தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும்; வேலூர் – ஆக்சிலியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும் மாணவர்கள் பயனுறும் வகையில் சில திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நோக்கத்தில் இணைந்து செயல்படுவதற்காக டிசம்பர் 8, 2023 வெள்ளிக்கிழமையன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுவலி ஒலிநூல் திட்டம், நம் ஊர் நம் பெருமை மற்றும் திசை கூடல் ஆகிய மூன்று செயல் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாணவர்களுக்கு ஒலிநூல் உருவாக்கும் முறை குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது .
நிகழ்ச்சியின் படங்கள் சில . . .
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் வேலூர், அக்சிலியம் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து 08/12 /2023 அன்று நடத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுவலி ஒலிப்புத்தகத் திட்டம், “நம் ஊர் நம் பெருமை”, திசைக் கூடல் போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து செயலாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. செயலர் முனைவர் சகோ. ஆ. மேரி ஜோஸ்பின் ராணி, முதல்வர் முனைவர் சகோ. ரா. ஜெயசாந்தி, துணை முதல்வர் முனைவர் சகோ.அ.அமலா வளர்மதி, தேர்வாணையர்,தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் சகோ.ஆரோக்கிய மேரி ஜெயசீலி மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்கள் மாணவியர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர், சகோ.ஆரோக்கிய மேரி ஜெயசீலி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அறிமுகத்தினைச் செய்தார். தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் க.சுபாஷிணி மற்றும் துணைத் தலைவர் நா.கண்ணன் நோக்கவுரை வழங்கினர். 300க்கும் மேற்பட்ட மாணவியர் ஆர்வத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுவலி ஒலிப்புத்தகத் திட்டம், நம் ஊர் நம் பெருமை, திசைக் கூடல் போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
நண்பகல் நிகழ்வில் திசைக்கூடல் கருத்தரங்கம் குறித்த அறிமுகத்தினை திசைக்கூடல் மற்றும் கருத்தரங்கப் பொறுப்பாளர் முனைவர் மு. இறைவாணி வழங்கினார். அடுத்ததாக முனைவர் சுபாஷிணி அவர்கள் சுவலி ஒலிப் புத்தகத் திட்டம் குறித்து அறிமுகம் செய்தார். அதில் மாணவர்களுக்குச் சுவலி ஒலிப்புத்தகத்திட்டக் கையேடு வழங்கப்பட்டது. நாட்டுடைமையாக்கப்பட்ட 150 நூல்கள் pdf வடிவில் வழங்கப்பட்டன. சுவலி பயிற்சித்திட்டப் பொறுப்பாளர் திருமிகு சிந்தியா பாலசுப்பிரமணியம் அவர்கள் zoom இணைய வழியில் சுவலி ஒலிப்புத்தகத்தினை பயன்படுத்தும் முறையினை விரிவாக செயல்படுத்திக் காட்டினார். இந்நிகழ்வில் 120 மாணவர்கள் சுவலி ஒலிப்புத்தகத் திட்டத்தில் செயலாற்றப் பெயரினைப் பதிவு செய்தனர். இம்மாணவியர்களுள் 20 மாணவர்கள் குழுத் தலைமையேற்றனர். இவர்களுக்கு என ஒரு புலனக் குழு உருவாக்கப்பட்டது. தொடர் பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டன.
அதற்கடுத்ததாக, தமிழக அரசின் 2021ஆம் ஆண்டிற்கான கணினித்தமிழ் விருது பெற்ற திரு என். எஸ்.நாணா அவர்கள் கைப்பேசியில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையினை காட்சிப் படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார். அதில் எழுத்துருக்களின் வளர்ச்சி நிலை மற்றும் அச்சு முறை குறித்த அறிமுகத்தினையும் செய்தார். நிகழ்வின் இறுதியாக மாணவியர் பின்னூட்டம் வழங்கினர். சுவலித் திட்டமானது வாசிப்புப் பழக்கத்தையும் நம் குரல் உலகெங்கும் ஒலிக்கச் செய்ய நல்வாய்ப்பினையும் வழங்கும் என்று கூறினர். தமிழ் மரபு அறக்கட்டளையின் சுவலி வலைப்பக்கத்தில் [https://suvali.tamilheritage.org/] அக்சிலியம் கல்லூரிக்கான தனி வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு கல்லூரி நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன [https://suvali.tamilheritage.org/சுவலித்-திட்டத்தில்-வேலூ/]. அக்சிலியம் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் கோ.செந்தில் செல்வி, முனைவர் கே.பி.கனிமொழி இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயலாற்றினார்.
— முனைவர் மு. இறைவாணி