Home Events அயலகத் தமிழர் நாள்-2023 — தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி உரை

அயலகத் தமிழர் நாள்-2023 — தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி உரை

by admin
0 comment

அயலகத் தமிழர் நாள்-2023 — தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி உரை
https://youtu.be/T69UQjYUO78
“““““““““““““““““““““““““““““““`

சென்னை கலைவாணர் அரங்கத்தில்,  11.01.2023 (புதன்)  மற்றும் 12.01.2023 (வியாழன்)   ஆகிய நாட்களில் நடந்த  தமிழ்நாடு அரசு 2ஆம் ஆண்டு அயலகத் தமிழர் நாள்  2023  விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் வழங்கிய உரை . . .

அயலகத் தமிழர் தினம் 2023
முனைவர் க.சுபாஷிணி உரை (தலைவர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மணி.
நாள் 11.01.2023 கலைவாணர் அரங்கம் சென்னை, தமிழ்நாடு)
· மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களே,
· மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே
· அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ் இ ஆ ப. அவர்களே
· மற்றும் இந்த அரங்கில் உரையாற்ற வந்திருக்கும் ஏனைய அறிஞர் பெருமக்களே, அவையில் அமர்ந்திருக்கும் தமிழ் உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.. எனது பெற்றோர் கடந்த 200 ஆண்டு கால வாக்கில் மலாயாவிற்கு வணிகம் செய்ய புலம் பெயர்ந்தவர்கள். நான் மலேசியாவின் பினாங்குத் தீவில் பிறந்து அங்கேயே கல்வி கற்று பின்னர் உயர்கல்விக்காக ஜெர்மனிக்கு வந்து கடந்த 22 ஆண்டுகளாக ஜெர்மனியில் கணிணித்துறையில் பணியாற்றி வருகின்றேன். உலகளாவிய வகையில் தமிழ் ஆவணங்களையும் மரபுச் செல்வங்களையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாத்து ஆய்வுகளுக்கு உட்படுத்தும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு என்ற ஓர் ஆய்வு நிறுவனத்தை நிறுவி, அது இன்று தமிழ்நாடு, மலேசியா, இலங்கை, ஐரோப்பா ஆகிய இடங்களில் கிளைகளுடன் உலகளாவிய தமிழ், வரலாறு மற்றும் ஆவணப்பாதுப்பு நடவடிக்களை இலவசமாக ஆய்வு நோக்கில் செயல்படுத்தி வருகின்றது எமது அமைப்பு.

இத்தருணத்தில் என் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

கடந்த 300 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்கு, குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ நாடுகள் மற்றும் தீவுகளுக்கும், பிரெஞ்சு காலனித்துவ தீவுகளுக்கும் மற்றும் நாடுகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களாகவும் அங்கு பொருளாதாரத்தை மேம்படுத்த கூலித்தொழிலாளிகளாகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்று இப்புதிய நிலப் பகுதிகளில் தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டு தனித்துவம் வாய்ந்த, ஆனால் தமிழ் வேர்களை மறக்காத வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 100 ஆண்டுகள் காலகட்டத்தில் ஐரோப்பாவிற்குக் குடிபெயர்ந்த தமிழ்நாட்டினர் பெரும்பாலும் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டிற்காகப் புலம்பெயர்ந்தவர்கள். இலங்கையில் நடைபெற்ற தொடர்ச்சியான போரின் காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றார்கள். ஆக தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் இப்படி புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இரண்டாம் தலைமுறையினர் இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்கக எண்ணிக்கையிலும் என்ற வகையில் வாழ்கின்றனர். மொழி, பண்பாடு ஆகிய இரண்டு கூறுகளும் அந்தந்த நாடுகளில் வழக்கில் உள்ள மொழிகள் மற்றும் பண்பாட்டுக் கூறுகளுடன் கலந்து தனித்துவத்துடன் இவர்கள் வாழ்க்கை முறையாக மாறிவிட்ட போதிலும் கூட தமிழ்நாடு அனைவருக்கும் தாய் நாடாகத்தான் திகழ்கிறது. அந்த வகையில் பண்பாட்டு ரீதியிலான தேவைகளுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பும் ஆதரவும் ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு முக்கிய தேவையாக அமைகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐரோப்பா விற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பண்பாட்டு தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இரண்டு திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகளை ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவினோம்.

அதே 4.12. 2019 நாளை ஐரோப்பிய தமிழர் நாள் எனப் பிரகடனப்படுத்தி 2019 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய தமிழர் நாள் விழாவை இதே நாளில் கொண்டாடி வருகின்றோம். இந்த மாபெரும் பண்பாட்டு நிகழ்வின் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனியில் உள்ள பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தோடு இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளை தமிழின் சிறப்புகளை உலகளாவிய மக்களுக்கும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் ஜெர்மானிய மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் ’அகம் புறம்’ என்ற தலைப்பில் ஆறு மாத கண்காட்சியை இணைந்து தொடங்கி வைத்தோம். இந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் வளர்ச்சித் துறை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறைகளின் அமைச்சர் மாண்புமிகு திரு தங்கம் தென்னரசு அவர்களும் அறநிலையத்துறை மற்றும் அருங்காட்சியங்கள் துறையின் செயலர் டாக்டர் சந்திரமோகன் அவர்களும் நேரில் வந்து கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவை சிறப்பித்ததோடு அதே நாளில் தமிழக அரசின் அருங்காட்சியகங்களுடன் இணைந்து, லிண்டன் அருங்காட்சியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து தந்தோம் என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.

இந்த மாபெரும் முயற்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களின் நிலையை மேம்படுத்தவும் அதிலும் குறிப்பாக அரும்பொருட்களின் பட்டியல்களை முறையாக கணினி மயப்படுத்தி ஆவணப்படுத்தி வைக்கும் முறையைத் தொடங்குவதற்கு இந்த முயற்சி தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த முயற்சியை வெற்றிகரமாக ஆக்கித் தருவதற்கு தமிழ்நாடு அரசின் அருங்காட்சியங்கள் துறை இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வில் எங்களது கோரிக்கையாக முன் வைக்கின்றோம்.

உலகம் முழுவதிலும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இச்சூழலில் தமிழ் மக்களுக்குத் தேவையான நூல்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று சேர்கின்றனவா என்றால் ’இல்லை’ என்பதே நம் முன்னே இருக்கின்ற பதிலாக அமைகின்றது.

எனது தாயகமான மலேசிய சூழலை எண்ணிப் பார்க்கும் போது அங்குத் தமிழ்நாட்டில் வெளி வருகின்ற தரம் வாய்ந்த வரலாறு, சமூகவியல், மானுடவியல், இலக்கியம், நவீன இலக்கியம் போன்ற பல்துறை நூல்கள் அங்கே செல்வதே பெரும் கனவாக இருக்கின்றது. இந்தச் சூழ்நிலை மாற அதற்குத் தமிழ்நாடு அரசு மலேசியா, சிங்கை, இலங்கை போன்ற நாடுகளில் தொடங்கி பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் என புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து அங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படுகின்ற லட்சக்கணக்கான நூல்களில் சில நூல்களாவது உலகத் தமிழ் மக்களுக்கு வந்தடைவதற்கு உதவ வேண்டும் என்றும் இவ்வேளையில் கேட்டுக் கொள்கின்றோம். இந்த முயற்சிக்குத் தொடக்கப் புள்ளியாக மலேசியாவில் புத்தக கண்காட்சியை ஏற்படுத்தி பல்வேறு பகுதிகளில் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூல்களை வாங்கிக் கொள்ள 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு புத்தகக் கண்காட்சியை மலேசியாவில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி, பண்பாடு, சமூகவியல், மானுடவியல் ஆகிய பார்வையில் ஆய்வுகளை முன்னெடுக்க பல பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தமிழ் இருக்கைகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு இருக்கைகளை அமைப்பதை விட, உலகளாவிய பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை முன்னெடுக்க வேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம். இத்தகைய இணைந்த செயல்பாடுகளுக்குப் பெருமளவிளான வாய்ப்பும் ஆர்வமும் ஐரோப்பிய கல்விக்கூடங்களில் தற்சமயம் நிலவுகின்றன என்பதை தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்நாட்டு அரசின் உயர் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.

தமிழ் மொழிக்கும் கிழக்காசிய மொழிகளான இந்தோனேசிய மொழி, மலாய், ஜப்பான், கொரியா, மங்கோலியா போன்ற மொழிகளுக்கும் இடையிலான ஒப்பாய்வுகள் என்பன தற்போது மிக மிகக் குறைந்து வருகின்றன. இத்துறையில் பணியாற்றிய முதுபெரும் அயல்நாட்டு, தமிழ்நாட்டு மற்றும் இலங்கை பேராசிரியர்கள் பலரை நாம் முதுமையின் காரணமாக இழந்து விட்டோம். இத்தகைய துறைகள் தற்சமயம் கவனிப்பாரற்று கிடப்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களும் தமிழ்நாட்டின் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற ஆய்வு நிறுவனங்களும் இத்தகைய முயற்சிகளில் கவனம் செலுத்தி தமிழுக்கும் ஏனைய உலக மொழிகளுக்குமான ஆய்வுகளை முன்னெடுக்க சீரிய முயற்சிகளைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் இந்தச் சூழலில் கவனத்திற்குக் கொண்டுவர தமிழ் மரபு அறக்கட்டளை விரும்புகின்றோம்.

கடந்த 250 ஆண்டுகளாக பிரெஞ்சு காலனித்துவ தீவுகளான மொரிசியஸ், ரியூனியன், பிஜி போன்ற தீவுகள் மட்டுமின்றி தென் அமெரிக்கா அருகே அமைந்துள்ள மார்த்தினிக், குவாதலப், செயின்ட் லூசியா, சுரினாம், கயானா போன்ற தீவு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை நமக்கு முன்னே இருக்கின்ற மாபெரும் கடமையாக தமிழ் மரபு அறக்கட்டளை கருதுகின்றோம். இதற்குக் காரணம், இத்தகைய தீவுகளில் கடந்த 250 ஆண்டுகள் காலகட்டத்தில் தோட்டங்களில் கூலிகளாகப் பணியாற்ற வந்திறங்கிய தமிழ் மக்கள் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் கலந்து தங்கள் தமிழ் பண்பாட்டையும் மொழி அடிப்படைகளையும் இழந்து படிப்படியாக அவற்றை இழந்த நிலை வந்து கொண்டிருக்கிறது. 1940 களின் இறுதியில் இப்பகுதிகளுக்கு பயணம் செய்து இத்தீவுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலையைப் பற்றி ஆராய்ந்து தகவல்களை ஆவணப்படுத்திய தனிநாயகம் அடிகளார் அக்கால கட்டத்திலேயே இங்கு வாழும் தமிழ் மக்கள் தமிழ் பண்பாட்டினை இழந்து வருகின்ற ஒரு அபாயகரமான சூழலில் இருப்பதையும், ஆனால் தமிழ் மொழியைக் கற்பதிலும் தமிழ் பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுப்பதற்கும் மிகுந்த ஆவலுடன் இருப்பதையும் தனது ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அண்மைய நிலையைக் காணும் போது தமிழ் மொழியை பேசுகின்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து பத்துக்கும் குறைவானவர்களே என்ற வகையில் இந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை நிலை அமைந்திருக்கின்றது. இதனை மிக முக்கியமான ஒரு தேவையாகக் கருதி தமிழ்நாடு அயலக தமிழர் நலன் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இத்தீவுகளுக்கான சிறப்பு திட்டங்களை வகுத்து இங்கு வாழ்கின்ற மக்களுக்குத் தமிழ் மொழி, பண்பாடு ஆகிய கூறுகளைப் பயிற்சிகளாக வழங்குவதற்கும், இப்பகுதிகளுக்குத் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி தமிழ் கல்வி இங்கு படிப்படியாக வேரூன்ற உதவுவதற்கும் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றோம். இத்தகைய பணிகளைத் தொடங்குவதற்கு அடிப்படையான தகவல்களை வழங்கவும் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளில் இணைந்து செயலாற்றவும் தமிழ் மரபு அறக்கட்டளை ஆவலுடன் இருக்கின்றோம் என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட்டு கொள்கின்றேன்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாங்கள் எங்கள் கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டுவர அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்து தந்திருக்கும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு. க ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்களுக்கும் குறிப்பாக அயலக நலன் துறையினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் வணக்கங்களும்.

அன்புடன்
முனைவர் க சுபாஷிணி

You may also like