தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவு அக்டோபர் 19, 2024ல் ஐரோப்பியத் தமிழியல் இணையவழிக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.
இந்தக் கருத்தரங்கத்திற்காக இணைய வழியில் 68 ஆர்வலர்கள் பதிவு செய்து கொண்டார்கள். கருத்தரங்கில் மூன்று உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சி ஜும் இணையவழியில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கிற்கான அழைப்பிதழைச் செல்வி. சுபிக்ஷா வடிவமைத்துக் கொடுத்தார்கள். கருத்தரங்கத்தை முனைவர் அ. இந்துமதி நெறியாள்கை செய்து தொகுத்து வழங்கினார்.
முதல் உரையாகத் தமிழ் மரபு அறக்கட்டளை தோற்றுநர்களில் ஒருவரான முனைவர் கண்ணன் நோக்கவுரை வழங்கினார்கள். ஜெர்மனியில் அவர் வசித்த போது சாதாரண உரையாடல்களின் வழி ஜெர்மானியர்களுக்கும் தமிழர்களுக்கு உள்ள உறவைப் பற்றி அறிந்து கொண்டு, அதன் தொடர்ச்சியாக தானும், முனைவர் சுபாஷிணி அவர்களும் செய்த முயற்சிகளைப் பற்றிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து முனைவர் சுபாஷிணி அவர்கள் ஜெர்மானியத் தமிழியல் தொடக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஜெர்மானியத் தமிழியல் தொடக்கம் பற்றிய முனைவர் சுபாஷிணியின் உரை மிகவும் ஆழமானதாக இருந்தது. ஐரோப்பியர்களின் வருகையின் காரணம் தொடங்கி, தமிழ் அச்சுகத் தமிழில் அச்சான முதல் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சீகன்பால்க் அவர்களின் தமிழ்ப் பணி, ஆவணப்படுத்துதல், அவரை தொடர்ந்து வந்த மிஷினரிகளின் தமிழ் பங்களிப்பு, கார்ல் கரவுல் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பு என்று ஒவ்வொரு நொடியும் தகவல் மழையாகப் பொழிவாக அவர்களின் உரை இருந்தது.
மூன்றாவது உரையை ரேனியசின் எழுத்துலகம் என்ற தலைப்பில் திரு. ஜெபக்குமார் வழங்கினார். அவர் தனக்கே உரிய பாணியில் ரேனியசு பாதிரியார் பற்றிச் சிறந்ததொரு உரையை வழங்கினார்கள். ரேனியசு பாதிரியார் அவர்களின் நாட்குறிப்பின் வழி: சாதிக்கு எதிரான அவர் குரல் கொடுத்தது, மெட்ராஸ் அவருக்கு எவ்வளவு பிடிக்கும், காஞ்சிபுரம் திருவிழாவிற்குச் சென்று வந்த குறிப்பு, ரேனியசு பாதிரியார் அவர்களின் வாசிப்பு, மொழிவளம், மற்றும் மொழிப் புலமை, அவர் சென்னைக்கு வந்த ஆறுமாத கப்பல் குறிப்பு, அவர் குடும்பத்தினரிடம் வந்த கடிதங்கள், இவரின் பதில் கடிதம், ரேனியசு பாதிரியார் எழுதிய புத்தகங்கள், அவருடைய பூமி சாஸ்திரம் என்னும் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய நூல்கள் என்று பல்வேறு தகவல்களை ஜெபக்குமார் அய்யா பகிர்ந்து கொண்டார்.
கலந்துரையாடலில் நிறைய ஆக்கப்பூர்வமான தகவல்கள் விவாதிக்கப்பட்டது. இந்த ஐரோப்பியத் தமிழியல் துறை சார்ந்த தகவல்கள் தமிழகப் பள்ளி பாடங்களில் மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டிய அவசியம் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தத் துறையில் என்ன ஆய்வுகள் நடக்க வேண்டும் அதற்குக் கல்லூரி மாணவர்கள் எப்படித் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்ற சில திட்டவடிவுகள் கலந்துரையாடப்பட்டது.
ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பலமுறை இந்தக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல் ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றதே இன்றைய நிகழ்ச்சியின் நோக்கத்தையும் வெற்றியையும் குறிக்கிறது. ஜெர்மானியத் தமிழியல் அறிஞர் முனைவர் மோகனவேலு அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.
ஐரோப்பியத் தமிழியல் துறை சார்பாக இந்த ஆண்டு நடைபெறும் இந்த இரண்டாவது கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடந்தது. மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் பேச்சாளர்களும், பங்கேற்பாளர்களும் ஆழமான நிறையத் தகவல்கள்/திட்டங்கள் பரிமாற்றம் செய்து கொள்ள இந்தக் கருத்தரங்கு ஒரு தளமாக அமைந்தது.
நன்றி,
முனைவர் மு. பாமா
கடிகை பொறுப்பாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஐரோப்பிய தமிழியல் இணையவழி கருத்தரங்கம்
—தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை சிறப்பு நிகழ்ச்சி—19.10.2024
https://youtu.be/XguAKwKBcr4
ஜெர்மானிய தமிழியலின் தொடக்கம் — முனைவர் க. சுபாஷிணி, சிறப்புரை I
ஐரோப்பிய தமிழியல் இணையவழி கருத்தரங்கம்
—தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை சிறப்பு நிகழ்ச்சி—19.10.2024
https://youtu.be/UAA2msuSbTs
ரேனியசின் எழுத்துலகம் — திரு. சு. ஜெபக்குமார், சிறப்புரை II
ஐரோப்பிய தமிழியல் இணையவழி கருத்தரங்கம்
—தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை சிறப்பு நிகழ்ச்சி—19.10.2024
https://youtu.be/qfdJ8fxMuxg