மெட்ராஸ் தின மரபு வழிப் பயணம்
மெட்ராஸ் தின மரபு வழிப் பயணம் அறிக்கையாளர்: அர்ஷா
தேதி மற்றும் நேரம்: 24/08/2024 காலை 6:00 முதல் 8.30 மணி வரை.
பங்கேற்பாளர்கள்: தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள், வரலாற்று ஆர்வலர்கள், புதிய தலைமுறை செய்திப் பிரிவு மற்றும் யூடியூப் சேனல் பிரதிநிதிகள் என 30க்கும் மேற்பட்டோர்.
நிகழ்வின் சுருக்கம்:
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மெட்ராஸ் தின மரபு வழிப் பயணம், சென்னையின் வரலாற்றுப் பின்னணியை ஆழமாக ஆராயும் வகையில் அமைந்தது. இந்தப் பயணத்தில், குழுவினருக்கு முதலில் கருப்பர் நகரம் வெள்ளை நகரம் இரண்டையும் பிரிக்கும் எல்லை, மாதரசன் பட்டணம் என்ற மெட்ராசின் பழைய பெயர், அது ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டு கிழக்கிந்தியக் கம்பெனியால் விரிவாக்கம் பெற்றது, ஜார்ஜ் டவுன் உருவாக்கம், கோட்டை உருவாக்கம் ஆகியன பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
22.9.1914 ஆம் ஆண்டு ஜெர்மானியக் கப்பலான எஸ்.எம்.எஸ் எம்டன் குண்டு போட்ட இடம், அந்நாளில் நடைபெற்ற நிகழ்வுகள், பின்னர் அப்போர்க் கப்பல் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து பினாங்கு வரை சென்று பின்னர் ஆஸ்திரேலியா செல்லும்போது அங்கு ஆங்கிலேய ஆஸ்திரேலியப் படைகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட செய்தி ஆகியவற்றையும் வரலாற்று ஆர்வலர்கள் அறிந்து கொண்டார்கள்.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலன் நினைவிடம், தங்க சாலை மணிக்கூண்டு கோபுரம், மெட்ராஸ் தொழிலாளர் சங்க கட்டிடம் ஆகிய மூன்று முக்கிய இடங்கள் பார்வையிடப்பட்டது.
சிங்காரவேலன் நினைவு மண்டபம்:
சீர்மிகு சிங்காரவேலன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய சாதனைகள் குறித்து தோழர் மஞ்சுளா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். சிங்காரவேலன் அவர்களின் ஆற்றல்மிக்க செயல்பாடுகள் பங்கேற்பாளர்களிடையே மிகுந்த மரியாதையையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
தங்கசாலை மணிக்கூண்டு (மிண்ட் கிளாக்டவர்):
தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள், மிண்ட் கிளக்டரின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கினார். பல்வேறு அரசுகளுக்கான நாணயங்கள் இங்கு அச்சிடப்பட்டதாகவும், அவற்றின் தடயங்கள் இன்று காணாமல் போயிருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
லேபர் யூனியன்:
நூற்றாண்டுக் கால வரலாற்றைத் தன்னுள் கொண்ட லேபர் யூனியன் கட்டிடம், ஓர் ஆலமரத்தால் தாங்கப்பட்டு மிகவும் மோசமான நிலையிலிருந்தது. தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழில் புரட்சிகள் குறித்த பல்வேறு ஆவணங்கள் இங்கு இருந்ததாகவும், தற்போது அவை அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டதாகவும் முனைவர் சுபாஷிணி அவர்கள் வேதனை தெரிவித்தார்.
முக்கிய குறிப்புகள்:
இந்தப் பயணம், சென்னையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பங்கேற்பாளர்கள், தங்கள் நகரின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். வரலாற்று நினைவிடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை இந்தப் பயணம் எடுத்துக்காட்டியது. பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்தும் விவாதம் நடைபெற்றது. புதிய தலைமுறை செய்திப் பிரிவு மற்றும் யூடியூப் சேனல்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்தன.
முடிவுரை:
தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த மரபு வழிப் பயணம், வரலாற்றின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தப் பயணத்தின் மூலம் பல புதிய செய்திகளை அறிந்து கொண்டனர். வரலாற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு நம் அனைவரின் மீதும் உள்ளது என்பதை இந்தப் பயணம் உணர்த்தியது.
நன்றி:
நிகழ்வை நேர்த்தியாக ஒழுங்கமைத்த தமிழ் மரபு அறக்கட்டளை அருங்காட்சியகப் பிரிவின் பொறுப்பாளர்கள் திருவாளர்கள் க்ரிஷ், மணிவண்ணன் ஆகியோருக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.