தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் வட்டெழுத்து மற்றும் ஓலைச்சுவடி வாசிப்புப் பயிலரங்கம், டிசம்பர் 10, 11, 2022 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அரங்கில் நடைபெற்றது.
முதல்நாள் கல்வெட்டுகளில் வட்டெழுத்து குறித்து கல்வெட்டு அறிஞர்கள் டாக்டர் மார்க்சிய காந்தி, டாக்டர் பத்மாவதி அவர்களும்; மறுநாள் ஓலைச்சுவடியியல் குறித்து தொல்லியல்துறை அறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் முனைவர் கோ.உத்திராடம் அவர்களும் பயிற்சி வழங்கினார்கள்.
வட்டெழுத்து மற்றும் கல்வெட்டுப் பயிற்சி – நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய திரு ஆர் பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. அவர்கள் சிறப்புரை வழங்கி, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்படும் பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களது கணிதவியல் நூலை வெளியிட்டார். வருகின்ற ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனைக்கு வரும் இந்த நூல் சமகாலச் சூழலில் தமிழில் அறிவியல் மற்றும் கணிதவியல் நூல்கள் மிகக் குறைவு என்ற குறையை நீக்கும்.