1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்!
இடம்: பச்சையப்பன் கல்லூரி, சென்னை
நாள்: 23′ ஆகத்து 2024
ஆலடி எழில்வாணன்
1924, சிந்துவெளி நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைத்தார் சர் ஜான் மார்ஷல். அதனை நினைவுபடுத்தும் விதமாக 2024ஆம் ஆண்டு சிந்துவெளி நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடுகிறது. தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக, அன்றைய நாளின் சிறப்புகளின் தொகுப்புரையாக, எனக்குப் பேச வாய்ப்பளித்த தோழியார் முனைவர் சுபாஷிணி அவர்களுக்கு நன்றி. பச்சையப்பன் கல்லூரியின் திருவள்ளுவர் மன்றம் நிறைந்திருந்தது மனதுக்கும் நிறைவாக அமைந்தது.
தலைமையுரையாற்றிய முனைவர் க.சுபாஷிணி, ஆளுமைகளுக்கு வழிவிட்டு அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தார். இவ்விழாவில் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுடனான தனது நேர்காணலை முனைவர். க. சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக, “சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்” என்ற நூலாக வெளியிட்டு மகிழ்ந்தார்.
- திரு. ஆர்.பாலகிருஷ்ணன் இஆப
- முனைவர் பக்தவத்சல பாரதி
- முனைவர் ப. பாண்டியராஜா
- திரு. ஐயன் கார்த்திகேயன்
- பேராசிரியர். அரசு செல்லையா
- முனைவர் சுந்தர் கணேசன்
மேற்குறிப்பிட்ட புகழ்மிக்க ஆளுமைகளிடையே பேசும் பெரும் வாய்ப்பு கிடைத்த பெருமிதம் எனக்கு, அதிலும் நான் போற்றிப் பின்பற்றும் ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்பு பேசும்போது ஒரு மாணவனைப் போன்ற பரவசநிலை. வாருங்கள் முக்கிய ஆளுமைகள் என்ன பேசினார்கள் என ஆராயலாம்.
முனைவர் ப. பாண்டியஜா :
முதல் பேச்சாளராக மூத்த ஆளுமை மற்றும் சங்க இலக்கிய ஆர்வலர் முனைவர் ப. பாண்டியராஜா, சங்க இலக்கியம் ஒரு ‘நகைப்பெட்டி’, அதன் சாவியை திரு.ஆர்.பாலகிருஷ்ணன் போன்றோர் சரியாகக் கையாள்கின்றனர் என எடுத்துரைத்தார். தமிழ் மாணவர்கள் பிற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும், அது போல பிற துறை மாணவர்கள் தமிழை உரிமையோடு அணுக வேண்டும் என்ற முக்கியக் கருத்தை அவர் பேசியபோது மாணவர்கள் கைதட்டி அதனை வரவேற்றது, அது நம்பிக்கை ஒலி என உணர வைத்தது. முனைவர் ப. பாண்டியராஜா, அவர்களின் சங்கம்பீடியா என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி, “செயலே அழகு” என நிரூபித்தார். சங்க இலக்கியத்தை உங்கள் விருப்பப்படி வாசிக்க sangampedia.net இணைய தளத்தைப் பார்க்கவும்.
திரு.ஆர்.பாலகிருஷ்ணன் :
தனது விருப்ப நடிகர் படத்தை முதல்நாள் முதல் காட்சியில் காண்பது போல், நான் போற்றிப் பின்பற்றும் ஆளுமை, இந்நிகழ்ச்சியின் நாயகன், ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் நேர் எதிரே நானும் முதல் வரிசையில் அமர்ந்து, அவரின் அறுபது நிமிட உரையைக் குறிப்பெடுத்தபடியே லயித்தேன். அருகில் இருந்த அண்ணன் ஒளிவண்ணன், “எப்படிங்க! இந்த மாதிரி…” எனக் கேட்க “certain things in life are unconditional” என்றேன். ஒரு கைதேர்ந்த பேராசிரியருக்கு எப்படி மாணவர்கள் கட்டுப்படுவார்களோ, அதுபோன்றே அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டனர். “தகவல் விடுபட்டு விடுமோ?” என மாணவர்கள் தொடர்ந்து கைதட்டாமல் நிதானித்தது புதிது.
சிந்துவெளியில் சங்க இலக்கியத்தின் தொடர்பைப் பறந்து பறந்து பரப்ப வேண்டும் என மாணவர்களிடம் எடுத்துரைத்தார். Find new paths in old existing paths என வழிகாட்டினார். தான் கலந்துகொண்ட 1984 IAS பயிற்சியின்போது, தனக்கு சிந்துவெளி வழிகாட்டியான திரு.ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி நாகரிகத்தின் அறிமுகத்தை எடுத்துரைத்த நாளும், 2007ஆம் ஆண்டு IAS பயிற்சியாளர்களுக்கு மிசூரியில் (Missourie) தான் பேசிய நாளையும் நினைவுகூர்ந்து, அந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே தேதி என்ற ஆச்சரியத் தகவலைப் பகிர்ந்தார். “ஐராவதம் மகாதேவன் – ஆர்.பாலகிருஷ்ணன்” உறவின் ஆழம் ஓர் அழகான நெகிழ்ச்சி. 1924ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியப் பண்பாடு எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என மாணவர்களுக்குப் பாடமாகப் போதித்தார். சர் ஜான் மார்ஷல் ஏன் கொண்டாடப்படவில்லை? உண்மையைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும், கடந்த காலத்தைக் காப்பாற்ற வேண்டும் எனத் தரவுகளுடன் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் பேசியது அருமையாக இருந்தது.
சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த நடனமங்கை சிலையை, நடனம் மற்றும் நளினத்தின் அடையாளமாகப் பார்க்காமல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல உரிமைக்குக் குரல் கொடுத்தவர், போராளியாக இருந்திருக்க வேண்டும் என ஆர்.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இதற்காகத் தானே நிகழ்ச்சிக்கு வந்தாய் எழில்வாணன்” எனச் சிலிர்த்துச் சிரித்தேன். மேலும், சங்க இலக்கியத்தில் கடல் பற்றிய குறிப்பு, trade wind, சங்க இலக்கியம் master key, சங்க இலக்கியம் ஒரு மழைக்காடு, காசுமாலை வரலாறு என அடுக்கிக்கொண்டே போனார். சிந்துவெளி hardware என்றால் சங்க இலக்கியம் software என அவர் சொல்கையில், இதைவிட எளிமையாக எப்படிப் புரியவைக்க முடியும் என உணர்ந்தேன்.
நிறைவாக, “விநாயகர் – முருகன்” இவர்களுக்கு வடக்கிலும், தெற்கிலும் உள்ள வேறுபாடு, ராவணனுக்குக் கோவில்கள் வடநாட்டில் தான் அதிகம் உள்ளன, தூரம் – இடைவெளி (distance – gap) வேறுபாடு எல்லாம் எடுத்துரைத்து, “இவ்வளவு தரவுகளை ஒரு மேடைப்பேச்சில் பேசமுடியுமா?” என ஆச்சரியப்பட வைத்தார் ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன். “தான் பலமேடைகளில் குறிப்பிடும் வெறுப்புணர்வு அற்ற பொறுப்புணர்வு வேண்டும்” எனப் பேச்சை முடிக்கையில் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது. நான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சினைக் கவனமாகக் குறிப்பெடுத்தேன், மொத்தம் 29 எண்கள்; எண்ணங்களோ எண்ணிலடங்கா!
முனைவர் பக்தவத்சல பாரதி :
90களில், 35ஆவது ஓவரில் சதமடித்து அவுட்டான சச்சின், மட்டையை உயர்த்தியபடியே வெளியேறும் போது, அடுத்த 15 ஓவர் என்ன ஆகும் எனப் பரபரப்பாக ரசிகர்கள் அலசுவார்கள். யாரும் எதிர்பார்க்காத டிராவிட் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவிப்பதைப் போல மேடையேறினார் முனைவர் பக்தவத்சல பாரதி. மாணவர்கள், பேராசிரியர், மேடை ஆளுமைகள் என அனைவரின் கவனத்தையும் அனுபவம், நிதானம் வழியாக ஈர்த்தார். திரு.ஆர்.பாலகிருஷ்ணனை நூற்றாண்டின் ஆய்வாளர் எனப் புகழாரம் சூட்டினார். முதுமையிலும் முழுமையாகக் கடமையாற்ற வேண்டும் என்பது முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களிடம் நான் கற்ற பாடம்.
தனது பேச்சில் . . .
சிந்துவெளி = கீழடி + சங்க இலக்கியம்
கீழடி = சிந்துவெளி + சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் = சிந்துவெளி + கீழடி
என அனைவரும் ஏற்கும்படி இந்தப் புதிய கணக்கை அவர் எடுத்துரைத்தபோது முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களின் அனுபவத்தை வணங்கத் தோன்றியது. உலகில் 10,500க்கும் அதிகமான இனங்கள் உண்டு. சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாடு மற்றும் இயற்கை தேர்வு (Charles Darwin evolution theory and natural selection) என அவர் பேசிய பேச்சு, அவர் ஒரு கைதேர்ந்த ஆய்வாளர் என்பதை உணர்த்தியது. இன்று வடநாட்டில் புனைவுகளால் கட்டமைக்கப்படும் இல்லாத சரசுவதி நாகரிகத்தின் இடர்ப்பாடுகளை அம்பலப்படுத்தினார். இதனைப் பல ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் ‘The Vedic People’, ‘Early Indians’ நூல்களின் தரவுகளுடன் பேசும்போது வியக்காதவர் வெகு சிலரே.
நேரத்தைக் கவனத்தில் கொண்டு விரைவாகச் சில தகவல்களைப் பகிர்ந்தார். 160 நாடுகளில் தமிழ்ச் சமூகம், இறுதியாக வந்தவர்கள் ஆரியர்கள், அரப்பாவில் மலைகள் இல்லை- அது கரிசல் காடு, ஆப்கானிஸ்தான் வழியாக ரிக்வேதம் 17ஆம் நூற்றாண்டில் வேரூன்றியது, சரசுவதி vs சிந்து, Alpine Aryans – Nordic Aryans, இடம் பெயரும்போது பிடிமண் எடுத்துச் செல்வது எனத் தகவல்களை மழையெனப் பொழிந்தார் முனைவர் பக்தவத்சல பாரதி.
முதுமையைப் பொருட்படுத்தாது வியர்த்தபடியே 45 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை என் போன்ற ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளித்தது. முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கு எனது “வியப்புரை” நூலை வழங்கினேன். இப்படிப்பட்ட நூல்கள் அவசியம் என அவர் என்னை வாழ்த்தியபோது ஏற்பட்ட உணர்வு புதிது.
கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவருந்தும்போதும் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் – முனைவர் பக்தவத்சல பாரதி எனப் பலரும் பேச, உணவிலும் கருத்து பரிமாறப்பட்டது.
ஓர் ஆழமான தலைப்பில் கருத்தரங்கம், ஆறு ஆளுமைகள் பேச இருக்கிறார்கள், அதுவும் காலை முதல் மாலை வரை, மாணவர்கள் கலந்து கொள்வார்களா, அதிலும் மதிய அமர்வு எப்படி இருக்கும் என்ற பல ஐயப்பாடுகள் இயல்பாக எனக்கும் எழுந்தன. ஆனால், சொல்லி வைத்தது போலச் சரியாக 1:30 மணிக்கு மாணவர்களும், மொழி ஆளுமைகளும் அரங்கத்தில் அமர்ந்ததைப் பார்க்கையில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கைகுலுக்கின.
முனைவர் அரசு செல்லையா :
நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கா மேரிலேண்டில் வாழும் சூழலியல் ஆர்வலர் முனைவர் அரசு செல்லையா, தனது பேச்சில் கருத்தரங்கத்தின் புதிய வாசலைத் திறந்தார். உலகளாவிய பல தரவுகளைக் கருத்தரங்கின் தலைப்போடு அழகாகக் கோர்த்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு இதுபோன்ற அடர்த்தியான தலைப்பில் சுவாரசியமாகப் பேசுவதே சவால். இதனைத் தனது அனுபவத்தால் அணுகி, கூட்டத்தை அமைதியாக அமரவைத்தார் முனைவர் அரசு செல்லையா.
நான் பெரியாரியவாதி எனத் தலைநிமிர்ந்து பேச்சை ஆரம்பித்தபோது, “அட! இது நம்ம ஆளு” என நெருக்கமானார் முனைவர் அரசு செல்லையா. உலக உருண்டையின் சிறப்பைப் பல அரிய தகவல்களோடு எடுத்துரைத்தார். பல இலட்ச ஆண்டுகள் பூமியை ஆட்கொண்ட டைனோசரே இன்று இல்லை, அப்படியிருக்க மனிதன் எம்மாத்திரம்? என்ற நம் நிலையாமையை “Human Vulnerability” என மேற்கோளிட்டார். நான் விரும்பி வாசித்த Charles Darwin, Yuval Noah Harari எழுத்தாளர்களைக் குறிப்பிட்டது சிறப்பு. பூமியில் இதுவரை ஐந்து முறை பேரழிவுகள் (Mass Extinction) நிகழ்ந்துள்ளன, நாம் ஆறாவது பேரழிவைச் சந்திக்க உள்ளோம் என அவர் தரவுகளுடன் பேசியபோது, அச்சமும், அவசியமும் ஆட்கொண்டது. இப்படி இருக்கையில் மனித இனம், நிலம், மதம், மொழி வேறுபாடுகள் எல்லாம் எம்மாத்திரம் எனப் புரியவைத்தார். பெரியாரின் பெண் உரிமை கொள்கையை, ஒபாமா பெண் அதிகாரத்தின் அவசியத்தை அழகாக இணைத்தார். இறுதியில் “India Belongs To India” என்ற அம்பேத்கர் சொல்லாடலையும், “செல்வத்தின் பயனே ஈதல்” என்ற சங்க இலக்கிய வரியையும் மாநாட்டின் நோக்கத்துடன் சேர்த்தது முனைவர் அரசு செல்லையா பேச்சின் சிறப்பு.
ஐயன் கார்த்திகேயன் :
தமிழ்நாடு அரசின் தரவுகள் உண்மை சரிபார்க்கும் அமைப்பின் (TN Fact Check Unit) இயக்குநரை இம்மாநாட்டிற்குச் சிறப்புரையாற்ற அழைத்திருந்தது புதியதாகத் தோன்றியது. அகழாய்வு மற்றும் வரலாற்றுத் தகவல்களைத் திட்டமிட்டே திரித்துப் பரவும் கூட்டம் பெருகுவதை உதாரணங்களோடு வெளிப்படுத்தினார். இன்று சமூக ஊடகத்தில் பரப்பப்படும் கட்டுரைகள், குறிப்புகள், மீம்கள் மற்றும் சில காணொளிகள் எல்லாம் மக்களைத் திசைதிருப்ப, உண்மையை மறைக்கக் கையாளப்படும் யுக்திகள். இது இன்றைய தகவல் தொழில்நுட்பக் காலத்தில் மட்டுமல்ல, பல காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனப் புரிய வைத்தார்.
Uniformity vs Equalityயில் புதைந்துள்ள அரசியல் ஆபத்து, Myth leads to fascism சிந்திக்க வேண்டியதன் முக்கியத்துவம் போன்ற கருத்துகளை மாநாட்டின் தலைப்போடு பொருத்திப் பேசினார். ஐயன் கார்த்திகேயன் பேச்சின் சிறப்பாக அமைந்தது, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” என்ற தலைப்பில் எண்ணற்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் உலவுவதை மேற்கோளிட்டு, நம்மைப் பழமைவாத சிந்தனைக்கு மடைமாற்ற ஒரு தீய சக்தி துணை போகிறதைத் தனது அலுவல் அனுபவத்துடன் இணைத்து பேச்சை நிறைவு செய்தார்.
முனைவர் சுந்தர் கணேசன் :
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (RMRL Chennai) இயக்குநர், இனிய நண்பர் சுந்தர் கணேசன் அம்மாநாட்டின் தலைப்பிற்கே மகுடம் சூட்டும் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூல்களான ‘Journey Of A Civlization : Indus to Vaigai” மற்றும் “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை” உருவாக்கம் மற்றும் கட்டமைப்பைப் பற்றிச் சிறப்பாகப் பேசினார்.
RMRL என்பது ஒரு ஆராய்ச்சி நிறுவனம், அதிலிருந்து வெளியான முதல் நூல் “Journey Of A Civlization : Indus to Vaigai” என்பது குறித்து விவரமாகப் பேசினார். உலகத் தரத்துடன் வரவேண்டும் என்ற முனைப்பு, நூலின் ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்தியது, ஒவ்வொரு செயலுக்கும் முடிவுக்கும் பின்னால் உள்ள காரணங்கள் என அடுக்கினார். புதிய வாசகர், இளம் வாசகர், முதியோர், அறிஞர், ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் எனப் பலதரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கம் இந்நூலின் வெற்றிக்கு ஓர் காரணம். குறிப்பாக, படங்களுக்காகச் செலுத்திய உழைப்பு, செலவு எல்லாம் ஆச்சரியத் தகவல். அதிலும் ஆங்கிலத்திலிருந்து அதே எண்ணத்தோடு தமிழில் இயற்றியதைக்கூறி சாதனையாளர் பெருமிதத்துடன் பேச்சை நிறைவு செய்தார் நண்பர் சுந்தர் கணேசன்.
திரு.ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய “Journey Of A Civlization : Indus to Vaigai” மற்றும் “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை” ஆகிய இரண்டு நூல்கள் எனது வாசிப்பின் மகுடத்தில் உள்ள வைரக் கற்கள் என்றால் மிகையாகாது. எனது வாசிப்பு, எனது சிந்தனை மற்றும் செயலை மாற்றிய இந்த நூல்கள் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் பாதையில் பயணிக்க வைத்தது. “வியப்புரை” எனும் நூலை எழுதவும் வைத்தது. அப்படிப்பட்ட நூலைப் பற்றிய பேச்சு எனக்கு நெருக்கமாகப்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆறு ஆளுமைகளின் பேச்சுகளை இணைத்துப் பேசும் தொகுப்புரை கடமையை எந்த நம்பிக்கையில் தோழி முனைவர் சுபாஷிணி எனக்களித்தார் என ஆராய்வதைவிட, கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பே எனக்கு முக்கியமாகப் பட்டது. மேலும், இது எனது ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இருக்கும் அவையில் பேசும் முதல் வாய்ப்பு. காலை முதல் அனைவரின் பேச்சின் முக்கிய அம்சங்களைக் குறிப்பெடுத்தேன், குறிப்பே ஐந்து பக்கங்கள். நான் பேசுவதற்காக ஏழு பக்கக் குறிப்புகளை உள்ளடக்கிப் பேசினேன். இடை இடையே கிடைத்த கைதட்டல்களும், ஆமோதிக்கும் தலையாட்டல்களும், வெளியே செல்லாத கால்களும் பேச்சைக் கவனிக்கிறார்கள் என உணர்த்தின. பேசி முடித்ததும் தோழி சுபாஷிணியின் கட்டைவிரல் உயர, ஆர்வமாகக் கவனித்த திரு.ஆர்.பாலகிருஷ்ணன் முகமலர்ச்சி, சுந்தர் கணேசன் கையசைப்பு, பின்னால் அமர்ந்து ரசித்த எனது மாணவத் தோழன் ஸ்டீபன் ராஜ் முகத்தில் பெருமிதம் இவையனைத்தும் தந்த உணர்வு என்றும் நிலைக்கும்.
1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தின் பேச்சுகளை நூலாக மடைமாற்றும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பட வேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை ஆரம்ப உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன். இது போன்ற நிகழ்ச்சியின் வெற்றியை ஆவணப்படுத்தினால் அது வரலாற்றில் நிலைக்கும். எனது முழுப் பங்களிப்பையும் நவில உறுதியளிக்கிறேன்.
1924, சிந்துசமவெளியை உலகிற்கு அறிவித்த ஜான் மார்ஷல் அவர்களின் உன்னதச் செயலைப் பாராட்டி தமிழ்நாட்டில் நூற்றாண்டைக் கொண்டாடுவார்கள் எனக் கற்பனை செய்திருக்க மாட்டார், இது தான் தமிழர்களுக்கே உரித்தான தனித்துவம். 1924 – 2024, சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் போல மாநிலம் முழுக்க நடத்தவேண்டும். வரும் மாதங்களில் நமது ஐன்ஸ்டீன் கல்லூரியில் இதுபோன்றதொரு நிகழ்ச்சி நடத்தப்படும்.
பெருமிதத்துடன்,
ஆலடி எழில்வாணன்
செயலாளர், ஐன்ஸ்டீன் கல்லூரி, திருநெல்வேலி.
1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
காணொளிகள் தொகுப்பு:
https://www.youtube.com/playlist?list=PLdag7q0k9BNmlnGajtc86s4ZZ9wHruAH_
சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தரங்கம்
தொடக்க விழா
https://www.youtube.com/watch?v=cLbG7tq4wGs
சிந்துவெளி நூற்றாண்டு சிறப்புரை:
சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
https://www.youtube.com/watch?v=H97FN_qSVmI
சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 1:
சரஸ்வதி நாகரிகம்: புனைவுகளை அறிதல்
முனைவர் பக்தவத்சல பாரதி
https://www.youtube.com/watch?v=8UB-k8sYw6w
சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 2
சூழலியல் பேரிடர்: தமிழர் வந்த வழிகளில் கண்ட தீர்வுகள்
பேராசிரியர் அரசு செல்லையா,
நுண்ணுயிரியல் துறை, மேரிலாந்து பல்கலைக்கழகம், அமெரிக்கா.
https://youtu.be/4SC0-2GbnxU
சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 3
பொய்ச் செய்திகளும் வெறுப்புப் பதிவுகளும்
திருமிகு. ஐயன் கார்த்திகேயன்,
இலக்கு இயக்குநர், தகவல் சரிபார்ப்பகம், தமிழ்நாடு அரசு
https://youtu.be/ld4eAKYStGA
சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 4
ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை நூலின் உருவாக்கம்
முனைவர் சுந்தர் கணேசன்,
இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தரமணி, சென்னை.
https://youtu.be/sXpNlzfYB3E
சிந்துவெளி நூற்றாண்டு நிகழ்ச்சி தொகுப்புரை மற்றும் கலந்துரையாடல்:
திருமிகு. ஆலடி எழில்வாணன்,
சமூக ஆர்வலர்கள் கருத்துரை வழங்கல்.
செயலாளர், ஐன்ஸ்டீன் கல்லூரி, திருநெல்வேலி.
எழில்வாணன்
https://youtu.be/hFeA3JQ3otU