Home Events மறையூர் கேரளா தொல்லியல் சின்னங்கள் வரலாற்றுப் பயணம்

மறையூர் கேரளா தொல்லியல் சின்னங்கள் வரலாற்றுப் பயணம்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து ஏப்ரல் 17, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்த ‘மறையூர் கேரளா தொல்லியல் சின்னங்கள்’ வரலாற்றுப் பயணத்தில் மிக முக்கியச் சின்னம் இது. பெருங்கற்காலப் பாறை ஓவியங்கள்,  இது கேரளா சின்னாறு வனத்துறை பகுதியில் அமைந்துள்ளது.

இந்தப் பெருங்கற்காலப் பாறை ஓவியங்களை ஒத்த அமைப்பில் அமைந்த ஓவியங்கள் பிரான்ஸ், இந்தோனேசியக் காடுகள், ஸ்பெயின் நாட்டின் கனேரியத் தீவுகள் எனப் பல பகுதிகளில் உள்ளன என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். தமிழ் நாட்டிலும் இத்தகைய ஓவியங்கள் சிலவற்றை தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்கனவே பதிவு செய்து வெளியிட்டு உள்ளோம்.

மிகத் தெளிவான வகையில் அமைந்திருக்கும் விலங்குகளின் ஓவியங்கள் இங்கே பாறைகளின்மேல் கீறப்பட்டுள்ளன.  இந்திய வரலாற்றுச் சின்னங்களில் முக்கியத்துவம் பெறுகின்ற வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று. ஆனால் தகுந்த பாதுகாப்பு இங்கே இல்லை என்பதே எங்களோடு விளக்கமளிக்க வந்திருந்த வனத்துறை அதிகாரியின் ஆதங்கமாக இருந்தது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப்பன்றி பாறை ஓவியம் இன்றைக்கு 45 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. இதைத்தவிர ஸ்பெயின் நாட்டில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் பிரான்சில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகியவை காலத்தால் பழமையானவை என்று கருதப்படுகின்றன.

இங்கு கேரளாவின் ஆலம்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள இப்பாறை ஓவியம் நிச்சயமாகக் காலக் கணக்கெடுப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் இதன் தொன்மை அறியப்படும். ஆயினும் இது வரை இதன் காலக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று எங்களுடன் பயணித்து வந்த வனத்துறை அதிகாரி குறிப்பிட்டார். இதன் அமைப்பைக் காணும் போது ஏறக்குறைய 40,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியமாகக் கூட இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

— சுபா

ஏப்ரல் 17, 2022

You may also like