தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் குடியம் குகைகள், பூண்டி தொல்லியல் அகழாய்வு அருங்காட்சியகம், அத்திரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 22, 2024 ஞாயிறு அன்று ஒரு நாள் மரபுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்பயணத்தில் கொற்றலை ஆற்றுப்படுகையில் கற்கருவிகளைப் பார்த்தல், குடியம் குகைப்பகுதிகளில் தொல்மனிதகுல வாழ்விடங்களைப் பார்வையிடலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒரு நாள் பயணத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்விடப் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகின்ற அத்திரம்பாக்கம் பகுதியில் பேலியோலித்திக் கால கற்கருவிகளைக் காணும் வாய்ப்பும் வரலாற்று ஆர்வலர்களுக்குக் கிடைத்தது.







குடியம் குகைகள் – அத்திரம்பாக்கம் கற்கருவிகள்
— முனைவர் க. சுபாஷிணி
வரலாற்றை நாம் தொல்லியல், கல்வெட்டியல், அகழாய்வுகள் இலக்கியம் போன்றவற்றை அலசி ஆராய்வதன் வழி கண்டு கொண்டிருந்த காலம் இருந்தது. அதன் மற்றொரு புதிய சேர்க்கையாக இந்த அறிவியல் ஆய்வில் இணைந்திருப்பது மரபணுவியல் ஆய்வுகள் துறை. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளாக மரபியல் ஆய்வுத்துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சி கண்ட ஒரு துறையாக வளர்ந்தது என்பது உண்மை.
ஆயினும் கூட கடந்த 30 ஆண்டுகளில் இந்த மரபணு ஆய்வியல் துறை கண்டிருக்கின்ற வளர்ச்சி அசாத்தியமானது. வரலாற்றை அறிந்து கொள்ள தொல்லியல் துறையும் இலக்கியத் துறையும் கடினமாகப் போராடிக் கொண்டிருக்கின்ற காலத்தில் மரபணு அறிவியல் துறை என்பது மிகத் துல்லியமாக, புதிய வெளிச்சங்களை வரலாற்றுத் துறையில் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
தொல் இனங்களின் இடப்பெயர்வுகளையும் அவை பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட நகர்வுகள், அதன்வழி ஏற்பட்ட மரபணுவியல் மாற்றங்கள், தனித்துவத்துடன் கூடிய மனித இனங்கள், அவற்றின் தடயங்களும் அவற்றின் மறைவு என்பன பற்றிய பல்வேறு ஆய்வுத் தகவல்களைக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக ஒரு நூல் வெளியிடப்பட்டது. சமகால இத்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்ற முடிவுகளை மையமாகக் கொண்டு எளிய தமிழில் பொதுமக்களும்
அறிந்து கொள்ளக் கூடிய வகையில் “தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்” என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொல்மனிதர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக ஆய்வாளர்களால் அடையாளப் படுத்தப்பட்டுள்ள ஒரு பகுதி தமிழ்நாடு – ஆந்திரா எல்லைக்கு அருகே உள்ள குடியம் குகைகளும் அத்திரம்பாக்கம் பகுதியும் அப்பகுதியில் ஓடுகின்ற கொற்றலை ஆற்றுப் பகுதியுமாகும். 1863ஆம் ஆண்டில் அத்திரம்பாக்கம் குடியம் குகைப்பகுதிகளுக்குக் களப்பணி மேற்கொண்டிருந்த புவியியல் அறிஞரான Robert Bruce Foote அவர்களால் இப்பகுதி தொல்லியல் களமாக அடையாளப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில்
அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் 2002ஆம் ஆண்டில் ஆய்வாளர் டாக்டர் சாந்தி பப்பு அவர்களது ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னர்தான் இப்பகுதி உலகளவில் தொல் மனிதகுலம் வாழ்ந்த ஒரு பகுதியாக வெளிச்சம் பெற்றது.
டாக்டர் சாந்தி பப்பு அவர்களது ஆய்வுகள் இப்பகுதியில் பெருங்கற்கால சான்றுகளை அடையாளப்படுத்தின. ஏறக்குறைய 1.7 மில்லியன் ஆண்டுகள் காலவாக்கில் இப்பகுதியில் வசித்திருக்கக் கூடிய மனிதகுலத்தின் (ஹோமோ எரெக்டஸ் வகை மனிதகுலமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு) வாழ்விடத்தில் அவை உருவாக்கிய கற்கருவிகள் பல இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. கையில் இறுகப் பற்றிக் கொண்டு விலங்குகளைக் கிழிக்க உதவும் வகையிலான கூர்மையான நுனிப்பகுதியைக் கொண்ட அச்சுவேலியன் (Acheulean tools) வகை கற்கருவிகளும் விலங்குகள், மரப்பட்டைகள் ஆகியவற்றை உரித்து எடுக்கும் ப்ளேட் வகை கற்கருவிகளும் இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.
இன்றைக்கும் கூட அத்திரம்பாக்கம் மண்மேட்டுப் பகுதிகளிலும் கொற்றலை ஆற்றிலும் இவ்வகை கற்கருவிகளைக் காணமுடிகின்றது. இப்பகுதிகளில் டாக்டர் சாந்தி பப்பு அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் இப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள பூண்டி அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வைப்பகம்
மேலும் பல தொல்லியல் சான்றுகளையும் பாதுகாக்கும் அருங்காட்சியகமாகவும் திகழ்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் மரபணுவியல் ஆய்வுகள் ஆய்வாளர்களால் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்ற ஆய்வுத் துறையாகக் கருதப்படுகின்றன. தொல்மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களைத் தொடர்ந்து தேடி ஆராய்வதும் மரபணுவியல் ஆய்வுகளைப் பலகோணங்களில் நிகழ்த்துவதும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பழமையையும் தொன்மையையும் கண்டறிய மிகவும் அவசியமான ஓர் ஆய்வுத் துறையாகின்றது.
அவ்வகையில் இந்தப் பூண்டி அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலை இக்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் அமையாமல் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றே. இந்த அகழ்வைப்பகம் அமைந்துள்ள கட்டடத்தைப் புணரமைத்து அங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும்பொருள்களுக்கான தகவல்கள் முறையாக மேம்படுத்தப்பட வேண்டும்.
கடந்த நூற்றாண்டுகளின் உலகளாவிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் இங்கு இணைக்கப்பட வேண்டியதும் தேவையாகின்றது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மனிதகுல தொன்மையின் சுவடுகள் உலகளாவிய கவனம் பெற இது அவசியமாகும்!