அயலகத் தமிழர் நாள் அறிவிப்பில் மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வெளிநாடு வாழ் துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அயலகத் தமிழர் வரலாறு அமர்வுக்குத் தலைமையேற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தோழர் திருச்சி சிவா அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உலகத் தமிழர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் எனது இனிய வணக்கம்.
இது உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சிதான். பொங்கல் தமிழர் திருநாள் வாரத்தில் அயலகத் தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அயலகத் தமிழர் நாளாக ஜனவரி 12ம் தேதியைப் பிரகடனப்படுத்திய தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திலிருந்து வணிகத்துக்காகப் புலம்பெயர்ந்து சீனா, கொரியா, ஜப்பான், இந்தோனீசியா, மலாயா, தாய்லாந்து எனப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிக நீண்டகாலமாக இந்நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அதே காலகட்டத்திலும், பிறகும் ஐரோப்பாவிற்குப் பயணமானோர் அங்கேயே தங்கி விட்டனர்.
தொடர்ச்சியாக வணிகத்திற்காகச் சென்றவர்கள் என்ற நிலை மாறி கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது நாட்டை விட்டு வெளியேறி, மொரிஷியஸ், பிஜீ, மார்ட்டினிக், சுரினாம், குவாதலப், மலாயா, இலங்கை மலையகம் எனப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். அடுத்து, கடந்த நூற்றாண்டில் உயர் கல்விக்காகவும், புதிய வாழ்வுக்காகவும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா எனப் புலம்பெயர்ந்தோர் இன்று கணிசமான அளவில் உலகத் தமிழ் மக்களாக, ஆனால் தமிழ்நாட்டை எங்களது பண்பாட்டு வேராகக் கொண்டு வாழ்கின்றோம்.
எங்களது தமிழ் மரபு அறக்கட்டளை 2001ஆம் ஆண்டு தொடங்கி உலகளாவிய தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். தமிழகத்துக்கு வெளியே உதாரணமாக, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பாதுகாக்கப்படும் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து, பதிவாக்கி அவை பற்றிய செய்திகளை ஆய்வறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றோம். 4.12.2019இல் ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகளை நிறுவினோம். இதுவே ஐரோப்பாவில் திருவள்ளுவருக்கு நிறுவப்பட்ட முதல் உருவச்சிலைகள் என்பதும் உலகளாவிய வகையில் திருவள்ளுவருக்கு வைக்கப்பட்ட முதல் ஐம்பொன் சிலைகள் என்ற சிறப்பையும் பெறுகின்றது. இதே நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாகப் பிரகடனப்படுத்தி ஐரோப்பியத் தமிழர்களை ஒன்றிணைத்துச் செயல்பட்டு வருகின்றது எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை.
அந்த வகையில் எங்களை தாய்நிலத்தோடு ஒன்றிணைக்கும் தமிழக அரசின் இந்த முயற்சியை நாங்கள் மனதார வரவேற்கிறோம். தமிழக அரசைப் பாராட்டுகின்றோம்.
முதலமைச்சர் அவர்கள் இன்று தமது உரையில் அறிவித்த வெளிநாடு வாழ் தமிழர் அவசரக்கால உதவிக்கான தளம், உலகத் தமிழர்களுக்கான தமிழர் களஞ்சியம் ஆகிய திட்டங்களை நெஞ்சார வரவேற்கின்றேன். இவை எங்களது நீண்டகால தேவையாக இருக்கின்றது.
இவ்வேளையில் எங்களது கோரிக்கையாக சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றோம்.
- புலம்பெயர்ந்த தமிழக மக்களின் நீண்டகால வரலாறு – எத்தகைய பயணம், புதிய நாடுகளில் ஆரம்பக்கால துன்பகரமான சூழல், அதைப்பற்றிய ஆவணங்கள், படிப்படியான வாழ்வியல் மாற்றங்கள், தமிழர் புதிய நிலத்தில் உள்நாட்டு மக்களுடனான ஒன்றிணைந்த வாழ்க்கை – தமிழ்க் கல்வி, பண்பாடு, போன்ற ஆய்வுகளைத் தமிழகக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் முக்கியத்துவம் அளித்துச் செயல்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர் ஆய்வுத்துறையைக் கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
- ஐரோப்பிய, அமெரிக்க, கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளில் உள்ள தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்பான ஆவணங்கள் ஓலைச்சுவடிகளாக, தாள் ஆவணங்களாக, செப்பேடுகளாக, வரலாற்றுச் சின்னங்களாக அயல்நாடுகளில் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அது தொடர்பான தகவல்களையும் தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றோம். தனி நபர்களாகவும் அமைப்பாகவும் எங்களால் முடிந்த வரையில் இப்பணிகளைச் செய்து வருகின்றோம். தமிழக அரசின் உதவி கிடைத்தால் இவ்வாவணங்களை விரைவாக மின்னாக்கம் செய்து நாம் ஆய்வு செய்து வெளியிடப் பேருதவியாக அமையும்.
- அயல் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தமிழ் வாசிப்பை வளர்க்கும் வகையில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகளை ஏற்படுத்துவது அவசியத் தேவையாகின்றது. இப்புத்தகக் கண்காட்சிகளை ஐரோப்பாவிலும், மலேசியா, சிங்கையிலும் ஏற்பாடு செய்து தமிழ் நூல்கள் அயலகத் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் பரவும் வகை செய்ய வேண்டும்.
- ஐரோப்பாவில் இருக்கும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் முறைசாரா பள்ளிக்கூடங்களாக இயங்கி வருகின்றன. அதற்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களையும், பாட நூல்களையும் தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும்.
அதுமட்டுமன்றி ஜெர்மானியர், ஆங்கிலேயர், பிரெஞ்சு மக்கள் என வேற்றுமொழி பேசும் மக்களும் பேச்சுத்தமிழ் கற்கும் வகையில் இணையவழி பேச்சுத்தமிழ் கற்கும் வாய்ப்புகளைத் தமிழக அரசு உருவாக்கித்தரக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த வாய்ப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி. ஏற்பாட்டாளர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
தமிழால் இணைவோம்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நிகழ்ச்சியை இணையம் வழி காண இங்கே செல்க.
https://fb.watch/au59ueQu_j/
https://youtu.be/McFlZxj51xs