
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சென்னையின் வரலாற்றுச் சின்னங்களின் சிறப்புக்களைப் பற்றி பேசுவதற்கும் நேரில் சென்று பார்த்து வருவதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இந்த ஆண்டும் அதே வகையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சென்னையில் உள்ள இரண்டு அருங்காட்சியகங்களுக்கு மரபுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
- காலை 9:30-12:00 ஏவிஎம் திரைப்பட அருங்காட்சியகம்
- மதியம் 2:30-4:00 – கோட்டை அருங்காட்சியகம்
ஏவிஎம் புரொடக்க்ஷன்ஸ்.. தமிழ் திரைத்துறை உலகில் மறக்க முடியாத, பிரிக்க முடியாத ஒரு நிறுவனம். அதன் அருங்காட்சியகம் இந்த ஆண்டு திறக்கப்பட்டது. காலையில் ஏவிஎம் அருங்காட்சியகம் பார்வையிடல் நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படக் கலைஞர் தோழர் போஸ் வெங்கட் அவர்கள் நேரில் வந்திருந்து ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றியும் தனது திரைப்பட அனுபவங்கள் பற்றியும் வந்திருந்த வரலாற்று ஆர்வலர்களுக்குத் தகவல்கள் பகிர்ந்து கொண்டார். அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்களைப் பரிசாக வழங்கி மகிழ்ந்தோம்.


மதியம் கோட்டை அருங்காட்சியகம் பார்வையிடப்பட்டது. கோட்டை அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மிக முக்கியமான ஒரு அருங்காட்சியகமாகும். இதன் வரலாற்றுச் சிறப்புக்கள் நீண்ட பட்டியலாக அமைகிறது.
இங்குதான் இந்திய நாட்டின் முதலாம் சுதந்திர நாள் அன்று ஏற்றப்பட்ட கொடி பாதுகாக்கப்படுகின்றது.
1914, செப்டம்பர் 22ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து வந்த எம்டன் போர்க்கப்பல் அன்று மெட்ராஸில் குண்டு போட்டது. அந்த குண்டின் ஒரு பகுதி இங்கு பாதுகாக்கப்படுகிறது.
காலனித்துவ கால காசுகள் ஓவியங்கள் அதிகாரிகளின் உடைகள் போர் கருவிகள் பட்டயங்கள் கடிதங்கள் சிற்பங்கள் ஏராளமானவை இங்கு உள்ளன.
இந்தக் கோட்டை அருங்காட்சியகத்திற்கு ஏறக்குறைய 500 மீட்டர் தூரத்தில் இருக்கின்றது செயின்ட் மேரு தேவாலயம். இங்குள்ள 124 கல்லறை கல்வெட்டுகளில் ஒன்று தமிழில் அமைந்தது. தானியப்ப முதலியார் என்பவரைப் பற்றிய கல்லறை குறிப்புகளும் இங்கு உள்ளன.
ராபர்ட் கிளைவின் திருமணம் இங்கு தான் நடைபெற்றது.
மெட்ராஸின் முதல் கலங்கரை விளக்கம் இங்குதான் அமைக்கப்பட்டது, எண்ணெய் விளக்குடன் இந்த கலங்கரை விளக்கம் அன்று செயல்பாட்டிலிருந்தது.
இப்படி ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை தன்னுள்ளே கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பகுதி இந்த வெள்ளை நகரம் எனப்படும் கோட்டை பகுதிக்குள் அமைந்திருக்கின்றது.


தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்த மெட்ராஸ் தின விழா சிறப்பு நிகழ்ச்சியான மரபு நடை மிக நேர்த்தியாக மன மகிழ்வு தரும் வகையில் எல்லோருக்கும் பயன்பெறும் வகையில் நடைபெற்று முடிந்தது. ஏறக்குறைய 35 வருகையாளர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை பொறுப்பாளர்களுடன் இணைந்து நாளின் காலையிலும் மாலையிலும் என இரண்டு அருங்காட்சியகங்களையும் முழுமையாகப் பார்த்து பல்வேறு தகவல்களைப் பெற்றுச் சென்றனர். இந்த இரண்டு அருங்காட்சியக அறிமுக நிகழ்வுகளும் வந்திருந்தோருக்கு மிகுந்த மனமகிழ்ச்சி தரும் வகையில் அமைந்தது என்பது சிறப்பு.
இந்த நிகழ்ச்சியை நிறைந்த ஈடுபாட்டுடன் நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்திய நமது தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்நாடு பொறுப்பாளர் டாக்டர் பாமா, அவருக்கு உதவிய மரபு நடை பொறுப்பாளர் மணி மற்றும் குழுவினர் அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள். ஏற்பாட்டுக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இந்த ஏற்பாடு மற்றும் வழிநடத்துதல் இன்றைய இரண்டு நிகழ்ச்சிகளையும் வந்திருந்த பொதுமக்கள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பல்வேறு செய்திகளைப் பெற்றுச் செல்வதற்கு அவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஆகஸ்ட் 20, 2023