காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலா
ஒரு நாள் மரபு சுற்றுலாவாக, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மரபுப் பயணப் பிரிவினரால் 9.9.2023 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 80 பேர் கலந்து கொண்டார்கள்.
பாண்டிச்சேரியில் இருந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் தனிப் பேருந்தில் இந்த பயணத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை இணைந்து கொண்டார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக கேரளா, பீகார், மத்தியப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா எனப் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டது இந்த பயணத்தை மேலும் சிறப்பித்தது.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ் மரபு மரபு அறக்கட்டளை நண்பர்கள் பலர் இணைந்து கொண்டனர். அத்தோடு காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் போதிதர்மர் மணிமேகலை பௌத்த விகாரை மற்றும் ஜின காஞ்சி பொறுப்பாளர்கள் மதுரை மாவட்ட தொல்லியல் துறை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மேலும் இந்த மரபுப் பயணத்தைச் சிறப்பித்தது.
வந்திருந்த அனைத்து வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஜின காஞ்சி சமணக் கோயிலின் பொறுப்பாளர்கள் மிக அருமையான உணவு பரிமாறி பசியாற்றினார்கள்.
போதிதர்மர் மணிமேகலை பௌத்த விகாரையில் ஏற்பாட்டாளர்கள் புத்த பிக்கு மந்திர உபாசனை ஏற்பாடு செய்திருந்தார்கள். பத்து நிமிடம் விளக்கமும் மந்திரங்கள் ஓதுதலும் என மிக அழகாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோயிலிலும், ஸ்ரீ கைலாசநாதர் கோயிலிலும் சைவ வைணவ வழிபாடு மட்டுமின்றி கோயிலின் பிரம்மாண்டமான சிற்பக் கலையை வந்திருந்த வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் பார்த்து வியந்து மகிழ்ந்தனர். பல்லவர் கால சிற்பக் கலையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் இந்தக் கோயில் பற்றிய விளக்கங்களை தொல்லியல் துறை அறிஞர் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதரன் அவர்கள் மிக எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார்கள்.
திருப்பருத்திகுன்றம் மற்றும் கரந்தை மகாவீரர் ஜினாலயம் ஆகிய இரண்டு சமணக் கோயில்களிலும் உள்ள படைப்பு சிற்பங்கள் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தன. இக்கோயில்களின் கூரை பகுதி சிவப்பு வெள்ளை மஞ்சள் நிறத்திலான ஓவியங்கள் கண்களைக் கவரும் பிரம்மாண்டமான கலைப் படைப்புகள் ஆகும்.
இந்த மரபுச் சுற்றுலாவின் இறுதி அங்கமாக காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பற்றி அறிந்து கொள்ளும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தோம். வந்து கலந்து கொண்ட அனைவரும் நெசவு ஆலையில் பட்டுச் சேலைகள் உருவாக்கப்படுவதை நேரில் பார்த்து கேள்விகள் கேட்டு தகவல்கள் பெற்றுக் கொண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்கள்.
திட்டமிட்ட நேரத்திற்கு மேலாக இந்த நிகழ்ச்சி இரண்டு மணி நேரங்கள் கூடுதலாக அமைந்தாலும் வந்திருந்த அனைவரும் பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொண்டு காஞ்சிபுரம் என்ற பல்வேறு சமயங்களின் சங்கமமாக விளங்கும் இந்த தமிழ்நாட்டின் சிறப்புமிக்க வரலாற்று நகரின் சிறப்புகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் புரிந்து கொண்டனர்.
இந்த மரபு பயண நிகழ்ச்சிக்காக நமக்கு உணவை ஏற்பாடு செய்து தந்த ஜினக்காஞ்சி ஜினாலய பொறுப்பாளர்களுக்கும் மதுரை மாவட்ட தொல்லியல் அமைப்பின் பொருளாளர் திரு. சந்தானம் அவர்களுக்கும் திரு. அனந்தராஜ் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல போதிதர்மர் மணிமேகலை பௌத்த விகாரையில் வந்திருந்த அனைவரையும் வரவேற்று மிகச் சிறப்பான ஒரு அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்திருந்த காஞ்சி பௌத்த விகாரையின் பொறுப்பாளர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.





















மரபுப் பயணங்களின் வழி தமிழ் நாட்டின் வரலாற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள தொடர்ச்சியாக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இயங்கி வருகின்றது. இதே போன்ற அடுத்தடுத்து திட்டமிட்ட வரலாற்றுப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. அவை பற்றிய அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறோம்.
அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
9.9.2023