Home Events மரபுப்பயணம் – உசிலம்பட்டி

மரபுப்பயணம் – உசிலம்பட்டி

by admin
0 comment

“உசிலம்பட்டி பகுதியில் தொல்குடி மரபணு குடும்பத்தினருடன் ஆய்வாளர்கள் சந்திப்பு”

உசிலம்பட்டி பகுதியில் தொல்லியல் சார்ந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்மரபு அறக்கட்டளை நிர்வாகிகள், தொல்குடி மரபணு கொண்ட ஜோதிமாணிக்கம் விருமாண்டி குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.

உசிலம்பட்டி பகுதியில் 3000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன. மனித நாகரீகம் துவங்கிய காலத்தில் ஆப்ரிக்க கண்டத்தில் இருந்த மரபணுவை ஒத்த விருமாண்டி குடும்பத்தினர் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளனர். அவர்களை ஆய்வாளர்கள் சந்தித்னர்.

ஆஸ்திரேலிய பழங்குடிகள் பயன்படுத்தும் வளரி (பூமாராங்) ஆயுதத்தை, இப்பகுதியின் கருமாத்தூர் மக்கள் கோயிலாங்குளம் பட்டசாமி கோயிலில் காணிக்கையாக அளித்து வழிபடுகின்றனர். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கி.பி., 9ம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுகளைக் கொண்ட ஆனையூர் மீனாட்சியம்மன் ஐராவதேஷ்வரர் கோயில், வகுரணி சந்தைப்பட்டி மூன்றுமலைப்பகுதி புலிப்பொடவு குகைக்குள் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை பார்வையிட்டனர்.

அய்யப்பன் எம்.எல்.ஏ., அறக்கட்டளை தலைவர் சுபாஷிணி, மரபணு ஆய்வாளர் பிச்சப்பன், பெருங்காமநல்லூர் மாயக்காள் அறக்கட்டளை தலைவர் செல்வபிரீத்தா, கண்ணன், பேராசிரியர்கள் பாப்பா, இறைவாணி, எழுத்தோவியர் நாணா, ஆசிரியர்கள் பாமா, சேகர், தட்சிணாமூர்த்தி ஆய்வில் பங்கேற்றனர்.

இந்தப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.  பொது மக்களும் தங்கள் பகுதியில் காணப்படும் தொல்லியல் சான்றுகளை பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் முன்வர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

தினமலர் செய்தி – https://m.dinamalar.com/detail-amp.php?id=3307286


இந்தியாவின் முதல் மனிதன் தமிழன் விருமாண்டி செர்மன்குழு பெருமிதம்

https://youtu.be/CcXwClOZwts

தமிழ் ஒளி தொலைக்காட்சி


உசிலம்பட்டிக்கு ஏப்ரல் 28, 2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் மரபுப் பயணம் மேற்கொண்டனர்.

உசிலம்பட்டி – ஏராளமான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டிருக்கும் ஓர் ஊர். அதற்கு அருகே உள்ள முதலைக்குளம் பகுதியில் ஒரு குன்றுப் பகுதியில் சமணர் குகைகள் உள்ளன. அங்கு தமிழ் கல்வெட்டுக்களும் தொல் குறியீடுகளும், கற்படுக்கைகளும் இருக்கின்றன.
இதன் பாறைகளின் அழகு பிரமிக்க வைக்கின்றது. இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி.

உசிலம்பட்டி பல தொன்மைச் சிறப்புகள் கொண்ட பகுதி. ஏராளமான தொல்லியல் சின்னங்கள் இங்கே இருக்கின்றன. அதில் மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டியது வகுருணி குன்றுப்பகுதி.இங்கு பண்டைய பாறை குறியீடுகள் உள்ளன. சிவப்பு நிறத்தால் கீறப்பட்ட ஒரு உருவமும் அதன் மேலும் அருகாமையிலும் ஏராளமான வெள்ளை கோடுகளால் தீட்டப்பட்ட உருவங்களும் உள்ளன. முழு சந்திரன் படிப்படியாக ஒவ்வொரு நாளாகக் குறைந்து தேய்பிறையாக மாறுவதைக் காட்டும் பாறைச்சித்திரம் ஒன்றும் உள்ளது.மிக வருத்தத்திற்குரிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த குகையின் மையப் பகுதியில் தற்சமயம் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் பாறையில் குங்குமமும் சந்தனமும் போட்டு இக்குகை பகுதியைக் கோயிலாக மாற்றி இருக்கிறார்கள் சிலர். தொல்லியல் சிறப்புமிக்க இப்பகுதியை மக்கள் வழிபாட்டுப் பகுதியாக மாற்றுவது தவறான ஒரு செயலாகும். இங்கு வருகின்றவர்கள் இந்த பாறை ஓவியங்களின் மேல் கைகளை வைத்து இவற்றைச் சிதைக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு பண்டைய குறியீடுகள் பற்றிய தெளிவு இல்லாத சூழல் இருப்பதால் இங்கு உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்ற கோயில் மற்றொரு பகுதிக்கு மாற்றி வைக்க வேண்டியது மிக மிக அவசியம். அதுமட்டுமின்றி தொல்லியல் துறை இப்பகுதியைப் பாதுகாத்து இதனை வரலாற்றுத் தொன்மை மிக்க ஒரு பகுதியாக அறிவிக்கவும் வேண்டும்.இப்பகுதியில் கள ஆய்வு நடத்திய டாக்டர் காந்திராஜன் அவர்களது உதவியாளர்களும் அவரது நண்பர்களுமான திரு பாலசுப்பிரமணியன் திரு மதிவாணன் ஆகியோர் இன்று எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினருக்கு இப்பகுதியைச் சுற்றிக் காட்டி விளக்கம் தந்து உதவினர். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தகைய பகுதிகள் சிதிலமடைந்து வருகின்றன.ஆகவே உடனடியாக இப்பகுதி. பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும், மதுரை உசிலம்பட்டி வட்டம் கோவிலாங்குளம் பகுதியில் உள்ள வித்தியாசமான ஒரு கோயில் இது. பட்டவன் சாமி என அழைக்கப்படுகின்ற இந்தக் கோயிலில் வளரி மற்றும் கருங்காலி கம்பு ஆகிய போர் கருவிகள் வழிபாட்டுச் சிறப்புக்குரியதாக அமைந்துள்ளன.

முனைவர் க. சுபாஷிணி தலைவர்,

தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like