Home THFi News தமிழரின் மரபு விளையாட்டான ‘ஏழுகல்’ விளையாட்டு

தமிழரின் மரபு விளையாட்டான ‘ஏழுகல்’ விளையாட்டு

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
தமிழரின் மரபு விளையாட்டு ‘ஏழுகல்’
https://youtu.be/Bdupf0gF_w8

ஏழுகல் என்பது தமிழகத்தின் மரபு விளையாட்டுகளில் ஒன்று. சற்றொப்ப ஒரே அளவுள்ள, கொஞ்சம் உருண்டையான சிறிய கூழாங்கற்களை ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தி விளையாடும் சிறுவர்களின் விளையாட்டு. தட்டாங்கல் ஆட்டம் எனவும் இதைக் கூறும் வழக்கம் உண்டு. சங்ககாலத்தில் இதன் பெயர் தெற்றி. வெவ்வேறு எண்ணிக்கையில் கற்களும், விளையாட்டு வகைகளும், ஆட்டத்தின் போது பாடப்படும் பாடல் வகைகளும் பல வழக்கத்தில் உள்ளன.

பொதுவாக ஏழுகல் ஆட்டமுறையை பலர் அறிந்திருப்பர். ஏழு கற்களையும் கீழே விரித்தவாறு தரையில் போட்டுவிட்டு அவற்றில் ‘தாய்ச்சிக்கல்’ என்று ஒரு கல் தேர்வு செய்யப்படும். தாய்ச்சிக் கல்லை மேலே தூக்கிப்போட்டுவிட்டு அது கீழே வருவதற்குள், தரையில் கிடக்கும் கற்களில் ஒன்று, இரண்டு, மூன்று என ஆடப்போகும் ஆட்டத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சரியான எண்ணிக்கையில் தேவையான கற்களைக் கூட்டி எடுத்து கீழேவிழும் தாய்ச்சிக் கல்லுடன் சேர்த்துப் பிடிக்க வேண்டும். காய்களைத் தவற விடாமலும் பிற கற்கள் அலுங்காமலும் விளையாடவேண்டும் என்பது விதி. தவறினால் அடுத்தவர் முறையாக விளையாட்டு தொடரும்.

விளையாடும்போது எண்ணிக்கைக்கு ஏற்ப பாடல்கள் பாடப்படுவதுண்டு. பாடப்படும் பாடல்கள் ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான், ஐந்தான், ஆறான், ஏழான், எட்டான், ஒன்பதான், பத்தான், கட்டை என்று ஆட்டம் நிறைவுறும். பொதுவாக வழக்கத்தில் பலர் அறிந்த பாடல்களும், இட்டுக்கட்டிப் பாடல் பாடப்படும் பாடல்களும் உண்டு. இக்காணொளியில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் ஏழுகல் விளையாட்டை விளையாடிக் காண்பிக்கிறார்கள். முனைவர் பாப்பா எண்ணிக்கைக்கு ஏற்ப பாடல்களைப் பாடிக் காட்டுகிறார்.

You may also like