வழி ஏறக்குறைய முந்நூறு மாணவர்கள் பயிற்சிகளில் கலந்து பயன் பெற்றனர். ஊரடங்கு விதிகள் நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில், வரலாறு தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சென்று செல்வதிலும் தரமான பயிற்சிகள் உலகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு ஜூன் மாதம் இரண்டு நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளை சோழர் காலத் தமிழ் கல்வெட்டுகள் பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் தமிழகம் மட்டுமன்றி ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் 169 மாணவர்கள் ஜூன் 19லிருந்து 21 வரை, மூன்று நாட்கள் நடந்த கல்வெட்டுப் பயிலரங்கத்தில் பங்குகொண்டனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும் அறிஞர்களை அழைத்து அவர்களது ஆய்வுகள் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வார இறுதி நாட்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி கடிகை முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் வழியாக மூன்று சிறப்பு நிகழ்ச்சிகளையும் கடந்த மூன்று மாதங்களில் நிகழ்த்தி இருக்கின்றோம். கடிகை கல்விக்கழகத்தின் முதல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒரிசா மாநில அரசின் சிறப்பு ஆலோசகரும், சிந்துவெளி ஆய்வாளருமான திரு.பாலகிருஷ்ணன் இஆப அவர்களது சிறப்புரை நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து நிறவெறிக்கும் இனவாதத்திற்கு எதிரான சிந்தனைகளை ஆராய்ந்து அலசும் வகையிலான உரை நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பு சேர்த்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களது காமராஜர் சிறப்புரை இவ்வரிசையில் இடம் பெற்று பெருமை சேர்த்தது.
இடைவிடாது பல்வேறு உரை நிகழ்ச்சிகள் தொடர்ந்தாலும் காலத்திற்கேற்ற வகையில் பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஐந்து நாட்கள் சிறப்புப் பெண்கள் கருத்தரங்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஜூலை மாதம் 8ம் தேதிமுதல் 12ம் தேதி வரை நிகழ்த்திப் பல பெண் ஆளுமைகளை இணையவழி கலந்துரையாட வைத்து சாதனை புரிந்தது. இந்தக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இணைந்ததோடு, ஆய்வுரையும் வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்பு கூட்டினார். இந்த ஐந்து நாட்கள் கருத்தரங்கின் முக்கியத் தீர்மானங்களாகக் கீழ்க்காணும் செயல்பாடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை இறுதி நாள் நிகழ்ச்சியில் அறிவித்தோம்.
- துறை சார்ந்த வல்லுநர்களாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் பெண்களை உலகுக்கு அடையாளப்படுத்தி அவர்களது திறனை ஊக்குவிக்கும் முயற்சிகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் வார இறுதி சொற்பொழிவுகளில் மிக அதிகமாகப் பெண்களுக்கு அவர்களது அனுபவ மற்றும் ஆய்வுப் பணிகளைப் பற்றி உரையாற்ற வாய்ப்புகள் வழங்குவது.
- பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் இரண்டாம் தரம் அல்ல. ’ஆணுக்குப் பெண் சமம்’ என்ற பேச்சுக்கள் கூட இனி வேண்டாம். அது போலித்தனமானதே. ஆகையால், அடிப்படை மனித உரிமையைப் பேணும் வகையில் பெண்களைத் தரம் தாழ்த்தி அவர்களை அலங்கார பொம்மைகளாகப் பார்க்கும் நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் பொன்னாடைகளையும், பரிசுகளையும் தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைப் பார்க்காமல் அவர்களது அறிவைக் கொண்டாடும் ஒரு சமூகமாக நமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துவது.
- பெண்கள் தங்களைப் பலவீனமாகக் காட்டிக் கொள்வதில் பெருமை இல்லை. உடல் ரீதியாகவும் உள்ளத்தளவிலும் துணிச்சலும் பலமும் பொருந்தியவர்களாகப் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவு, சிறப்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல் , தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள அவ்வப்போது வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது.
- கிராமப்புற பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகளில் முறையான முன்னெடுப்புக்கள், ஆய்வுக்கு வழிகாட்டுதல் போன்ற வகைகளில் வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகையின் வழியாகத் தொடங்கப்பட உள்ளது. இன்றைய நிலையில் ஆய்வுக்குக் காசு வாங்கும் போக்கும் ஆய்வுக் கூடங்களில் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் முயற்சிகளையும் கண்டிப்பதோடு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்குத் தகுந்த உதவிகளைச் செய்வது.
- வணிகத்தில் ஈடுபடும் பெண்களுக்கும், விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில், சுய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் என்ற வகையிலான நிகழ்ச்சிகளையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை இணையக் கல்விக்கழகம் யோசித்து வருகின்றோம். கைத்தறி நெசவு சார்ந்த துறையில் பெண்களுக்கு உதவும் முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ளன. இது மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
- மாற்றுப்பாலினத்தோர் (Transgender) சமூகப் பிரச்சனைகளை ஆராயும் வகையில் வார இறுதி இரண்டு நாள் இணைய வழிக்கருத்தரங்கம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.
- பெண்கள் மீது நடக்கும் இணையத் தாக்குதல்கள் (Cyber attack) வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.பல வேளைகளில் எந்த வித அடிப்படை ஆதாரமுமின்றி பெண்களை சமூக நடவடிக்கைகளை முடக்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, இணையத் தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையிலும் அத்தகைய அறமற்ற செயலைச் செய்வோரை சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்வது.
ஆகிய தீர்மானங்கள் இப்பெண்கள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டன.
ஆய்வு நோக்கங்களையும் சமூக நலன் சார்ந்த நோக்கங்களையும் முன் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை உலகத் தமிழர்களுக்காகச் செயலாற்றி வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. உலகம் முழுவதும் விரைவில் ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டு பொதுமக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இந்த காலாண்டிதழை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றோம்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி