Home Magazine மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 28 [ஜனவரி – 2022]

மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 28 [ஜனவரி – 2022]

by admin
0 comment
மின்தமிழ்மேடை – காட்சி 28 – ஜனவரி – 2022 வெளியீடு
இதழை கூகுள் புக்ஸ் தளத்தில் படிக்க: http://books.google.com/books/about?id=VsVZEAAAQBAJ

தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 28 [ஜனவரி – 2022]

வணக்கம்.
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“மின்தமிழ்மேடை”
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

கடந்த ஏழு ஆண்டுகளாக, காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

காலாண்டிதழ் வரிசையில் இந்த “28 ஆவது மின்தமிழ்மேடை” இதழும் பொது மக்கள் வாசிப்பிற்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது
“தமிழால் இணைவோம்… தமிழ் வளம் காப்போம்…”
என்பதாகும்.

மின்தமிழ்மேடை – காட்சி 28 – ஜனவரி – 2022 வெளியீடு
இதழை கூகுள் புக்ஸ் தளத்தில் படிக்க: http://books.google.com/books/about?id=VsVZEAAAQBAJ

பொறுப்பாசிரியர்: முனைவர் தேமொழி

தலையங்கம்: தமிழால் இணைவோம்… தமிழ் வளம் காப்போம்…

வணக்கம்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. (குறள்: உழவு -1036)

அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
புதிய ஆண்டில் காலெடுத்து வைக்கின்றோம். இந்த ஆண்டு நம் அனைவருக்குமே வாழ்வில் வளத்தையும் சிறப்பையும் வழங்க வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆண்டின் தொடக்கம் மகிழ்ச்சியான செய்தியை நமக்கு அளித்தது.

ஆம். மைசூரில் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்க்கல்வெட்டுகள் தமிழகம் வரவிருக்கின்றன என்ற செய்திதான் அது. இது செய்தியாக மட்டுமில்லாமல், உடனடியாகக் கல்வெட்டுக்களும் ஆரம்பக்கால நிலையில் எடுக்கப்பட்ட மைப்படிகளும் விரைவில் மின்னாக்கம் செய்யப்படவேண்டும். அவை இணையத்தில் வலையேற்றம் செய்யப்பட வேண்டும்; அச்சு நூல்களாக வெளி வரவேண்டும். ஆரம்பத்தில் 60,000 கல்வெட்டுகள் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தமிழகக் கல்வெட்டு ஆய்வாளர்கள் சிலர் அடங்கிய குழு நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வந்து கொடுத்த தகவலுக்குப் பின்னும், தொடர் ஆய்வுகளுக்குப் பின்னும் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய பாதியாகக் குறைந்தது என்பதை நீதிபதி அவர்களின் அறிக்கை வெளிப்படுத்தியது. ஆக, இச்சூழலில் உடனடியாகக் கல்வெட்டுகளை மின்னாக்கம் செய்யும் ஒரு தனிக்குழுவைத் தமிழக அரசின் தொல்லியல் துறை தனிப்பணிக்குழுவாக நியமித்து இப்பணியை இவ்வாண்டே முழுமைப்படுத்தி அச்சு வடிவிலும் இணையத்திலும் இவற்றை முதலில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

இதனை அடுத்து ஜனவரி 12ஆம் தேதியை தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நாள் எனப்பிரகடனப்படுத்தியது. இந்த நாளில் அயலகத் தமிழர்களின் நலன்காக்க நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். நிகழ்ச்சியில் உலகளாவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 அக்டோபர் மாதம் தொடங்கி நமது செயல்பாடுகளில் சிலவற்றை நினைவு கூர்வோம்;
-சங்க கால நாகரீகம் பற்றிய சான்றுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொற்பனைக்கோட்டை பகுதிக்குச் சென்று அப்பகுதியைப் பற்றிய தகவல்கள் சேகரித்ததோடு அதன் அருகாமை பகுதியில் தொல்பழங்கால ஈமச் சடங்குகள் தொடர்பான இடங்களையும் பார்த்துப் பதிவு செய்து வந்தது தமிழ் மரபு அறக்கட்டளை குழு.

-கீழடி அகழாய்வுக் களத்திற்கு நேரடியாக மாணவர்களையும் அழைத்துச் சென்று ஒருநாள் மரபுப்பயணத்தின் வழி தொல்லியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது நமது குழு.

-அக்டோபர் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை குழுவினர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளையினர் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அத்துடன், மதுரை ரயில் நிலையத்திலிருந்து கடந்த காலங்களில் நீக்கப்பட்ட மீன் சின்னத்தை மீண்டும் பொறிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். அதனை உடனடியாகச் செயல்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

-உலக மரபு வார விழா வாரத்தை 2021, நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை என யுனெஸ்கோ நிறுவனம் பிரகடனப்படுத்தி இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு வரலாற்று ஆய்வுரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாள் நிகழ்வும் ஒரு சிறப்பு அம்சத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ந்ததன் வழி மிக முக்கிய ஆவணங்களாக இந்த ஆய்வுரைகள் உருவாக்கம் கண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் யூட்யூப் வலைப்பக்கத்திலும் அவை இணைக்கப்பட்டன.

-டிசம்பர் மாதத் தொடக்கம் ஐரோப்பியத் தமிழர் நாள் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனியின் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை 2 ஐம்பொன் சிலைகள் வைத்து திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் ஐரோப்பியத் தமிழர் நாள் விழா தமிழ் மரபு அறக்கட்டளையினால் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் லிண்டன் அருங்காட்சியகத்திலிருந்து நேரலையாக அருங்காட்சியகப் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

-இலங்கையின் மூதறிஞர் எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் நினைவாக உலகளாவிய வகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அக்கினிக்குஞ்சு வார இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் இணைந்த வகையில் உலகப் பேரறிஞர்கள் பலரது உரைகளுடன் இருநாள் கருத்தரங்கம் இம்மாதம் நடைபெற்றது. மூதறிஞர் எஸ்.பொ. அவர்களைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களைத் தற்கால இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி பயனுள்ள வகையில் அமைந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் வெளியீடாக புதிய நூல்,வரலாற்றில் பொய்கள்` வெளியீடு கண்டது. நமது ஆய்வு நூல்கள் வெளியீட்டின் வரிசையில் இந்த நூலும் இணைகின்றது.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

You may also like