வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…
தமிழ் மரபுத் திணை — 37 [ ஜூலை — 2024] இன்று வெளியீடு காண்கிறது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “தமிழ் மரபுத் திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “தமிழ் மரபுத் திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.
காலாண்டிதழ் வரிசையில் இந்த 37 வது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 37
[ஜூலை — 2024]
இதழை . . .இந்தப் பதிவின் இணைப்பிலும்,
தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தளத்தில்
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2024/07/Tamil-Marabu-Thinai-37.pdf
&
ஆர்க்கைவ்.ஆர்க் இணையத்தளத்தில்
https://archive.org/details/tamil-marabu-thinai-37
இணையம் வழியாகவும் படிக்கலாம்
ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர்கள் :
திரு. குமரன் சுப்ரமணியன்
திரு. அருள் மெர்வின்
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
_________________
உள்ளடக்கம்:
_________________
தலையங்கம் ….. 6
1. பகிர்தல் அறம் ….. 9
2. பேரரசர் அகஸ்டஸ் தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்த இத்தாலி அரண்மனை ….. 12
3. சோழர் கால ”சபா” தேர்தல் சட்டங்களும் – திருத்தங்களும் ….. 17
4. பார்வையிழப்பின் மூவருலா ….. 37
5. வரலாற்றில் போலி செப்பேடுகள் ….. 42
6. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலப் புதைகுழி ….. 62
7. ”குணம் கொல்லாது” ….. 65
8. ஐந்திரம் தமிழ் நூலே! ….. 67
9. மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்! ….. 78
10. தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார் ….. 85
11. ஸ்டீபன் ஹாக்கிங் ….. 90
12. வாசுகி பாம்பு என்று பெயர் வைத்தது சரியா ? ….. 126
13. “கடவுள் துகள்” ….. 138
14. ஒரு திராவிடப்புதிர்: நூல் மதிப்புரை ….. 141
15. “உடல் நலமும் புதிய சிகிச்சை முறைகளும்” : அறிவியல் நூல் அறிமுகம் ….. 147
16. அறிவியல் மருத்துவமும், அதன் விளைவுகளும் பக்க விளைவுகளும் ….. 150
17. அஞ்சல் ஒரு திருப்புமுனை ….. 160
18. ஒலிப்புத்தகங்கள் தமிழ் வளர்க்க உதவுமா?! ….. 168
19. இளையராஜா ஏன் போராடுகிறார்? ….. 172
20. வினையால் வினையாக்கி கோடல்! ….. 187
21. அயல்நாடுகளில் வெளியான தமிழ் இதழ்கள் ….. 189
22. வரலாற்றில் பொய்கள்: நூல் மதிப்புரை ….. 192
23. இலங்கை தோட்டத் தொழிலாளர்களைச் சிறப்பிக்கும் சிறப்பு அஞ்சல்தலை ….. 196
24. டாக்டர் தணிகைமலை அவர்களுக்கு ஜெர்மனியின் மதிப்பு மிகு மருத்துவத்துறை விருது ….. 200
25 . தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சிகள் ….. 203
_________________
வணக்கம்.
உங்கள் அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்று தமிழ் மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் சிறந்த பல பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இன்றைய தலைமுறையினரின் தேவைக்கு உதவும் வகையில் தமிழ் மொழியின் பன்முகத்தன்மை தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று நம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருப்பது “அறிவியல் தமிழ்” என்ற கருத்தாக்கம்.
தொழில்நுட்பம், பொருளாதாரம் இவற்றோடு அறிவியல் கருத்துக்களும் தமிழில் முழுமையாக மக்களிடையே புழக்கத்தில் இருக்கின்ற வகையில் அறிமுகப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். வரலாறு தொல்லியல், மரபணுவியல், வானியல், புவியியல், மருத்துவம், கணினி இயந்திரத்துறை, செயற்கை நுண்ணறிவு என்னும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகளில் இன்று கணிசமான அளவிற்கு தமிழ் மொழியில் அமைந்த படைப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி.
தமிழ் மொழியின் ஆளுமை இலக்கியம் இலக்கணம் வரலாறு என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அடங்கி விடாமல் அதன் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியத் தேவையாகிறது. வளர்ந்து வருகின்ற அல்லது புதிதாக தோற்றம் பெறுகின்ற புதிய துறைகளுக்கான கலைச்சொல்லாக்கம், அத்துறைகளிலான சிறு கையேடுகள், நூல்கள், கட்டுரைகள் ஆய்வு நூல்கள் ஆகியவை உருவாக்கம் பெறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இயற்கையோடு இயைந்த, பண்டைய தமிழ் பண்பாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் தமிழ் பண்பாடு பல பல புறத்தாக்குதல்களை உள்வாங்கிக் கொண்டு திரிபடைந்த நிலையில் இன்று இருக்கிறது. தாய் வழிச் சமூகம், இயற்கை வழிபாடு போன்ற இயல்பான கூறுகள் தமிழ் பண்பாட்டில் இருந்து தூரமாக விலகி இன்று அயல் சிந்தனைகளை உள்வாங்கிய ஒரு பண்பாடாக மாறி இருக்கின்றது. இதனைப் புரிந்து கொள்ளவும் இழந்த பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுத்து அவற்றை வாழ்வியல் நெறிகளாக அமைக்கவும் அறிவியல் கண்ணோட்டம் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை. புராணக் கதைகளை உண்மையாக்க தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்ற முயற்சிகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு அறிவியல் நோக்கோடு தங்கள் பார்வையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அறிவியல் சிந்தனைகள் அடிக்கடி பேசப்பட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும்.
அறிவியல் தமிழின் தேவையை கருதி தமிழ் மரபு அறக்கட்டளை அறிவியல் சிந்தனைகள் சார்ந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றோம். அறிவியல் தமிழ் சார்ந்த கலந்துரையாடல்களை வளர்ப்பதற்காக தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி திசைக்கூடல் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் இத்தகைய நிகழ்ச்சிகளில் உலகத் தமிழர்கள் இணைந்து, அறிவியல் தமிழ் அனுபவத்தை விரிவாக்கிக் கொள்ள உங்கள் அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளை அன்போடு அழைக்கின்றோம்.
வாருங்கள் தமிழால் இணைவோம்!
அறிவியல் தமிழை உலகம் முழுவதும் பரவலாக்குவோம்!
அன்புடன்
முனைவர் க சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.