Home Events பனையும் முருங்கையும் – ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்

பனையும் முருங்கையும் – ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்

by admin
0 comment
பனையும் முருங்கையும் – ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்
செப்டம்பர் 23 ம் தேதி, புதன் கிழமை, 2020 – 5:00 PM
https://youtu.be/5meAVbnXOdU

“பனையும் முருங்கையும்”- ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்

— விஜயலட்சுமி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி பிரிவின் சார்பாக “பனையும் முருங்கையும் – ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்” என்ற நிகழ்ச்சியை 23.9.2020 அன்று நடத்தியது. அந்நிகழ்ச்சியில்  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு (ஆதிந) உயர்நிலைப்பள்ளி, சங்கரலிங்கபுரம்,   மாணவர்கள் பனை மற்றும் முருங்கையை  நட்டு வைக்கும் நேரடி நிகழ்வு நடைபெற்றது. இம்மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து  இயற்கைப்  பாதுகாப்புப்  பணியைச் செய்கின்றனர்.இந்நிகழ்வில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.இயற்கை பற்றிய தங்கள் கருத்துக்களை மாணவர்கள் நேரலையில் பகிர்ந்து கொண்டனர்.  

சங்கரலிங்கபுரம் ஆசிரியர் திருமிகு. சி.மு. பாலச்சந்தர்  ஐயா அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். முனைவர்.க.சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் ஜெர்மனியிலிருந்து வாழ்த்துரை வழங்கினார்.   இந்நிகழ்வில் திருமிகு.ஆனந்தி நெதர்லாந்திலிருந்தும்,  திருமிகு.நாறும்பூநாதன் நெல்லையிலிருந்தும், திருமிகு.ராஜேந்திரம், மேனாள் தலைவர், இலங்கை பனை அபிவிருத்தி மன்றத்திலிருந்தும்  கலந்து கொண்டனர். அவர்கள் பனை பற்றிய தங்கள்  தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.  மேலும்,இந்நிகழ்வில் முருங்கை பற்றிய கருத்துக்களை டாக்டர்.தேவி மதுரையிலிருந்து இணையம் வழியாக மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

தமிழ் என்று சொல்லும் பொழுதும் அல்லது தமிழரின் வாழ்வைப் பற்றிப் பேசும் பொழுதும், பனை மற்றும் முருங்கையை  நாம் மறந்திட இயலாது. பனை அதன் வேரின்  மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கும். பனையிலிருந்து  நுங்கு, பதநீர்,  பனங்கற்கண்டு, பனைமிட்டாய் பனம்பழம் ஆகியவற்றைப்  பெறலாம். இது மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்குப் பனை இருப்பிடமாக அமைகின்றது.

திருமிகு. ஆனந்தி அவர்கள் யாழ்ப்பாணத்தின் பனைமரங்கள், பனையின் வேர்கள், ஆண் பனை மற்றும் பெண் பனை அதோடு பறவைகளின் இருப்பிடமாக இருக்கிறது என்பதையும் பனையின் வேறுபட்ட பெயர்களையும் விளக்கினார்.

திருமிகு. நாறும்பூநாதன் அவர்கள் புதிர்களோடு உரையைத்  தொடங்கி வெற்றுப் பனை மரங்களோடு தாம் வளர்ந்தமையையும் பனை மட்டையிலிருந்து ஓலைகளை எடுத்து அதில் எழுத்துக்களைப் பதிவிட்டு முன்னோர்கள் நமக்குத் தந்தமையையும், பனை மரத்தில் ஏறும் முறைகளையும், சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். முனைவர்.க.சுபாஷிணி அவர்கள் கம்போடியாவின் பதநீர் பற்றி சில தகவல்களைக் கூறினார்.திருமிகு. ராஜேந்திரம் அவர்கள் பனையின்  உபயோகங்களையும் பனை தமிழர்களோடு அடையாளமாக இருக்கிறது என்பதையும் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதையும் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

திருமிகு. நடராஜ் அவர்கள் பனையானது மருந்தாகவும் நெடுங்காலத்துக்கு வைத்திருக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது என்பதை விளக்கினார். திருமிகு.வேலுப்பிள்ளை அவர்கள், பனை அபிவிருத்திக்காகச் செய்து  கொண்டிருக்கின்ற பல செயல்களைத் தொகுத்துரைத்தார்.

முனைவர். தேவி அறிவுச்  செல்வம் அவர்கள் கடந்த வருடம் சங்கரலிங்கம் பள்ளியில் நடத்தப்பட்ட அருங்காட்சியகம் பற்றியும் முருங்கையின் முக்கியத்துவத்தைப்  பற்றியும், அதன்  32 வகைகளையும் பயன்களையும் அதில் அடங்கியுள்ள சிறப்புகளையும்  எளிமையான முறையில் எடுத்துரைத்தார். முனைவர். கட்டளை கைலாசம் அவர்கள் மரங்களோடு தம் வாழ்க்கைமுறை அமைந்தமையையும் மரங்களை  வழிபடுவதையும் முருங்கை கோயிலின் தல விருட்சமாக அமைந்திருப்பதையும் கிராமப்புற பாடல்களில் முருங்கையின் குறிப்புக்கள் வந்திருப்பதையும் முருங்கையைப் பற்றிய புத்தகங்கள் பற்றியும் , பள்ளிக்கு முருங்கை இவருக்கு  வருமானம் தரக்கூடியதொன்றாக அமைந்தது என்பதையும்  கூறினார்.   பங்கேற்பாளர்கள் பலரும் அவரவர் கருத்துக்களைப்  பகிர்ந்தனர்  இவ்வாறாக இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

You may also like

Leave a Comment