தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
https://youtu.be/mxvJSiXEn1E
களிமண் கைவினை பொருட்கள்
நாட்டார் மரபு கைவினைக் கலைப் பொருட்களில் ஒரு வகை களிமண்ணால் செய்யப்படுபவை. இது மிகவும் பழைமை வாய்ந்த கலை என்பதற்குச் சான்றாக இன்று தொல்லியல் அகழாய்வுகளில் மண்பாண்டப் பொருட்கள், சுடுமண் சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்று வருவதைக் கூறலாம். மண்சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை ‘மண்ணீட்டாளர்’ என்றும் ‘ வேட்கோவர்’ என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. ‘மண்மாண் புனைபாவை’ என்று சுடுமண் சிற்பங்கள் குறிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மண்ணாலான புழங்கு பொருட்களான மண் சட்டி, பானை, அடுப்பு, தோண்டி, குடம், கலயம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூந்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களோடு சுடுமண் சிற்பங்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர் இக்கைவினைஞர்கள். மண் சார்ந்த இக்கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்களாக மட்டுமின்றித் தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் பிரிக்க முடியாத கூறாகவும் அமைந்துள்ளன.
சென்னை கைவினைக் கலைப் பொருட்கள் கடை ஒன்றில் மட்பாண்டம் செய்யும் முறை, அவற்றுக்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றைக் காணொளியாக ஆவணப்படுத்தியுள்ளனர் தமிழ்மரபு அறக்கட்டளை குழுவினர். இதற்கு உதவிய ‘குயவன் மண்டபம்’ கோபிநாத் குழுவினருக்கு நன்றி.
