Home Events அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபு விளையாட்டுகள் அறிமுகம்

அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபு விளையாட்டுகள் அறிமுகம்

by admin
0 comment

ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகமும் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும்  இணைந்து நடத்தும் அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபு விளையாட்டுகள் அறிமுக விழா. 

ஜெர்மனியின் லிண்டன்  அருங்காட்சியகத்தில் அக்டோபர்  8, 2022 அன்று தொடங்கப்பட்ட அகம் புறம் கண்காட்சி, அதாவது தமிழர் வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆறு மாத கால கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

அதற்கு இடையே இதே அருங்காட்சியகத்தில் தமிழர் பாரம்பரிய கூறுகள், ஆய்வுகள் என்ற நிலையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக அக்டோபர் 22, 2022 அன்று  ஸ்டுட்கார்ட் தமிழ்ச்சங்கம், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பில் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழர் மரபை வெளிப்படுத்தும் விளையாட்டுகளைப் புதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது.

இதில் இப்பகுதியில்  வாழும் தமிழ் மக்கள் குடும்பங்களாகக் குழந்தைகளுடன் வந்திருந்தது சிறப்பு. மரபு விளையாட்டுகள் நிகழ்ச்சியை ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்லாங்குழி, பம்பரம், கல்லாங்காய், தாயம், ஆடுபுலி ஆட்டம், நொண்டி போன்ற விளையாட்டுகளை மக்கள் விளையாடி பயிற்சி எடுத்து மகிழ்ந்தனர்.

காணொளி: https://www.facebook.com/subashini.thf/videos/649100969931072/

இந்தத் தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு வந்திருந்த அயல்நாட்டினரும் பல்லாங்குழி, தாயம், பம்பரம், நொண்டி போன்ற விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். இங்குப் பிறந்து வாழ்கின்ற குழந்தைகள் பலருக்கு முதன்முறையாக அறிந்து கொள்ளக்கூடிய தமிழ் விளையாட்டுக்கள் என்பதாகவும் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

சினிமா சிந்தனைகளும் பாடல்களும் நடனங்களும் மட்டுமே தமிழர் நிகழ்ச்சிகளை அலங்கரிக்கின்ற இக்காலச் சூழலில் இத்தகைய தமிழர் மரபு விளையாட்டுகளையும் இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி அவர்களை விளையாட வைத்து அறிமுகம் செய்வதற்கு இத்தகைய முயற்சிகள் அவசியமாகின்றன.

தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கையில் இருந்தும் நீண்ட தூரம் புலம்பெயர்ந்து வந்து பல்வேறு காரணங்களுக்காக வாழ்கின்ற தமிழ் மக்கள் ஐரோப்பாவில் தங்கள் வேர்களை மறந்து விடாமல் அவற்றை அறிந்து கொண்டு வாழ்வது மன நிறைவளிக்கும் ஒன்றாகும். தமிழ் மொழி, தமிழ் வரலாறு, தமிழ்ப் பண்பாடு – இவை மூன்றுமே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மிக முக்கியமாகும். அவற்றை இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

மரபு விளையாட்டுக்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவோம்… நாமும் விளையாடுவோம்.

You may also like