தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் — “திணை” இதழ் 34 [அக்டோபர் — 2023] காலாண்டிதழ் வெளியீடு
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“திணை”.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.
காலாண்டிதழ் வரிசையில் இந்த 34 ஆவது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
“திணை” இதழ் 34 [அக்டோபர் — 2023]
காலாண்டிதழை இணையம் வழி படிக்க:
தமிழ் மரபு அறக்கட்டளை தளத்தில்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2023/10/Thinai-34.pdf
ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர் : குமரன் சுப்ரமணியன்
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
_________________________________________________________________
“உள்ளடக்கம்”
தலையங்கம்
— முனைவர் க. சுபாஷிணி 6
காடும் தமிழும் — சங்க இலக்கியக் கருத்தியல்கள்
— ஆர்.பாலகிருஷ்ணன் 11
அன்பின் ஐந்திணை – முல்லை
— முனைவர் தேமொழி 23
உலக வரலாற்றுச் செய்திகள்
— முனைவர் க. சுபாஷிணி 39
கண்டாச்சிபுரம் அருகே பல்லவர்கால நடுகல்லும் அரிய சிற்பமும்
— ச. பாலமுருகன் 55
ராஜராஜசோழனுக்கு ஓர் புதிய ஓவியம்
— முனைவர் தேமொழி 60
தில்லையம்பதி – வரலாறும், வழக்காறும்
— முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி 66
“ஈனி”
— முனைவர் தேமொழி 85
இலக்குவனார் திருவள்ளுவனின் கலைச்சொல்லாக்க வழிகாட்டி!
— இ.பு.ஞானப்பிரகாசன் 89
இலக்கியச் சிந்தனை
— குமரன் சுப்ரமணியன் 106
அடியாரைப் பாடிய கடவுள் மாக்கவிஞர்
— முனைவர் ஔவை அருள் 108
பரிப்பெருமாள் எழுதிய திருக்குறள் உரை கூறும் மதங்கள்
— முனைவர் தேமொழி 113
கத்தாரை பெரியார் திடலில் கண்டேன்
— இரா.தெ.முத்து 119
இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம், தொகுதி-1: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி 122
காயா: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி 143
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல் — திறனாய்வுகள்
வரலாற்று ஆய்வில் களப்பணிகள்— கடலோடி நரசய்யா 149
இலக்கியமீளாய்வு— அருள் மெர்வின் 153
ராஜராஜனின் கொடை— பீர் முகம்மது 158
தஞ்சையை நோக்கி . . .
— முனைவர் மு.இறைவாணி 161
சென்னை மரபு நடையில் . . .
— முனைவர் ஷாலினி ஜெரால்ட் 186
காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலா
— முனைவர் க. சுபாஷிணி 194
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்வுகள்
— ஜூலை 1, 2023 — செப்டெம்பர் 30, 2023 200
_________________________________________________________________
தலையங்கம்
— முனைவர் க. சுபாஷிணி
வணக்கம்.
தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இன்று பரவலாகத் தமிழ் மக்கள் சூழலில் எழுந்துள்ளது. இந்த ஆர்வத்திற்குப் பயனளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் தற்காலம் வரத்தொடங்கியுள்ளன. அத்தகைய முயற்சிகளில் சிந்துவெளி பண்பாடு, வரலாறு ஆகியன தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து வெளிவரும் நூல் முயற்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதற்கு மிக முக்கியக் காரணம் சிந்துவெளி ஆய்வுத் தளம் கொண்டிருக்கும் சவால்கள். இத்துறையில் ஆய்வு செய்வதற்கு மிக ஆழமான, விரிவான வகையில், கடந்த நூற்றாண்டில் சிந்துவெளி அகழ்வாய்வு பற்றிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த காலம் தொட்டு வெளிவந்துள்ள அறிக்கைகள், ஆய்வுகள், ஆய்வேடுகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது. அது மட்டுமன்றி சிந்துவெளிப் பண்பாடு குறித்த அகழ்வாய்வுச் சான்றுகளும், சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றிய விரிவான ஆய்வுத் தகவல்களும் அதிகமாக இல்லை என்பதும் ஒரு காரணமாகின்றது. எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பண்டைய கிரேக்க எழுத்துக்கள் கொண்ட ரொசெட்டா கல் (Rosetta Stone) உதவியது போல சிந்து சமவெளி குறியீடுகளை நேரடியாகப் புரிந்து கொள்ள இதுநாள் வரை ஒரு சான்று நமக்குக் கிட்டவில்லை. இப்படிப் பல பிரச்சினைகள் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் எதிர்நோக்குகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்தச் சூழலில், சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது திராவிட பண்பாட்டின் அடித்தளத்தின் அடிப்படையில் அமைந்தது என்ற கருத்தினை முன்வைத்து முதலில் ஆங்கிலத்திலும் இவ்வாண்டு தமிழிலும் வெளிவந்திருக்கும் தமிழறிஞர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) அவர்களின் ’ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ எனும் நூல் சிந்துவெளி ஆய்வுகளின் தொடக்கம் தொட்டு விவரிப்பதோடு தமிழ் மக்களின் இடப்பெயர்வு, பண்பாடு ஆகியவற்றின் நூற்றாண்டு கால வரலாற்றை விளக்கும் நூலாக அமைகின்றது. சிந்துவெளி ஆய்வுகளைப் பற்றிப் பேசும் போது தவிர்க்கப்பட முடியாத ஒரு பெயர் சர் ஜான் மார்ஷல்.
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் (19 மார்ச் 1876 – 17 ஆகஸ்ட் 1958) 1902 முதல் 1928 வரை இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பணியாற்றினார். ஹரப்பா மற்றும் மொஹென்ஜோ-தாரோ ஆகிய இரு இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த அகழ்வாராய்ச்சிகளுக்கு அவர் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.
சர் மார்ஷல் இந்தியத் தொல்லியல் துறையை மறுசீரமைத்து அதன் செயல்பாடுகளைப் பெரிதும் விரிவுபடுத்தியவர் என்ற பெருமைக்குரியவர். ஆரம்பத்தில், அவரது தலையாய பணியானது, சிதிலமடைந்த இந்தியக் கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பிற பழங்கால எச்சங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதாக அமைந்தது. அவற்றில் பல நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு, சிதிலமடைந்து கவலைக்கிடமான நிலையிலிருந்தன. சர் மார்ஷல் இந்தியாவில் பணியாற்றிய காலம் இந்திய வரலாற்றில் மிகமுக்கியத்துவம் பெறுகின்ற காலமாகும். இதற்குக் காரணம் அவரது கண்டுபிடிப்புகள் தாம். 1913 ஆம் ஆண்டில், அவர் தக்ஸிலாவில் (இன்றைய பாக்கிஸ்தான்) அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார். இது 21 ஆண்டுகள் நீடித்தது. 1918 ஆம் ஆண்டில், அவர் தக்ஸிலா அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது இன்று பல கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகின்ற சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. பின்னர் அவர் இன்று வரை புகழ்மிக்க அகழாய்வுகளாகத் திகழ்கின்ற புத்த மத மையங்களான சாஞ்சி மற்றும் சாரநாத் உட்பட மற்ற தளங்களின் ஆய்வுகளைப் பொறுப்பேற்று நிகழ்த்தினார்.
1902 ஆம் ஆண்டில், இந்தியாவின் புதிய வைஸ்ராய், லார்ட் கர்சன், சர் மார்ஷலை பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்திற்குள் தொல்லியல் துறையின் இயக்குநராக நியமித்தார். மார்ஷல் அக்காலகட்டத்தில் தொல்பொருளியல் துறை அணுகுமுறையை நவீனமயமாக்கினார், பண்டைய நினைவுச்சின்னங்கள், கலைப்பொருட்களின் பட்டியல் மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சிந்துவெளி நாகரிகத்தை ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள். Illustrated London News ஆய்விதழில் சர் ஜான் மார்ஷல் தனது சிந்து வெளி நாகரிக கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் 20.9.1924 ஆகும்.
இந்த நாள் இந்தியாவின் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் தான் என்ற அன்றைய ஐரோப்பியர் கொண்டிருந்த பார்வையைப் புரட்சிகரமாக மாற்றி இந்திய வரலாற்றின் தேதியை பின்னுக்குத் தள்ளியது; அதுமட்டுமல்ல, தமிழின் பெருமை கூறும் சங்க இலக்கியத்துக்கு வரலாற்று ஆதாரங்களை வழங்கிய ஒரு நாள் என்ற முக்கியத்துவத்தையும் பெறுகின்றது.
உயர்ந்த நாகரிகத்துடன் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகத்தை சர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாளின் நூற்றாண்டை அடைகின்ற பயணம் தொடங்கிவிட்டது. இது தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு நாள். இதனைக் கருத்தில் கொண்டே தமிழ் மரபு அறக்கட்டளை இக்காலாண்டிதழை சர் ஜான் மார்ஷல் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டு பெருமை கொள்கின்றோம்.
சிந்துவெளி அகழாய்வுக் கண்டுபிடிப்பு தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் வழங்கியிருக்கும் பெருமை உலகத் தமிழர் ஒவ்வொருவரும் அறிய வேண்டியதும் இச்செய்தியைப் பரவலாக்க வேண்டியதும் நம் கடமையாகும்!
தமிழால் இணைவோம்!
அன்புடன்
முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
_________________________________________________________________