வேதாரண்யம் என்கின்ற பெயரை அதன் மூல தமிழ்ப் பெயருக்கு மாற்றம் செய்ய கோரிக்கை
சங்கத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்த வாய்ப்பு அமைத்துத் தரும் வகையில் சங்கத் தமிழுக்கான தொடரடைவுகள் மற்றும் அருஞ்சொல் அகராதி சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை மிக நீண்ட காலமாக நம் பேராசிரியர் பாண்டியராஜா அவர்கள் அரும்பாடு பட்டு தயாரித்துத் தந்துள்ளார். இவற்றை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் சங்கம்பீடியா என்ற பெயரில் தனித்தளமாக உருவாக்கி வருகின்றோம். இந்த வலைப் பக்கத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழ் மரபு அறக்கட்டளை யோசித்து வருகின்றோம். அது தொடர்பாகப் பேசுவதற்காக இன்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சென்று சந்தித்தோம்.
அப்போது இச் சங்க இலக்கிய களஞ்சியத்தின் இணைய வலைப்பக்கத்தை தமிழ்நாடு அரசின் முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு ஆவண செய்வதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
வேற்று மொழி பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஊர்களுக்கு அதன் மூல தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம். அதன் அடிப்படையில் வேதாரண்யம் என்கின்ற பெயரை அதன் மூல தமிழ்ப் பெயருக்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து கடிதத்தை அமைச்சரிடம் வழங்கினோம்.
வேதாரண்யம் ஊருக்கான தமிழ்ப் பெயர் மூல சான்றுகளை வழங்க உதவிய டாக்டர் செல்வகுமார், டாக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் முனைவர் தேமொழி ஆகிய மூவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
முனைவர் க.சுபாஷிணி,
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்