Home Events உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு- 2024, மட்டக்களப்பு, இலங்கை

உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு- 2024, மட்டக்களப்பு, இலங்கை

by admin
0 comment

— முனைவர்.க.சுபாஷிணி

இனக்குழுக்கள் ஓரிடத்தில் நிலைத்து நின்று ஒரு சமூகமாக நிலை பெற்று இயங்கத் தொடங்கும் பொழுது அங்குப் பண்பாட்டுக் கூறுகளும் சடங்குகளும் முளைக்கின்றன. கால ஓட்டத்தில் அவை படிப்படியான வளர்ச்சியைக் கண்டு தனித்துவமிக்கதோர் அடையாளமாக ஒரு சமூகத்திற்கு அடையாளத்தை வழங்குகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தின் நிலப்பகுதியான மட்டக்களப்பு தனக்கே உரிய தனித்துவத்துடன் அமைந்திருக்கின்றது. தமிழகத்தின் நெருங்கிய தொடர்புடன் கூடிய பண்பாட்டுக் கூறுகளின் நீட்சியை மட்டக்களப்பு எங்கும் காண முடிகிறது. கடல் தமிழ் நிலத்திலிருந்து இலங்கையைப் பிரித்திருந்தாலும் இந்நிலப்பகுதிகளுக்கு வந்து குடியேறிய பல்வேறு மக்களின் மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கங்களை உள்வாங்கி இருந்தாலும் கூட, மட்டக்களப்பு மிக நீண்ட காலமாக இயற்கையை மையமாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளைத் தக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது என்று கூறலாம். தாய்வழிச் சமூக பண்பாடு, கண்ணகி அம்மன் வழிபாடு, தாய்த் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியான கண்ணகி தெய்வ வழிபாடு ஆகியவை இங்குள்ள பண்டைய தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளின் தொடர்ச்சி.

இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் யாழ்ப்பாண மக்களின் பண்பாடு, மலையக மக்களின் பண்பாடு, கொழும்பு மற்றும் தென் இலங்கையின் பண்பாடு எனப் பிரித்துப் பார்க்கும் சூழலில் மட்டக்களப்பு நிலப்பகுதி வாழ் மக்களின் பண்பாட்டைப் பார்க்கத் தவறி விடுவது இயல்பாகவே நிகழ்ந்து விடுகிறது. இத்தகைய நிகழ்வு ஏற்படும் போது ஒரு தனித்துவமிக்க சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஆவணப்படுத்தப்படாமலோ அல்லது பேசப்படாமலோ கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு மறைந்து விடக்கூடிய சூழல் இருக்கின்றது. அப்படி நிகழும் போது நன்கு வளர்ச்சியுற்ற ஒரு பண்பாடு வரலாற்றில் நிலைத்து நிற்காமல் பொது நீரோடையில் கலந்து தனித்துவத்தை இழந்து போகக்கூடும்.

இத்தகைய எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு மக்களின் பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் கண்டு அங்கு ஆய்வாளர்களால் நிகழ்த்தப்படும் ஆவணப்படுத்தும் முயற்சிக்குப் பக்கபலமாக நிற்கவும், அத்தகைய முயற்சியில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவ்வகை ஆய்வுகளை அதிகமாகப் பேச வைப்பதும் அவசியம் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை உணர்ந்ததன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மட்டக்களப்பு பகுதியில் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் முயற்சிகளைத் தொடங்கினோம். அத்தகைய முயற்சிகளுக்குக் கை கொடுக்கும் வகையில் இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களும் உறுதுணையாக இருந்து வந்தார்.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில் ஆளுநர் அவர்கள் ஜெர்மனி வந்திருந்தபோது தனது பொறுப்பில் அடங்கிய கிழக்கு மாகாணத்தில் தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரு கலை இலக்கிய மாநாட்டை மட்டக்களப்பு நகரில் நிகழ்த்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை எனக்குத் தெரிவித்து அதில் முழுமையாக உறுதுணையாக இருந்து அவருக்கு உதவ வேண்டும் என்றும், அந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிற்குத் தலைமையேற்று அதனைச் செயல்படுத்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இது ஒரு மாபெரும் பணி. ஜெர்மனி என்றும் இல்லாமல் தமிழ்நாடு என்றும் கூட இல்லாமல் இலங்கையில் ஒரு மாநாட்டை நிகழ்த்துவது எப்படிச் சாத்தியப்படும் என்ற கேள்வி என் முன் எழுந்த போது, அக்கேள்வியைச் சற்று ஒதுக்கிவிட்டு இத்தகைய பணியை நிகழ்த்த வேண்டியது காலத்தின் அவசியம் என்ற எண்ணமே மேலோங்கியதால் ’கட்டாயம் இம்மாநாட்டை ஒருங்கிணைப்பதில் உதவுகிறேன்’ என்ற எனது உறுதிமொழியையும் வழங்கினேன்.

அயல்நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வது, மாநாட்டு நிகழ்வில் இலங்கையில் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளை அடையாளங்கண்டு அவர்களைப் பாராட்டிச் சிறப்பிப்பது, மாநாட்டை இரண்டு நாள் நிகழ்வாக நடத்துவது மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஆகியவற்றைத் திட்டமிடுதல் எனப் படிப்படியாகப் பணிகள் தொடங்கியன.

ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களது ஆணைக்கிணங்க கிழக்கு மாகாண அரசின் பண்பாடு, கல்வித்துறை, நகர சபை போன்ற பணிக் குழுக்கள் இந்த முயற்சியில் பல்வேறு பணிகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.

இந்தக் கலை இலக்கிய மாநாட்டைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் ஒன்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தனது திட்டத்தையும் ஆளுநர் அவர்கள் முன்வைத்தார். அதே வேளை இந்நிகழ்ச்சியை ஒட்டிய வகையில் மட்டக்களப்பு நகரில் திருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியும் உறுதி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து 13 பேராளர்களை அடையாளம் கண்டு அவர்களது ஒவ்வொரு துறைக்கேற்ப அவர்கள் உரையாற்றும் வகையில் அவர்களை இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தோம், அயல் நாடுகளிலிருந்து ஐந்து பேர் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்கான அனைத்துப் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளைக் கிழக்கு மாகாண அரசு ஏற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு நகரின் மைய சாலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அலங்கார ஊர்வலத்தில் ஏறக்குறைய 50 அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றன. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வண்ண வண்ண உடையணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள் சாலை ஓரங்களில் நின்று இந்த மாநாட்டின் தொடக்க விழாவைக் கண்டு ஆரவாரித்து மகிழ்ந்தனர். இந்த மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக இம்மாநாட்டை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை ஒன்று ஆளுநரின் ஏற்பாட்டில் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், கலை சிறப்புக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரம் இது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ”மட்டக்களப்பு, வரலாறு-சமூகம்-பண்பாடு” என்ற தலைப்பில் அமைந்த கருத்தரங்கில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் நூல் வடிவில் உருவாக்கினோம். இந்த நூலும் மாநாட்டுத் தொடக்க விழா நிகழ்வில் வெளியிடப்பட்டு மட்டக்களப்பு பண்பாட்டிற்குச் சிறப்பு சேர்த்தது.

இந்த மாநாட்டின் தொடக்கம் முதல் இறுதி வரை கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாநாட்டுத் திட்டக் குழுவிலும் பங்கெடுத்துச் சிறப்பித்தனர். மாநாட்டைச் சிறப்பிக்க தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்கி உதவினர். மிகக்குறிப்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கனகரத்தினம், பல்கலைக்கழகத்தின் கலைத் துறைத் தலைவர் முனைவர் குணபாலசிங்கம், பேராசிரியர் கென்னடி, சுவாமி விவேகானந்தா கவின் கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பாரதி கென்னடி ஆகியோரது பங்களிப்பும்., ஒத்துழைப்பும் உழைப்பும் போற்றுதலுக்குரியன.

இரண்டு நாள் நடைபெற்ற இம்மாநாட்டில் அயல்நாட்டிலிருந்து வந்த பேராளர்களும் உள்நாட்டில் இருந்து கலந்து கொண்ட பேராளர்களுமாக 45 ஆய்வாளர்கள் தமிழ் மொழி, வரலாறு, கலைகள், தமிழ்க் கணினி, புலம்பெயர்வு என்ற ஐந்து மாபெரும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிறைவு விழா நிகழ்வு மட்டக்களப்பு நகரின் ஓவியர் ஈஸ்வரராஜா குலராஜா அவர்களது ஓவியக் கண்காட்சியுடன் தொடங்கியது. இதனைக் கிழக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களும் மலேசியாவில் இருந்து வந்திருந்த மலேசியப் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களும் தொடங்கி வைத்தார்கள்.

இலங்கையில் தமிழுக்கும் தமிழ் மொழிக்கும், வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் தொண்டாற்றிய பெருந்தகைகள் 16 பேருக்கு இந்த மாநாட்டில் சிறப்புச் செய்யப்பட்டது. ஆளுநர் தனது நிறைவுரையில், இத்தகைய மாநாட்டை இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும், இலங்கையின் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தனது பங்கை வழங்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியதோடு தமிழ் மொழி பண்பாடு, கலை வளர்ச்சிக்குத் தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தது நம்பிக்கை குரலாக ஒலித்தது.

இலங்கை மட்டக்களப்பில் ஆகஸ்ட் 2-3 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற தமிழ்க் கலை இலக்கிய விழா மாநாடு இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு என்பதில் ஐயமில்லை!

முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு



பயனுள்ள பயணம்

— பேரா. முனைவர். நா.கண்ணன்

பழைய இராமநாதபுரத்து ஆசாமிகளுக்கு சிலோன் என்பது கிளர்ச்சி தரும் விஷயம். தனுஷ்கோடி முனையிலிருந்து வெறும் 18 மைல்தான். மீனவர்கள் அடிக்கடி போய் வருவர், வம்பில் மாட்டிக் கொள்வர். 1980 களில் மதுரையிலிருந்து கொழும்பிற்கு ரயிலில் போகலாம். தனுஷ்கோடி போய் சின்ன கப்பல் பயணம் செய்து தலைமன்னார் போய் அங்கிருந்து ரயிலில் கொழும்பு போய்விடலாம். அப்போது வெறும் ₹85 தான்! எனக்குப்போக ஆசை. ஆனால், போக முடியவில்லை. பின் இனவாதப் போர் தொடங்கியது. இலட்சக்கணக்கில் தமிழர் கொல்லப்பட்டனர். அதே அளவில் இடம் பெயர்ந்து அயலகம் சென்று விட்டனர்.

எனது நிறைவேறாத ஆசை முனைவர் சுபாஷிணியின் முயற்சியால் நிறைவேறியது. முதற் பயணம் 2022 ல் யாழ்ப்பாணம் சென்ற போது நிறைவேறியது. யாழ் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கண்டியின் புகழ்மிக்க பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நான் நினைத்ததை விட யாழ்ப்பாணம் மிக அழகாக இருந்தது. நல்லூர் முருகன் ஆலயம் அழகாக பராமரிக்கப்பட்டுள்ளது. தெருவெல்லாம் சுத்தமாக இருந்தன. பள்ளியில் சரஸ்வதி வீற்றிருந்தாள். ஓர் இனக்கலவரத்தை நினைவூட்டும் வண்ணம் யாழ் நூலகம் வீற்றிருந்தது.

எனது அடுத்த பயணம் மிகச் சிறப்பான முறையில் மட்டக்களப்பு நோக்கி நடந்தது. முனைவர். சுபாஷிணியின் முயற்சியால் அரசு விருந்தினராகச் சென்றேன். மிகவும் கௌரவிக்கப்பட்ட பயணமாக அமைந்தது. அறிவியல் எனக்குப் பல கௌரவங்களைத் தந்துள்ளது. உதாரணமாக, சூழல் நச்சுவியல் எனும் துறையில் உலகின் ஆகச்சிறந்த 10 ஆய்வுப் பேராசிரியர்களுள் ஒருவனாக என்னை இனம் காட்டுகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள், நூற்றுக்கணக்கான சர்வதேசக் கருத்தரங்கங்கள் என உலகைக் காண வைத்தது. இதே ஆய்வுப் பின்னணியில் நான் தமிழுக்குள் நுழைந்த போது, என்னைத் தமிழ்கூறு நல்லுலகம் அறிவியல் காட்டிய அக்கறையை விடப்பலமடங்கு பெரிதாகக் கௌரவித்தது. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை 2001 ல் முனைவர் சுபாஷிணியுடன் அமைக்க மலேசிய அரசு உறுதுணையாக இருந்தது. பின் கொரியத் தமிழ் ஆய்வை செம்மொழி மாநாடும் தமிழக அரசும் கௌரவித்தன. ஒரு தமிழ் ஆய்வாளனாக இப்போது இலங்கை என்னைக் கௌரவிப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

மட்டக்களப்பு பொது நூலகத்திற்குப் புத்தகங்கள் தேவை எனும் வேண்டுகோள் வந்தவுடன் தமிழ் மரபு அறக்கட்டளை சுறுசுறுப்பாகிவிட்டது. முனைவர் சுபா திட்டம் வகுத்து, தனது பங்களிப்பாக 200 சொச்சம் நூல்களை அளிக்கிறார். மதுரைக்குழாம் 300 நூல்கள் தருகிறார்கள். நண்பர்களிடம் கேட்டபோது எல்லோரும் 10, 20, 100. என நூல்களைத் தரத்தொடங்கினர். சரி ஒரு பொது அறிவிப்பு விடுத்து ஒரு பொது இடத்தில் சேகரம் பண்ணுவோம் என முடிவெடுத்த போது முனைவர் ஒளி வண்ணன் தமது எழிலினி பதிப்பக வளாகத்தைச் சேகரிப்புக் கிட்டங்கியாக இருக்க அனுமதித்தார். எதிர்பார்த்தது 1001 நூல்கள். கிடைத்தது 1500!

இத்தனை நூல்களையும் அடுக்கி பொட்டலம் கட்டி விமானத்தில் ஏற்ற வேண்டும். எழுத்தோவியர் நாணா, சிலம்பரசர் கிரிஷ், கௌதம சன்னா போன்றோர் தீவிரமாக ஈடுபட்டு 16 பொட்டலங்கள் கட்டினர். 450 கிலோ! நல்ல வேளையாக ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் தலைக்கு 30 கிலோ அனுமதித்தது. சென்னை விமான நிலைய சிப்பந்தி பொறுமையுடன் உதவினார். ஏர் லிஃப்ட் பண்ணி கொழும்பு கொண்டு வந்தாகிவிட்டது. சுங்க அதிகாரிகளுக்கு வேடிக்கையாக இருந்தது. இத்தனை நூல்களைச் சுமந்து கொண்டு ஒரு குழு வருமோ? என! ஓரிரண்டைச் சோதித்தனர். பின்னர் ஒரு வழியாக வெளியே வந்துவிட்டோம்.

இனி இதை மட்டக்களப்பு வரை தூக்கிச் சுமக்க வேண்டும். வந்ததோ மினி பஸ்! பின் சீட்டுகள் முழுவதும் புத்தகங்களால் நிரம்பின. செல்வ முரளி, கிரிஷ் மற்றும் இளைஞர் கூட்டம் சளைக்காமல் கனமான புத்தகக்கட்டுக்களைத் தூக்கிவைத்தனர். அடுத்து 8 மணி நேரப் பயணம். மட்டக்களப்பு ஆளுநர் மாளிகையில் எல்லாப்புத்தகங்களும் இறங்கின. இப்போது இருக்கும் நூலகத்தில் இடம் கிடையாது. 200 கோடி செலவில் புதிய கட்டிடம் உருவாகிறது. அங்குக் கொலுவிருக்கும் எம் நூல்கள்.

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!
எனும் பாரதி வரிகள் அப்படியே உண்மையானதில் பெருமகிழ்ச்சி.

அடுத்து;

“கருத்தரங்கம்” தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் புதிது அல்ல. 2006 ல் கொரியாவிலிருந்து என்று நான் மின்தமிழ் எனும் கூகுள் மடலாடற்குழுவைத் தொடங்கினேனோ அன்றிலிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை கருத்துகளின் அரங்கமாகவே செயல்படத்துவங்கியது. உதாரணமாக, கொரியத் தமிழ் தொடர்புகள் பற்றிய விவாதக் களமாக மின்தமிழ் திகழ்ந்தது. எத்தனையோ ஆய்வுப்பொருட்கள் அங்குண்டு. தேடினால் கிடைக்கும். செம்மொழி மாநாடு பற்றி நான் எழுதிய பதிவுகளும் அதற்கான எதிர்வினையும் ஒரு நூலாக விரைவில் வரப்போகிறது. நீங்களும் தேடித்தொகுத்து நூல்களைக் கொண்டு வரலாம்.

கருத்தரங்கம் எனும் பொதுப்புரிதலுள்ள அமர்வுகளையும் த.ம.அ நடத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தமிழன் சோர்ந்துவிடக்கூடாது என ஆரம்பிக்கப்பட்டதுதான் “திசைக்கூடல்” எனும் மெய்நிகர் நிகழ்ச்சிகள். இதில் ஆளுமைகளின் தனிப்பட்ட பேச்சுக்கள் என்றில்லாமல், ஒரு நாள், இரு நாள் கருத்தரங்கங்களும் வெவ்வேறு தலைப்புகளில் நடைபெற்றுள்ளன. அப்படிச் சமீபத்தில் (ஏப்ரல் 20 & 21, 2024) நடைபெற்ற கருத்தரங்கம்தான், “மட்டக்களப்பு: வரலாறு, சமூகம், பண்பாடு”. பேரா.மௌனகுரு அவர்களின் பங்கேற்புடன் நடந்த இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை த.ம.அ ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.

இதையடுத்து வருவதுதான் ஆகஸ்டு 2-3, 2024 நடைபெற்று முடிந்துள்ள “உலகத் தமிழ்க் கலை இலக்கிய மாநாடு”. இது மெய்நிகராக அமையாமல் மெய்யாகவே நடந்த மாநாடு. இவ்விரு மாநாடுகளுக்கும் உறுதுணையாக நின்றவர், கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவர்கள். இதுவரை நடந்திராத அளவில் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து நடத்திக் காட்டியிருக்கிறார் ஆளுநர். இவ்விரு மாநாடுகளையுமே தமிழ் மரபு அறக்கட்டளை தலைமையேற்று நடத்த வேண்டுமென்ற அவரின் வேண்டுகோளை ஏற்று இரவு பகல் பார்க்காமல், கண்ணுறக்கம் பாராமல் செயல்பட்டவர் த.ம.அ வின் தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள். இதில் அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்படுத்திய பலரில் குறிப்பிடத் தக்கவர்கள் முனைவர் பாப்பா, முனைவர் இறைவாணி, முனைவர் கௌதம சன்னா, முனைவர் ஒளிவண்ணன், சிலம்பர் கிருஷ், எழுத்தோவியர் நாணா போன்றோர்.

இதுவரை நடந்துள்ள தமிழ் மாநாடுகள் போலவே ஊர்வலம், கலைகளின் வெளிப்பாடு எனக் கல்விசார் கருத்தரங்கமாக கிழக்கு பல்கலைக் கழகத்தில் இம்மாநாடு நடைபெற்றது. சுபாவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கல்விசார் பேராளர்கள் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டனர்.

  1. பேராசிரியர் சி.மௌனகுரு & பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
    மேனாள் பீடாதிபதி, கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு)
  2. பேராசிரியர் சி.பத்மநாதன்,
    பொறுப்பு வேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (கொழும்பு)
  3. தகைசால் பேராசிரியர்கள் அ.சண்முகதாஸ் & ச.மனோன்மணி
    தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (திருகோணமலை)
  4. திருமிகு சா. திரிவேணி சங்கமம்,
    மொழிபெயர்ப்பாளர், காரைத்தீவு (அம்பாறை)
  5. பேராசிரியர் முனைவர் பரமு. புஷ்பரட்ணம்
    மேனாள் தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் (யாழ்ப்பாணம்)
  6. திருமிகு ஈஸ்வரராஜா குலராஜா,
    ஓவியர் (மட்டக்களப்பு)
  7. முனைவர் தம்மிக்க ஜயசிங்க,
    முதுநிலை விரிவுரையாளர், சிங்களத்துறை, றுகுணு பல்கலைக்கழகம் (மாத்தறை).
  8. திருமிகு சுப்பையா ராஜசேகரன்,
    ஆவணப் பாதுகாப்பகம் (நுவரெலியா)
  9. பேராசிரியர் த.ஜெயசிங்கம்,
    மேனாள் துணைவேந்தர், தகைசால் பேராசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு)
  10. முனைவர் சா.தில்லைநாதன்,
    ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், (மட்டக்களப்பு)
  11. பேராசிரியர் ஏ.எஸ். சந்திர போஸ்,
    மேனாள் பீடாதிபதி. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (நுவரெலியா)
  12. முனைவர் இராசையா மகேஸ்வரன்
    கல்விசார் பிரதம நூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம் (கண்டி).
  13. திருமிகு. தம்பிராசா தவக்குமார்,
    சமூக சேவையாளர், காரைத்தீவு (அம்பாறை)
  14. முனைவர் பக்தவச்சல பாரதி,
    மேனாள் இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, இந்தியா
  15. முனைவர் க.சுபாஷிணி,
    தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி). இந்தக் கலை இலக்கிய விழாவைச் சிறப்பித்து இலங்கை அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது! நிறைவாக உள்ளது. ஒரு மாநாட்டிற்கு ஓர் அரசு தபால்தலை வெளியிடுகிறது என்றால் அது எத்தகைய சிறப்பு மிக்கதாய் இருக்க வேண்டும்? மொத்தத்தில் இம்மாநாடு த.ம.அ. வின் மகுடத்தில் இன்னுமோர் மணி.

இம்மாநாட்டில் என் சிறப்புரை கொரியாவிற்கும் தமிழகத்திற்குமுள்ள தொல் தொடர்புகள் பற்றியது. புதிய பேசுபொருள். தமிழ் இளைஞர்களிடையே ஒரு கொரிய ஆர்வம் பற்றிக் கொண்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனமாகக் கேட்டனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு போகும் வழி ஒரு பசுமைப் பூஞ்சோலை. காடுகள் இன்னும்.அழிக்கப்படாமல் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். காடுகளுக்கிடையேயுள்ள ஏரிகளில் யானைகள் உலாவுகின்றன. காடுகளில் மறைந்துள்ளது இலங்கையின் வரலாறு. பொலன்னறுவா பௌத்த விகாரைகள் இப்படித்தான் மறைந்திருந்து இலங்கைக்குப் புகழாரம் சூட்டுகின்றன. இத்தகைய விகாரைகளை நாம் தமிழகத்தில் காணமுடியாது. ஆயின் இலங்கை தொடங்கி, மியன்மார், இந்தோனீசியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் காணமுடியும். இந்தியாவிற்கு மிக அருகில்தான் இலங்கை உள்ளது. ஆயினும் அது தனக்கென ஒரு தனித்துவத்துடன் விளங்குகிறது. கொழும்பு மாநகரம் ஓர் சுத்தமான அழகான தலைநகர்.

“சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்றான் பாரதி. அதுமட்டும் நிறைவேறிவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாக முன்னேறிவிடும். தற்போது விலைகள் எல்லாம் கன்னாபின்னாவென்று உயர்ந்து கிடக்கின்றன. அந்நியச் செலாவணிச் சந்தையில் இலங்கையின் ரூபாய் அடிமட்டத்தில் கிடக்கிறது. அயலகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்தால் நலம். பாலம் கட்டினால் தமிழக முதலீடும் அங்குப் பாயும். இலங்கை சுபீட்சமடையும். வறுமையும், பொருளாதாரச் சீர்கேடும்தான் ஒரு நாட்டை சீரழிப்பது. ஒரு நாட்டை பொருளாதார முன்னேற்றமடையச் செய்துவிட்டால் போர்கள் இருக்காது, அயலக உறவு சீர்ப்படும். மக்கள் மகிழ்வுடன் வாழ்வர்.

முனைவர் நா. கண்ணன்
துணைத்தலைவர், இணைத் தோற்றுநர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


முனைவர் க.சுபாஷிணி: நம் காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம்

முனைவர் பக்தவத்சல பாரதி

கடந்த இரண்டு தசாப்தங்களாக நான் பெரிதும் கவனித்து வரும் ஒரு முக்கிய அறிவுசார் அமைப்பு ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ ஆகும். அதன் தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்கள் பல்துறை எல்லைகள் கடந்து பயணிக்கின்றார். தன் அறிவுப் பயணத்தால் தமிழ் அகிலத்தைக் கட்டமைத்து வருகிறார். ‘செயல் அதுவே சிறந்த சொல்’ என்பதுதான் அவருடைய தாரக மந்திரம்.

தன்னளவிலும், தமிழ் மரபு அறக்கட்டளை வழியாகவும் அவர் முன்னெடுத்துள்ள பணிகள் பிரமிக்கத்தக்கவை. அவை அனைத்தையும் இங்குப் பட்டியலிடுவது இயலாது. அவற்றை தமஅ இணையதளத்தில் அறியலாம்.

தமிழ் மரபை ஆவணப்படுத்துதல் இவருடைய தலையான நோக்கங்களில் ஒன்றாகும். மின்னியல் வடிவிலும், அச்சு வடிவிலும், கருத்தரங்குகள், உரையரங்குகள், விவாத நிகழ்வுகள், நூலறிமுக நிகழ்வுகள், மாதாந்திர சொற்பொழிவுகள் (கடிகை), சிறப்பு நிகழ்வுகள், வரலாற்றுக் களப்பணிகள், மரபு நடைப் பயணங்கள், வல்லுநர் கூடுகைகள், புதிய மரபணு ஆய்வுகளை அறியச் செய்தல், வரலாற்றுச் சின்னங்களை உலகறிய செய்தல், பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், பன்னாட்டு மாநாடுகள் நிகழ்த்துதல், இளம் தலைமுறை மாணவர்களுக்குத் தொழில் நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் பயிற்றுவித்தல், கல்லூரிகளிலும் ஆய்வு நிறுவனங்களிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாக்கிச் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் எனப் பல்வேறு பணிகளை அயராமலும் சலிப்பில்லாமலும் நிகழ்த்தி வருகிறார். பிரமிப்பூட்டும் நிகழ் நிரல் இது. அதனால்தான் அறிவெல்லைகள் கடந்து சுபாஷிணி பயணிக்கிறார் என்கிறோம்.

”சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” எனும் பாரதியின் வாக்கினை மெய்ப்பிக்கும் புதுமைப் பெண் சுபாஷிணி அவர்கள். நம் காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அவர். பிறந்தது மலேசியா. பணியாற்றுவது ஜெர்மனி. அரும்பணிகள் ஆற்றுவது உலகத் தமிழர்களுக்காக.

இன்று சுபாஷிணி மேற்கொண்டு வரும் பணிகள் அனைத்தும் பெரும் நிறுவனங்கள்கூட செய்ய முன்வராத பணிகளாகும். அவை அனைத்தும் தமிழ் நலம், தமிழர் நலம் சார்ந்தவை. தமிழ்-தமிழர் மரபுச் செல்வங்களைப் பேணுவதில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இன்று பலரும் செல்வத்தைப் பேணுவதிலும், லௌகிக வாழ்விலும் அக்கறை காட்டுகின்றனர். இதற்கு எதிரானவர் சுபாஷிணி அவர்கள். தன் வளம் அனைத்தும் தமிழுக்கே எனப் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் அவர் மட்டக்களப்பில் நடத்திய பன்னாட்டுத் தமிழ்க் கலை இலக்கிய மாநாடு ஒரு பெரிய சாதனை என்று சொல்ல வேண்டும். மாநாட்டின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பில் மிக அழகான திருவள்ளுவர் சிலையை நிறுவினார். அதனைத் தொடர்ந்து மாபெரும் எழுச்சிப் பேரணியை நடத்தினார். கிழக்கு மாகாண அரசே வியந்து பார்க்கும் நிகழ்வாக இதனை நடத்திக் காட்டினார். கடந்த முப்பது ஆண்டுகளில் நிகழாத நிகழ்வென்று மண்ணின் மைந்தர்கள் பாராட்டினர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்தக் கலை இலக்கிய மாநாடு பன்னெடுங்காலம் பேசப்படும் நிகழ்வாக நடந்தேறியது. சாதனைகள் செய்துள்ள ஈழத்து அறிஞர் பெருமக்களை விருதுகள் கொடுத்துக் கௌரவித்தார். மாநாட்டு மலர் ஒன்றை வெளியிட்டார். மட்டக்களப்பு: வரலாறு, சமூகம், பண்பாடு எனும் ஒரு புலமைத்துவ ஆய்வு நூலினைத் தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் அன்று வெளியிட்டார். மட்டக்களப்பு பற்றிய ஆய்வு நூல்களில் இது முதன்மையானது. இந்நூலின் பெறுமதி மிக உன்னதமானது.

இந்நூல் பற்றிப் பின்வரும் அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களே இதனை நிரூபிக்கும்.

பேராசிரியர் சிவத்தம்பி:
மானிடவியல் ஆய்வுக்கு மட்டக்களப்பு ஒரு தங்கச் சுரங்கம். இதை அகழாய்வு செய்தால் தங்கம் தங்கமாக வெட்டி எடுக்கலாம்.

முனைவர் க.சுபாஷிணி:
ஒரு சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சி என்பது சிறு சிறு பண்பாட்டு நிகழ்வுகளின் கலவை. இதனடிப்படையில்தான் பண்பாடு வளம் பெறுகிறது. எதற்கு இத்தனை மாறுபட்ட சொற்பயன்பாடுகள்? சடங்குகள்? இலங்கையில் இயக்கர், வேடர், நாகர் போன்ற பூர்வக் குடிமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழர்கள் என இணைந்துவிட வேண்டியதுதானே என்ற எண்ணம் எழலாம். ஆனால் இவற்றை இழப்பது ஒரு பண்பாட்டின் செழுமைக்குப் பேரிழப்பாகும். ஆகையால்தான் மட்டக்களப்புப் பண்பாட்டை நாம் தேடிச் சென்று ஆய்வு செய்து நூலாக ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

முனைவர் பக்தவத்சல பாரதி:
இன்று தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்புகளாக விளங்குபவை தமிழ்நாடு, யாழ்குடா, மட்டக்களப்பு. இம்மூன்று நிலங்களில் மட்டக்களப்பை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? இம்மூன்று பிரதேசங்களையும் மானிடவியலாக வாசிக்கும் போது மட்டக்களப்பில் மட்டுமே மிகத் தொன்மையான தமிழ்ச் சமூகக் கூறுகள் பலவும் உள்ளன என்கிற பேருண்மை வெளிப்படுகிறது. இவ்வளவு காலத்திற்குப் பிறகும் அவை அச்சு அசலாக உயிர்ப்புடன் உள்ளன. இவற்றை ‘மானிடவியல் அதிசயம்’ எனலாம்.

பேராசிரியர் மௌனகுரு:
மட்டக்களப்பின் வரலாறு இருட்டுக்குள் கிடக்கிறது. நாம் வெளிச்சத்தில் தேடக்கூடாது. புறத்தாரும் பேசக்கூடாது. இதனுள்ளே இருக்கின்ற மக்கள் இதனை வெளிக்கொணரும் பொழுதே வரலாறு முழுமைபெறும். இதைத்தான் ‘அகத்தார் ஆய்வு’ என்கிறோம். அது இந்நூல்வழி நிறைவடைந்துள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் மூலம் ஏறக்குறைய நாற்பது நூல்களை வெளியிட்டிருக்கிறார் முனைவர் சுபாஷிணி. ஒவ்வொன்றும் தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் சொத்தாக விளங்குகிறது. தமிழர் புலப்பெயர்வு, பௌத்தம், வரலாறு, ஆய்வு முறையியல் என இதன் பட்டியல் நீளுகிறது.

செயற்கரிய செயல்களைச் செய்து வரும் முனைவர் சுபாஷிணி அவர்கள் நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமே.


மீன்பாடும் மட்டு மாநகர்

— முனைவர் ஆ. பாப்பா

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளையினர் மட்டக்களப்பு பற்றி இணைய வழியில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடத்தினோம். இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை நூலாக்கம் செய்யும் பணியைத் தலைவர் முனைவர் சுபாஷிணி என்னிடம் ஒப்படைத்தார்கள். கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்தது மிகப்பெரிய அனுபவம். ஜூன் மாதம் நூல் அச்சு வேலை முடிந்தபோது மட்டக்களப்பில் நூலை வெளியிடுவோம் என்று முடிவு செய்தோம். நண்பர் நாணா நூலுக்கான அட்டையை வடிவாய் வடிவமைத்ததில் நடுவில் இருந்த இலங்கை வரைபடத்தினுள் எங்களது பெயரைச் சரியாகப் பொருத்தியிருந்தார். அதைப் பார்த்ததும் நாங்கள் இப்பொழுதே மட்டக்களப்பில் இருக்கிறோமே! இல்லை இல்லை எப்பொழுதுமே இருப்போமே என்று அனைவரிடமும் களிப்பைப் பகிர்ந்ததுடன் அவ்வெண்ணத்தில் மனது சிறகடித்துப் பறந்துவிட்டது. மீண்டும் திரும்பி வந்து உடலையும் ஆகஸ்ட் மாதம் அழைத்துச் சென்றது.

நாங்கள் சூலை மாதம் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு வேலையாகச் செய்ய ஆரம்பித்தோம். மெதுவாகத் தொடங்கினாலும் நாளாக ஆக இரவு பகல் பாராது அனைவருமே வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். அனைவருக்குமே கடுமையான உழைப்புதான். எங்கள் வழக்கமான வேலைகளுடன் இரவிலும் மட்டக்களப்புக் கருத்தரங்க வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். ஒரு பக்கம் மட்டக்களப்பு நூலகத்திற்குப் புத்தகங்கள் சேகரிக்கும் பணி. உழைப்பிற்கிடையில் மட்டக்களப்பில், விமானத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று சிறு பிள்ளைகளைப் போல சேட்டை பண்ணிக் கொண்டும் இருந்தோம். சேட்டைதான் களைப்பு தெரியாமலிருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் கொண்டு வேலை செய்வதுபோல் எம்மை இயங்கச்செய்தது.

மட்டக்களப்பு செல்வதற்கு முதல்நாள் நாணாவிடம் நாளைக்குக் காலையிலும் மதியமும் நம் அனைவருக்கும் உணவுக்கு என்ன செய்வது? என்று நான் மிகவும் பொறுப்பாகவும் அறிவாளியாகவும் நினைத்துக் கொண்டு கேட்டேன். அவர் சொன்னார் – நானும் சன்னா சாரும் பேசி ஏற்பாடு செய்து விட்டோம். கவலை வேண்டாம். நிம்மதியாகக் கிளம்பி வாருங்கள் என்று ஒரே பதிலில் சுருக்கமாக முடித்து விட்டார். அந்தப் பதிலின் தொனியை இங்கு விளக்கத் தெரியவில்லை. உணரத்தான் முடியும். நாங்க செஞ்சுட்டோம் நான் நான்கு நாட்களாக 16 பேருக்கும் உணவுக்கு என்ன செய்வது என்று வேலைகளுக்கிடையில் யோசித்துக் கொண்டிருந்தேனே தவிர யாரிடமும் பேசவுமில்லை. கேட்க நேரமுமில்லை. கடைசி நேரத்தில் தான் கேட்டேன். ஆனால் அவர்கள் இது பற்றி யோசித்து உடனே செயல்படுத்தி விட்டார்கள். சிலர் எப்பொழுதும் மிகப்பெரிய வேலைகளைச் செய்தாலும் அதை வெளியில் சொல்வதுமில்லை – அதுகுறித்து அலட்டிக் கொள்வதுமில்லை. இது நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கற்க வேண்டியதுமாம்.

மறுநாள் முழுவதும் எங்களைப் பயணக் களைப்பு தெரியாமல் சுறுசுறுப்பாக்கியது இந்த உணவுதான். பயணத்தில் எங்களை விட மிகையாகப் புத்தகப் பெட்டிகள். வண்டியில் இருக்கும் இடத்தில் முதலில் பாதுகாப்பாக புத்தகங்களை அடுக்கிவிட்டுக் கிடைத்த இடத்தில் நாங்களும் அமர்ந்து கொண்டு ஆனால் அதை இடைஞ்சலாகவும் உணராமல் அரட்டை அடித்துக் கொண்டு கலகலப்பாக ஏழு மணி நேரம் பயணம் செய்ததற்குக் காரணம் சரியான உணவு என்று சொல்லலாம். சிற்றுண்டி விடுதியில் உணவை வாங்காமல் தெரிந்த இடத்தில், வீட்டில் உணவை ஏற்பாடு செய்ததும் அவர்களும் குறுகிய காலத்தில் அதைச் செய்து கொடுத்ததும் எங்களுடைய பயணத்தைச் சோர்வடையாமல் இருக்கச் செய்தன.

தமிழர்களின் பயணத்திற்கான நல்ல, சுவையான, பிரபலமான, கெட்டுப் போகாத ஒரே உணவான – அவ்வளவு காலம் நடைப் பயணத்திலும் பேருந்திலும் பயணம் செய்த புளியோதரை அன்று விமானத்திலும் எங்களுக்கு முன்னால் விமானத்தில் ஏற்றப்பட்டுப் பயணித்தது மிகப்பெரிய சாதனையே.

எங்களுடைய காலை உணவை நாங்கள் கையில் வைத்திருந்தோம். இட்லி, வடை, மூன்று விதமான சட்டினியும் சாம்பாரும். காலை எங்களுக்கு 9.50 மணிக்கு விமானம். நாங்கள் எல்லோரும் எங்களுடைய உடைமைகளுடன் ஆறு மணிக்கே விமான நிலையம் வந்து விட்டோம். நாணாவின் கையில் சாப்பாடு. அப்படியானால் இந்த உணவைச் செய்து கொடுத்தவர்கள் இரவு முழுவதும் வேலை பார்த்திருக்க வேண்டும் – இதைத் தயாரித்திருக்க வேண்டும் – அதிகாலையில் அதை உரியவரிடம் ஒப்படைத்து இருந்தால்தான் அவரால் ஆறு மணிக்கு அங்கு வர முடியும். உணவைக் காசு கொடுத்துதான் வாங்கினோம். ஆனால் காசு பெரிதில்லை – நும் நெஞ்சிலுள்ள காதல் பெரிது என்கிற பாரதியின் வார்த்தைகளாய் வாழ்கிற, கவனமாக, வயிற்றைக் கெடுக்காத உணவாகத் தயாரித்துத் தந்த கிரேஸ் அக்காவிடம் இதைக் கற்க வேண்டும்.

இலங்கை பயணத்தில் எனக்குக் கிடைத்த நட்’பூ’ பத்மாவதி அம்மா. அம்மாவுடன் தங்கி இருந்தேன். நிறைய பேசினோம். வரலாறு, சோழர்கள், பாண்டியர்கள் என்று அருவியில் கொட்டிய செய்திகள் என் மனதையும் மூளையையும் தண்ணென குளிர்வித்தன. இரவு எங்களுக்குப் பேச நேரம் கிடைத்தது. ஏதாவது மெதுவாக ஆரம்பித்தால் போதும் கொட்டி விடுவார். கொட்டுவது மட்டுமல்ல – அதைச் சொல்லும் விதம், அதில் அவர்களுக்குள்ள ஆர்வம், தெரிந்த அனைத்தையும் சொல்ல வேண்டும் – சோழர்கள் இவ்வளவு செய்திருக்கிறார்களே இதை எல்லோருக்கும் நாம் தெரிவிக்க வேண்டும் என்கிற எண்ணம் -அதாவது ஒரு 10000 வாலா வெடியை மெதுவாக ஒரு முனையில் மட்டும் பற்ற வைத்துவிட்டு அது நீண்ட நேரம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைப் போல நாம் மெதுவாக ஆரம்பித்தால் போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பேசப் பேச ஆர்வம் அதிகரிக்கிறதே ஒழியக் குறைவதாகக் காணோம். இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கமுடைய எனக்குத் தூக்கம் வந்தது. ஆனால் வரலாற்று மழை தூக்கத்தை விரட்டியது. அவர்களுடைய வாழ்க்கை, ஏற்பட்ட விபத்து, அதிலிருந்து மீண்டது, இன்னும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டிருப்பது நாளும் பொழுது விடிதல் என்பது அன்று புதிதாய்ப் பிறந்தோம் வரலாற்றைக் கற்பதற்கே என்பதாக இன்னும் ஒரு விஷயத்தை நாம் எவ்வளவு ஆர்வத்தோடு மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கும் ஆர்வம் உண்டாகும் என்பதை நான் அவரிடம் தெரிந்து கொண்டேன்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக, முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில் முருகரத்தினம் ஐயா அவர்கள் எங்களிடம் நீங்கள் எல்லோரும் பாலி மொழி கற்க வேண்டும் என்று சொல்லுவார். மறைந்து போன மொழியை நாங்கள் ஏன் கற்க வேண்டும் என்று அப்பொழுதே அவரிடம் வாயடிப்போம். இன்றைக்கு ஏறக்குறைய பௌத்த விகாரைகளுக்குள் மட்டுமே புழங்கிக் கொண்டிருக்கும் பாலி மொழியைத் தெரிந்திருக்கக் கூடிய மொழியியல், தொல்லியல், வரலாறு என்று நிறையத் தெரிந்திருந்தும் அமைதியே உருவாய் அதேநேரம் எங்களோடு நன்கு பழகிய தம்மிக்க ஐயாவிடமிருந்து அமைதியும் மௌனமும் வசீகரத்திற்குரியவை என்பதை அறிந்து கொண்டேன். நம்மளால முடியாது. முயற்சி செய்வோம்.

கிழக்கிலங்கை பல்கலையை முழுவதுமாகப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அறிஞர் பெருமக்கள், கல்வி நிறுவனங்கள் இவற்றைப் பார்ப்பது வழக்கம். 2011ஆம் ஆண்டில் இலங்கை சென்றபோது சிவத்தம்பி அய்யாவைப் பார்த்தோம். ஒரு மணி நேரம் அவரோடு உரையாடினோம். ஆனால் இங்கு நேரமில்லை – அதுதான் உண்மை. அதேநேரம் மட்டக்களப்பின் நூலகத்திற்குச் சென்றதும் புதிதாகக் கட்டப்பட்டுவரும் நூலகத்தைப் பார்வையிட்டதும் அந்த ஏமாற்றத்தை ஈடு செய்து விட்டது. எதிர்காலத்தில் புது நூலகம் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் இதைக் கட்டுகின்ற பொழுதே நாங்கள் பார்த்து விட்டோம், நாங்க பார்க்கக் கட்டிய கட்டிடம் இது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?.

அந்த நூலகத்திற்குத்தான் நாங்கள் 1300 வரையிலான நூல்களைக் கொடுத்திருக்கிறோம். விமான நிலையத்தில் புத்தகப் பெட்டிகளைப் பார்த்ததும் மலைப்பாக இருந்தது. நாணா, ஒளிவண்ணன் சார், சன்னா சார், கிரிஷ் எல்லாரும் அவற்றைக் கொண்டு செல்வது பற்றித் திட்டமிட்டிருந்தனர். அதெல்லாம் நீங்க எதுக்கும் யோசிக்காதீங்க கொண்டு போயிடலாம் என்றனர். மலைப்பு மறைந்தது. மனம் நிறைந்தது. நூல்களைக் கொண்டு சேர்த்து விட்டோம்.

மட்டக்களப்பு ஆளுநர் தொண்டமான் அவர்கள் மிக எளிமையான மனிதர். கருத்தரங்கு நடத்த வேண்டும் என்று முன்னரே பேசியிருந்தாலும் கடைசி ஒரு வாரத்தில் பிரம்மாண்டமாகக் கருத்தரங்கினை நடத்தியவர். அவரது எப்பொழுதுமே சிரித்த, துருதுருப்பான முகம் நமக்கு நாளும் சுறுசுறுப்பை, புத்துணர்ச்சியைத் தரும்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆரம்பித்த குதூகலமும் கொண்டாட்டமும் இப்பொழுது கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது. ஆனாலும் இரண்டு மாதங்கள் கழித்து அந்த அனுபவத்தை எழுதும் எனக்கு எதுவுமே மறக்கவில்லை. கண்முன் நிகழ்வதையே எழுதுகிறேன். மீண்டும் புத்துணர்வு கொள்கிறேன். எப்பொழுதும் ஏதாவது வேலையாக ஓடிக்கொண்டே இருக்கும் அத்துணைப்பேரும் அந்த ஐந்து நாட்களும் குழந்தைகளாகத்தான் மாறிப்போனோம். ஒவ்வொரு ஆளுமைக்குள்ளும் இவ்வளவு குழந்தைத்தனமும் விளையாட்டுத்தனமும் இருக்கிறதா? என்று ஒவ்வொரு நிமிடமும் நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஐந்து நாட்களும் வேலை செய்யவில்லையா? என்றால் அதுவும் நடந்தது. மிகப்பெரிய ஒரு சாதனையைத் தமிழ் மரபு அறக்கட்டளை செய்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடினோம் என்றுதான் சொல்ல வேண்டும். வடிவேலுவின் அது வேற வாய் இது வேற வாய் என்பதைப் போல ஒவ்வொருவரும் தங்களது அன்றாட வேலையிலிருந்தும் கொஞ்சம் தள்ளியிருந்து மகிழ்ந்தோம். மனதுக்கு இது புத்துணர்ச்சி என்றால் இடையில் தமிழ் இலக்கியம், தமிழ் ஆய்வுலகம் பற்றிய கலந்துரையாடல் அறிவுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. இது எங்களது அடுத்தடுத்த வேலைகளின் வேகத்தை நிச்சயம் அதிகப்படுத்தும்.

இப்பொழுது நினைத்தாலும் புத்தகச் சேகரிப்பு, கொண்டு சேர்த்தது, கருத்தரங்கு நடந்தது எதுவுமே கஷ்டமாகத் தோன்றவில்லை. காரணம் எல்லோரும்தான். சென்னை, கொழும்பு விமான நிலையங்கள், மட்டக்களப்பு எல்லாமே கலகலத்துப்போயின. தானா சேர்ந்த இந்த நட்புக்கூட்டம் எப்போதும் ஒருவரையொருவர் அரவணைத்து, தட்டிக்கொடுத்து, கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்தும் வேலை செய்யும் கூட்டம். வேலையின்போது ஒருவரையொருவர் கடிந்து கொண்டாலும் அடுத்த நொடியில் மாறிவிடும் மாற்றிவிடும் அனைவரது பண்பும் கற்றல்தான். இக்கருத்தரங்கில் நான் இன்னும் என்னை மெருகேற்றிக் கொண்டேன். பல்கலையிலும் கல்லூரியிலும் நிறைய கருத்தரங்குகளை நடாத்திய அனுபவம் இருந்தாலும் இதுவும் கற்றலைத்தான் தந்தது. வாழ்க்கை முழுவதும் கற்றல்தான் போலும்.


மட்டக்களப்பு: கருத்தரங்கம் – நூலாக்கம் – கலை இலக்கிய மாநாடு

— முனைவர் மு.இறைவாணி

இலங்கை என்றவுடன் நாம் அனைவரும் எப்போதும் அறிந்த பகுதிகள் யாழ்ப்பாணம், கொழும்பு, கிளிநொச்சி, திரிகோணமலை போன்ற இடங்கள். ஆனால் நாம் முழுமையாக அறியாத இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள வளமான நாடு மட்டக்களப்பு. இதனைக் “காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கிய இரத்தினத் தீவு” எனவும் “தெங்கிளநீரும் தீம்பலவின் நல்அமிர்தும் எங்கும் குறையா இயலுடைய நன்னாடு மட்டக்களப்பென்னும் மாநாடு” என விபுலாநந்த அடிகளாரால் சிறப்பாக போற்றப்பட்ட மட்டக்களப்பிற்கும் எனக்குமான தொடர்பு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது எனலாம். மட்டக்களப்பு தொடர்பான இரண்டு நாள்கள் இணையவழி கருத்தரங்கம் ஒன்றினை முனைவர் மௌனகுரு ஐயாவின் வழிகாட்டலில் நடத்தலாம் என தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்கள் என்னிடம் கூறியதில் தொடங்கியது எனக்கும் மட்டக்களப்பிற்குமான தொடர்பு.

முனைவர் மௌனகுரு ஐயாவுடன் தொடர்பு கொண்டு தலைப்பு, சிறப்புரையாளர்கள் எனத் தொடங்கி அதற்கான பணிகள் இணையவழி ஆலோசனைக் கூட்டங்கள் முனைவர் க.சுபாஷிணி அவர்களின் ஆலோசனை மற்றும் செயல்பாடுகள் என விரைவாகச் செயல்படத் தொடங்கி ஏப்ரல்21 மற்றும் 22 ஆகிய நாள்களில் மட்டக்களப்பு (வரலாறு – சமூகம் – பண்பாடு) என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கவுரை, தலைமையுரை, நிறைவுரை பேராசிரியர் பக்தவச்ல பாரதி மற்றும் எட்டு சிறப்புரையாளர்கள் என கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கம் குறித்த திட்டமிடலின் போதே வெறும் உரையாக மட்டும் அமைந்து விடாமல் இதனைச் சரியான முறையில் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கான சிறந்தவழி நூலாக்கம் எனக் கூறியிருந்தமையால் கட்டுரைகளை முன்பே சிறப்புரையாளர்களிடம் பெறுவதற்கான முயற்சிகளும் அப்போதே தொடங்கிவிட்டன. என்னளவில் சிறப்புரையாளர்களிடம் கருத்தரங்கம் தொடர்பான தகவல்கள் பேசத் தொடங்கியது முதல் நூலுக்கான கட்டுரைகள் பெறுவது வரை மிகச் சிறப்பாகத் தொடர்ந்தது. முகம் அறியா மனிதர்கள் ஆனால், நான் யாரிடம் பேசிய போதும் மறுப்புச் சொல்லாமல் ஒத்துக் கொண்டனர். இதற்கான இரண்டு காரணங்கள் ஒன்று மட்டக்களப்பிற்கு க.சுபாஷிணி அவர்கள் சென்று வந்த பயணம் மற்றும் ஆளுமைகளின் சந்திப்பு. மற்றொன்று மௌனகுரு ஐயாவுடன் எல்லோரும் கொண்டிருக்கின்ற குரு பக்தி. செயல் வெற்றி பெறவும் நான் இக்கருத்தரங்கில் செயல்படவும் சிறப்பான உறுதுணையாக அமைந்தது.

இக்கருத்தரங்கில் என்னுடன் முழுமையாக இணைந்து பயணித்தவர் முனைவர் ஆ.பாப்பா. மேலும், வருண்பிரபு, மணிவண்ணன் மற்றும் ஹேமா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி செம்மையுற நடைபெற துணைபுரிந்தனர். அறிவிப்பு, அழைப்பிதழ் நாணா இல்லாமலா? அவர் அன்றே எங்களை மட்டக்களப்பிற்கு அழைப்பிதழ் வழி அழைத்துச் சென்று வந்து விட்டார். அழைப்பிதழைப் பார்த்ததில் இருந்தே ஒருவித மயக்கம் எனத்தான் சொல்ல வேண்டும். வண்ணமும் வடிவமும் செம்மையாக இணைந்து என்னை மகிழ்வுறச் செய்தது. ஒருங்கிணைப்பாளர்களில் நானும் ஒருவள் அல்லவா?

நூலாக்கம்:
கட்டுரைகள் அனைத்தையும் பெற்று திருத்தம் செய்து ஜூலை மாதம் இறுதியில் வெளியிட்டிருக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் செயல் தொடங்கியது. பதிப்பகப் பொறுப்பாளர் முனைவர் ஆ.பாப்பா கட்டுரைகளை வாசித்துத் திருத்தம் செய்தார். திருமிகு. அருணேஷ் அவர்கள் பக்க வடிவமைப்பு செய்து கொடுத்தார். முனைவர் தேமொழி வலையொளிக் காட்சிகளை எல்லாம் விரைவுத் தகவல் குறியீட்டுடன் சிறப்புரையாளர் உரைகளைத் தனித்தனியாகத் தயார் செய்து கொடுத்தார். எல்லாப்பணிகளும் திட்டமிட்டப்படி செயல்பட்டு வரும் நிலையிலேயே தொகுப்பாசிரியர்களாக நீங்கள் இருவரும் இருந்து நூலினை முடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் மிக மகிழ்ந்தேன் நம் பெயரும் நூலில் வருகின்றதே என்று…

நூல் இறுதி வடிவம் பெற்று வரும் சூழலில் மகிழ்ச்சியான செய்தி; மட்டக்களப்பில் கலை இலக்கிய மாநாடு நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நன்முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முனைவர் க.சுபாஷிணி அவர்கள் கூறினார். எதிர்பாராத நிகழ்ச்சி இது. கருத்தரங்கம் நிறைவுற்றது. நூல் முடிவிற்கு வந்து கொண்டிருக்கின்றது. அந்நூலினை மட்டக்களப்பு கலை இலக்கிய மாநாட்டில் வெளியிடலாம் எனக் கூறி அதற்கேற்ற அச்சுப்பணியும் சிறப்பாக நடந்தேறியது. அட்டைப்படம் அழைப்பிதழுக்கு வடிவமைத்து இருந்ததே மிகச் சிறப்பாக உள்ளது அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறி எங்கள் பெயருடன் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் வாய்ப்பளித்த சுபாஷிணி அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்த்தேன். இன்று கல்லூரியில் நான் தொகுத்த நூல் என்று மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கலை இலக்கிய மாநாடு:
மட்டக்களப்பில் ஆகஸ்ட் 2 மற்றும்3 ஆகிய நாள்களில் கலை இலக்கிய மாநாடு நடத்தத் திட்டமிட வேண்டும் என முனைவர் க.சுபாஷிணி கூறினார். கருத்தரங்கப் பொறுப்பாளராக இருந்து பணிகள் செய்யவும் மாநாட்டில் கலந்து கொள்ளவும் இணைந்து பணியாற்றவும் கிடைத்த வாய்ப்பிற்கு என்றும் நன்றியுடன்…. கல்லூரிப் பணியோடு இப்பணியையும் எப்படிச் செய்தோம் என்று நினைத்தால் பெரும் வியப்பு. வெற்றிக்கான மிக முக்கியக் காரணம் நம் தலைவர் செயல்…. புயல்…. அவர்களின் சரியான திட்டமிடலும்… முன்னெடுப்பும்தான். செயலர் தேமொழி அவர்கள் இதனை இப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனத் திட்டமிட்டுச் செயலாற்றும் சூரர்.

என்னை இக்குழுவிற்கு அறிமுகப்படுத்தி செயலாற்ற வைத்த முனைவர் ஆ.பாப்பா அவர்களை என்றும் நினைவு கூறுவேன். பணிகளைப் பகிர்ந்து இதனை நீ செய். இதனை நான் செய்கிறேன் எனச் சொல்லி இணைந்து பணியாற்றிய செம்மையர். மட்டக்களப்பில் நம் சார்பாக ஒருவர் இருந்தால் நல்லது என நினைத்தவுடன் பேராசிரியர் குணபாலசிங்கம் அவர்கள்தான் நினைவில் வந்தார். அவரும் மிகவும் மகிழ்வுடன் கூறிய வார்த்தை இன்றும் என் நினைவில் ”ஒரு பணியை பொறுப்பெடுத்துக் கொண்டால் கட்டாயம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அவருடைய செயல்திறன் பாராட்டிற்குரியது. நாம் கேட்ட தகவல்களை உடனுக்குடன் அனுப்பி மிக உதவி செய்தார். அவர் யாருடைய பெயரை எல்லாம் கொடுத்தாரோ அவர்கள் எல்லாம் குணபாலசிங்கம் அவர்கள் மீது பெரும் மதிப்புடையவர்களாக இருப்பதைக் காண முடிந்தது.

தமிழகத்திலிருந்து பயணிப்பவர்களின் பெயர்ப்பட்டியல், அவர்களுக்கான ஆவணங்கள் பெறல். மட்டக்களப்பு நூலகத்திற்கான நூல்களை மதுரையில் பெற்று அதனைப்பட்டியலிட்டு பார்சல் செய்து அனுப்புதல். கருத்தரங்கத்திற்கான கட்டுரையாளர்களைத் தொடர்பு கொண்டு கட்டுரைத் தலைப்புகளைப் பெறுதல். கருத்தரங்கம் நடத்துவதற்கான அமர்வுகளைத் திட்டமிடல். மாநாட்டு மலர் தயாரித்தல். விருது பெறுவோர்க்கான பட்டியல் தயாரித்தல் என ஒவ்வொரு பணியிலும் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பணிகளாகவும் பயணமாகவும் இப்பயணம் அமைந்தது.

மிக முக்கியமான பெரிய செயல் என்றே சொல்லலாம். ஆம் இத்தனைப்பணிகளுக்கு இடையில் நான் ‘தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற வேண்டும் எனக் கூறியிருந்தனர். நான் சில ஆண்டுகளாகத்தான் தமிழ் மரபு அறக்கட்டளையோடு இணைந்து செயலாற்றி வருகின்றேன். 24ஆண்டுகளாக ஆவணங்களால் சிறப்புப் பெற்று இருக்கும் ஒரு நிறுவனத்தின் பணிகளை அதன் சிறப்பு குறையாமல் சொல்ல இயலுமா? என்ற பயமும். தகவல்களைத் திரட்ட நேரம் கிடைக்காமல் கல்லூரிப்பணி வீட்டிற்கு வந்தவுடன் மாநாட்டுப் பணி. தொடர் செயல்பாடு இருந்து கொண்டே இருந்தது. எப்போதும் ஒரு பயத்துடனே இருந்தேன்.

முனைவர் க.சுபாஷிணி அவர்களை மலேசிய இதழான தமிழ் மலரில் எழுதிய 97 கட்டுரைகளையும் வாசித்து இருந்ததாலும் அதில் உள்ள கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்யும் பணியினை நான் செய்து கொண்டிருந்ததாலும் எனக்குப் பல தகவல்கள் கிடைத்தன. அதனை எல்லாம் அவ்வப்போது சேகரித்து வைத்து இணையத்திலிருந்து பல தகவல்களை வாசித்தும் உரைக்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டேன். முனைவர் தேமொழி அவர்களும் எனக்குத் தேவையான பல தகவல்களைத் தந்து உதவி செய்தார். உரைக்கான தகவல்களைத் தயாரித்ததும் மட்டக்களப்பு கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமர்வில் வாசித்ததும் புதிய அனுபவமாக அமைந்தது.

பயணத்தில் வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைசார் வல்லுநர்கள் அத்தனை ஆளுமைகளையும் முனைவர் க.சுபாஷிணி அறிந்திருந்ததும் அவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உயர்ந்தது. அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தியும் காட்டினார். தன்னை மட்டும் உயர்வாக நினைக்காமல் பலரிடமும் என்னைச் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கு மாகாண ஆளுநர் திருமிகு. செந்தில் தொண்டமான் அவர்களுடன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்ற போதும் அறிமுகப்படுத்தினார். அவரை நேரில் சந்தித்த போது தாமாகவே முன்வந்து தங்களை நான் அறிவேன் என்று அவர் கூறியது எனக்குப் பெருமையாகவும் இருந்தது. ஆளுநருடைய உயர்ந்த மனப்பான்மையையும் அறிய முடிந்தது.

மறக்க முடியாத பல நினைவுகள். உடன் பயணித்த ஆளுமைகள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தது மிகச் சிறப்பு. மட்டக்களப்பு பயணம் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் ஆரோக்கியமான இலக்கியம், சமுதாயம், படைப்புலகம் குறித்த கலந்துரையாடலாகவும் அமைந்தது. கருத்துக்களைக் கவனத்துடன் கேட்டதும் விவாதமாக இல்லாமல் அவரவர் பார்வையில் கருத்துகளைப் பகிர்தலும் அதனை அனைவரும் உற்றுக் கேட்டதும் மிகச்சிறப்பு. கலை இலக்கிய மாநாடாக மட்டுமல்லாமல் எங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மரபுப்பயணமாகவும் மட்டக்களப்பு பயணம் அமைந்திருந்தது. மட்டில்லா மகிழ்வுடன் நான்.


மட்டக்களப்பு பயணம்

— கீர்த்திவர்மன் பெருந்தச்சன்

நீண்டநாட்களாக இலங்கைத் தமிழர்களுக்காக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்றிருந்த கனவை நிறைவேற்றியது நமது தமிழ்மரபு அறக்கட்டளையின் மட்டக்களப்பு பயணம். கொடையில் சிறந்தது உணவுக்கொடை, அதனினும் சிறந்தது அறிவுக்கொடை. இதை உணர்ந்த இக்கால அருண்மொழிவர்மன் மாண்புமிகு ஆளுநர் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மரபை உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கும் நமது தலைமை முனைவர் க. சுபாஷிணி அவர்களின் முயற்சியால் மிகச்சிறப்பாகப் பெரிய அளவில் மட்டக்களப்பில் நிகழ்த்தப்பட்ட உலகத்தமிழ்க் கலை இலக்கிய மாநாட்டினால் இது சாத்தியமாகியது.

முனைவர் சுபாஷிணி அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அறிவுக்கொடையாக மட்டக்களப்பு நூலகத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட நூல்களை அறிவுக்கொடையாக அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மதுரையில் உள்ள எனது நண்பர் செல்வகுமார் அவர்களைத் தொடர்பு கொண்டு நூலகத்திற்கு நூல்கள் வேண்டியிருப்பதைத் தெரியப்படுத்தியவுடன் நமது நிறைவாணியாகிய முனைவர் இறைவாணியிடம் 100 நூல்களை ஒப்படைத்தார்.

சென்னை நண்பர்களை அணுகியபோது 100க்கும் மேலான நூல்களை முனைவர் ஒளிவண்ணன் அவர்களிடம் சேர்த்துவிட்டனர். மேலும் எனது சார்பாக வரலாறு மற்றும் சுயமுன்னேற்ற நூல்கள் 28-ம் சுளுந்தி ஆசிரியர் முத்துநாகு அவர்கள் சார்பாக சுளுந்தி மற்றும் குப்பைமுனி நாவலும் வழங்கினோம்.

வெளிநாடுகளுக்கு நூல்களைக் கொண்டு செல்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளதை நான் என்னுடைய ஸ்விட்சர்லாந்து பயணத்தில் அனுபவப்பட்டுள்ளேன். நமது தமிழ் மரபு அறக் கட்டளையின் ஏற்பாட்டில் வழங்கப்பட உள்ள நூல்களை எவ்வாறு கொண்டு செல்லப் போகிறோம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் திரு. கௌதமசன்னா அவர்களும் ஒளிவண்ணன் அவர்களும் மிக எளிதாக நமது உறுப்பினர்களுடன் இணைந்து அதைச் சாதித்துக் காட்டினார்கள். அந்தப் பிரமிப்பு அடங்குவதற்குள் திரு. நாணா அவர்களின் ஏற்பாட்டில் விமான நிலையத்திற்குள்ளேயே அறுசுவை காலை உணவும் பரிமாறப்பட்டது மேலும் பிரமிப்பைக் கூட்டியது.

முனைவர் சுபாஷிணி அவர்களின் ஏற்பாட்டில் விமானநிலையத்திலிருந்து உறுப்பினர்கள் அனைவரும் 8மணிநேரம் பயணம் செய்ய ஏதுவாக குளிர்சாதனப் பேருந்தும் சிங்களம் அறிந்த இனிய நண்பர் ஒருவருடன் இனிதாகத் துவங்கிய பயணத்தில் கற்பனையில் கண்டிருந்த இலங்கையின் எழிலை நேரடியாகக் கண்டு வியந்தேன். செல்லும் வழியில் பசிக்கான உணவுடன் செவிக்கான உணவாக முனைவர் பத்மாவதி, திரு. கௌதமசன்னா, முனைவர் பக்தவத்சல பாரதி, திருமிகு. இந்திரன், முனைவர் ந. கண்ணன், திருமிகு. சந்தானம் அவர்களின் சிந்தனைச்சிதறல்கள் செவிக்குணவாக அமைந்தது. பயணச்சோர்வை நீக்க கிரிஷ், முனைவர் பாப்பா, செல்வ முரளி அவர்களின் நொறுக்குத்தீனி துணை செய்தது. மட்டக்களப்பை சென்று அடைந்தவுடன் அங்கு முனைவர் சுபாஷிணி ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் அரசு விழாக்கள் போல் இல்லாமல் தனியார் விழாக்களுக்கான ஏற்பாடு போல் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்தது, உணவும் அவ்வாறே.

இந்தியாவில் உள்ள நமது அண்டை மாநிலத்திலேயே ஒரு திருவள்ளுவர் சிலை அமைத்திடப் பல ஆண்டுகள் காக்க வேண்டி இருந்தது. ஆனால் நமது இக்கால அருண்மொழிவர்மன் மாண்புமிகு ஆளுநர் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள் மற்றும் நமது முனைவர் சுபாஷிணி அவர்களின் முயற்சியால் அண்டை நாட்டிலேயே திருவள்ளுவர் சிலை மிகக் குறுகிய நாட்களில் அமைத்தது மிகப் பெரும் சாதனையாகும்.

அங்கு நடந்த பள்ளிக்குழந்தைகளின் நாட்டிய ஊர்வலமும் கலைநிகழ்ச்சியும் மிகச்சிறப்பு. கல்வி நிலைய வளாகங்களில் நடைபெற்ற அனைத்து அமர்வுகளிலும் மாணவர்களும் ஆசிரியப் பெருந்தகைகளும் கவனித்தும் கேள்விகள் கேட்டும் விவாதித்ததும் அவர்களின் ஆர்வத்தை வெளிக்காட்டியது. நிகழ்வுகள் முடிந்து திரும்பும் வழியில் மிக நீண்டகாலமாகக் காண வேண்டி எண்ணம் கொண்டிருந்த அருண்மொழிவர்மன் பாதம் பட்ட பொலன்னறுவா நகர் தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய தளகர்த்தர்களுடன் அவர்களின் விளக்கங்களுடனும் கேட்டு கண்டு களித்தது எக்காலத்திலும் கிடைக்காத பேறு.

இதுபோன்ற நல்லநோக்கம் கொண்ட பயணமும் அறிவுக்கொடை அளிக்கும் விழாக்களும் நமது தமிழ் மரபு கட்டளையின் முனைவர் சுபாஷிணி அவர்களால் மட்டுமே சாத்தியமாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தப் பயணம் ஒரு குடும்ப பயணம் போல் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு உதவிகள் செய்து ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்தது வரலாற்றில் எழுதப்பட வேண்டியது. அனைத்து உறுப்பினர்களையும் அலுங்காமல் குலுங்காமல் அழைத்துச் சென்று அவ்வாறே தாய்மண் சேர்த்த தலைமைக்கும் தோழமைகளுக்கும் மிக்க நன்றி.


இலங்கையின் இளங்’கை’

— எழுத்தோவியன் என்.எஸ், நாணா

தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கையின் கிழக்கு மாகாணப் பயணம் மறக்க முடியாத ஒரு மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பயணமாக அமைந்தது.

’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’
அவரவர் உடைமைகளுடன் அதிகாலை புறப்படத் தாயாராகிக் கொண்டிருந்தவர்களின் அந்த நாளின் சிற்றுண்டி மற்றும் மதிய உணவைப் பற்றி அதற்கு முதல் நாளே என்னை அழைத்து இதனை இவன் கண் விடல் என்ற திரு. சன்னா அவர்களின் எண்ணம், அந்த ருசிகரமான சவால் சாத்தியப்பட்டது. உணவைச் செவ்வனே செய்து, காலை விமான நிலையத்திலேயே, நண்பர் சந்தானம் அவர்கள் சொன்னதுபோல்… ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ அந்த சமையல் கிரேஸ் அக்காவுக்கு நன்றி.

சந்தேகம் தீர்த்த கூகுளாண்டவர்’
தமிழ் மரபு அறக்கட்டளையின் 16 பேர் கொண்ட குழு; இருபதுக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான பெட்டிகள்; கொழும்பு விமான நிலைய ஊழியர்களுக்குச் சந்தேகம் வரத்தானே செய்யும். சந்தேகம் வந்தது; ஓரிரு பெட்டிகள் பிரிக்கப்பட்டதில் அத்தனையும் புதிய தமிழ்ப் புத்தகங்கள் மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு அன்பளிப்பாகக் கொண்டு செல்கிறோம் என்று படாதபாடுபட்டுப் புரியவைத்தோம்.

நண்பர்கள் திரு. கௌதம சன்னாவும், பதிப்பாளர் நண்பர் திரு ஒளிவண்ணனும் அத்தனை பெட்டிகளையும் பிரிக்கச் சொன்னால் என்னாவது என்ற நேர மேலாண்மை குறித்த கவலையில் இருக்க, எங்கள் எல்லோருக்கும் பிரித்த பெட்டியின் ஓரிரு நூல்களை கையில் எடுத்துத் திகைத்துக் குழம்பிய அந்த சிங்களம் பேசும் அதிகாரிக்கு தமிழ் வாசிக்க முடியாத சூழல் (அந்த நேரத்தில் நான் என்னுடைய கணினிப் பயிற்சி வகுப்பெடுக்கும் யுனிக்கோடு எழுத்துமுறைமையின் சிறப்பு குறித்த ஸ்லைடு போல) அந்த அதிகாரியின் மொபைலில் உள்ள கூகுள் லென்ஸ் பற்றி ஒரு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தார் ஒளிவண்ணன்.

அந்த நேரத்துச் சிக்கல் தீர்ந்து அப்பாடா என்று இலங்கை வரைபடத்தின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை நோக்கி நகர்ந்தோம். இந்த சுவாரஸ்யமான கூகுள் லென்ஸ் பயன்பாட்டையும் கிழக்கு மாகாணக் கல்லூரியின் அரங்கில் ‘ காலந்தோறும் எழுத்துரு’ என்ற எனது உரையில் சேர்த்துச் சொன்னபோதில் அந்தக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் கைதட்டு அழகு சேர்த்தது.

அனுமதிக்கப்பட்ட எடை அளவுக்கு எதையாவது பொருட்களை அள்ளி எடுத்துக்கொண்டு போகலாம்தான். அதுவும் இலங்கை மாதிரியான நாடுகளுக்கு எதைக் கொண்டு சென்றாலும் அங்கு அது மிகப்பெரிய விலையைப் பெற்றுத்தரும். ஆனால் நாங்கள் சென்ற 16 நண்பர்களுடன் சேர்ந்து 20 பேரும் ஆளுக்கு 20 கிலோ புத்தகங்களை எடுத்துச் சென்றோம். அதை மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக நான் பார்க்கிறேன்.

‘வடிவமைப்பு வாய்ப்புக்கு நன்றி’
அரை நூற்றாண்டுக் கால யுத்த சத்தம் ஓய்ந்து தமிழின் பாரம்பரியக்கலைகளுடன் கணினிப் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு, ஸ்டார்ட் அப் கம்பெனி நுணுக்கங்கள் என எல்லா விடயத்திலும் அந்த மாணவர்களின் அவதானிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தட்டச்சு செய்யாமலே பேசினாலோ அல்லது எழுதினால் போதும். அதை ஒரு நொடியில் எப்படி ஒருங்குறி எழுத்துப் பனுவலாக மாற்றலாம் என வகுப்பெடுத்தேன். மீண்டும் ஒரு நாள் உங்கள் பயிற்சிப் பட்டறை நடத்த வரணும் என்று அன்பின் அழைப்புக்கு, மீண்டும் வருவேன் என உத்தரவாதம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இந்த விழா அழைப்பிதழ் தொடங்கி, வெளியீடு கண்ட ‘மட்டக்களப்பு’ புத்தக அட்டை மற்றும் விளம்பரப்பதாகைகள் என எனக்களித்த வடிவமைப்புக்கு வாய்ப்புக்கு என் நன்றி.

‘இலங்கையின் இளங்’கை’
கிழக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த மாநாட்டைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் இராணித் தேனீ சுபாஷிணி அவர்களுடன் வடிவமைத்து மட்டக்களப்பு மக்களின் பேராதரவுடன் தபால் தலை வெளியீட்டுடன் அழகாக அரங்கேறியது.

திருவள்ளுவர் சிலை திறப்பு அதைத்தொடர்ந்து வழியெங்கும் கலை நிகழ்ச்சிகளுடன் அந்த எளிய மக்களின் காதுகளில் நாதஸ்வர சத்தமும் தாரை தப்பட்டைகளும் முழங்க அற்புத இசையுடன் ஊர்வலம் அழகு. ஆர்வமிக்க ஆசிரியர்கள்- மாணவர்களின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஊர்வலத்திலும் மேடையிலும் நாட்டியங்களாகத் தொடர்ந்தன. வெயிலின் கொடுமையைத் தணிக்க வழியெங்கும் தண்ணீர் ஊற்றப்பட்ட சாலையில் மாணவர்கள் மிகப் பொறுமையாக மிக அழகாக அவர்கள் அணிவகுத்துச் சென்றது தமிழுக்கு அழகு. அதிலும் கையூன்றி மின்னல் பல்டி அடித்து ஆடிவந்த புலியாட்டம் அமர்க்களம்.

ஓவிய சுகம்’
இந்த மாநாட்டு நாயகர் திரு செந்தில் தொண்டமான் அவர்களை அவசரம் அவசரமாக ஒரு பென்சில் டிராயிங் வரைந்து அந்த மேடையில் கொடுத்தேன். மட்டற்ற மகிழ்ச்சி. பெறுபவருக்கும் கொடுப்பவருக்குமான ஓர் ஓவிய சுகம்! இன்ப அதிர்ச்சியாக அன்று மாலை அவர் பிரதமர் உள்ளிட்ட மிகப்பெரிய அதிகாரிகளுடன் சந்திப்பை முடித்துவிட்டு எங்களையெல்லாம் நேரில் வந்து சந்தித்துப் பாராட்டிச் சென்றது என்பது வாழ்நாள் சுகம். தொண்டமான் அவர்களின் தாத்தா கையெழுத்து அழகாய் இருக்குமாம். எழுத்துருவாகும் நாள் விரைவில்.

அத்துடன் பத்மாவதி அம்மா அவர்களுடன் பொலன்னறுவ புத்தவிகாரை சென்று வந்த அனுபவத்தை ஒரு புத்தமாகவே எழுதலாம்…எழுதணும். படங்களுடன் ஆவணப்படுத்தணும், காலம் கைகூடும், காத்திருப்போம்! தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கும், மட்டக்களப்பு வாழ் அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி!


You may also like