இலங்கை மட்டக்களப்பு நகரில் உள்ள பொது நூலகத்திற்கு நூல் சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஆயிரம் நூல்களை சேகரித்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றோம்.இதற்கு உங்களது அன்பான ஒத்துழைப்பை நாடுகின்றோம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அப்பகுதிகளில் இருக்கின்ற நூலகங்கள் மிகக் குறைவு. அத்தோடு இலங்கைக்கு வெளியே உருவாக்கப்படுகின்ற புதிய நூல்களும் அங்கு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இந்த சூழ்நிலையில் அறிவார்ந்த வகையில் தற்கால தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு, கலைகள், சமூக நலன், அரசியல், இயற்கை, தொல்லியல், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், புதினம், நாவல்கள், கவிதைகள் என எவ்வகையான நூல்களாக இருந்தாலும் அவற்றை சேகரித்து நாம் அவர்களுக்கு வழங்கும்போது அது மட்டக்களப்பு பகுதி பொதுமக்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும் மிகுந்த நற்பயனை வழங்கும்.
இலங்கை மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு நூல்கள் சேகரிக்கும் திட்டத்தில் நமது தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்குழுவினர் ஏறக்குறைய 300 நூல்களை இதுவரை சேகரித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. பாராட்டுகள் ஆசிரியை சுலைகா.
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நண்பர்கள் நூல் கொடை வழங்கி மகிழ்ந்தார்கள்.
மட்டக்களப்பு பொதுநூலகத்திற்காக நூல்கள் பெற்றுக் கொண்டதும், வந்திருந்த ஆர்வலர்களுடன் கலந்துரையாடியதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அறிவுத்தளத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலம் என்பது மாறி, இன்று ஆண்களும் பெண்களும் என சம எண்ணிக்கையில் பொது விஷயங்களில் ஈடுபாடு காட்டுவது ஆரோக்கியமான ஒன்று.
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு புத்தகங்கள்
— முனைவர் நா. கண்ணன்
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு புத்தகங்கள் தேவை எனும் வேண்டுகோள் வந்தவுடன் தமிழ் மரபு அறக்கட்டளை சுறு சுறுப்பாகிவிட்டது. டாக்டர் சுபா திட்டம் வகுத்து, தனது பங்களிப்பாக 200 சொச்சம் நூல்களை அளிக்கிறார். மதுரைக்குழாம் 300 நூல்கள் தருகிறார்கள். நண்பர்களிடம் கேட்டபோது எல்லோரும் 10, 20, 100. என நூல்களைத் தரத்தொடங்கினர். சரி ஒரு பொது அறிவிப்பு விடுத்து ஒரு பொது இடத்தில் சேகரம் பண்ணுவோம் என முடிவெடுத்த போது டாக்டர்.ஒளி வண்ணன் தமது எழிலினி பதிப்பக வளாகத்தைச் சேகரிப்புக் கிட்டங்கியாக இருக்க அனுமதித்தார். எதிர்பார்த்தது 1001 நூல்கள். கிடைத்தது 1500!
இத்தனை நூல்களையும் அடுக்கி பொட்டலம் கட்டி விமானத்தில் ஏற்ற வேண்டும். எழுத்தோவியர் நாணா, சிலம்பரசர் கிரிஷ், கௌதம சன்னா போன்றோர் தீவிரமாக ஈடுபட்டு 16 பொட்டலங்கள் கட்டினர். 450 கிலோ! நல்ல வேளையாக ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் 30 கிலோ அனுமதித்தது. சென்னை விமான நிலைய சிப்பந்தி பொறுமையுடன் உதவினார். ஏர் லிஃப்ட் பண்ணி கொழும்பு கொண்டு வந்தாகிவிட்டது. சுங்க அதிகாரிகளுக்கு வேடிக்கையாக இருந்தது. இத்தனை நூல்களைச் சுமந்து கொண்டு ஒரு குழு வருமோ? என! ஓரிரிண்டை சோதித்தனர். ஒரு வழியாக வெளியே வந்துவிட்டோம்.
இனி இதை மட்டக்களப்பு வரை தூக்கிச் சுமக்க வேண்டும். வந்ததோ மினி பஸ்! பின் சீட்டுகள் முழுவதும் புத்தகங்களால் நிரம்பின. செல்வ முரளி, கிரிஷ் மற்றும் இளைஞர் கூட்டம் சளைக்காமல் கனமான புத்தகக்கட்டுக்களைத் தூக்கிவைத்தனர். அடுத்து 8 மணி நேரப் பயணம். மட்டக்களப்பு ஆளுநர் மாளிகையில் எல்லாப்புத்தகங்களும் இறங்கின.
இப்போது இருக்கும் நூலகத்தில் இடம் கிடையாது. 200 கோடி செலவில் புதிய கட்டிடம் உருவாகிறது. அங்கு கொலுவிருக்கும் எம் நூல்கள்.
இச்சேவையைப் பாராட்டும் விதமாக இந்தக் கலை இலக்கிய விழாவைச் சிறப்பித்து இலங்கை அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது!
நிறைவாக உள்ளது.
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!
எனும் பாரதி வரிகள் அப்படியே உண்மையானதில் பெருமகிழ்ச்சி.