தமிழ் மரபு அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டின் செயலாக்கங்கள் – சாதனைகள்
வரலாற்றுப் பாதுகாப்பு, முறையான தமிழர் மொழி, வரலாறு பண்பாடு ஆகியன பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தல், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல், அவை பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தல் என்ற நோக்கத்தோடு இயங்கி வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட்டது தமிழ் மரபு அறக்கட்டளை, இன்று அதன் 24 ஆம் ஆண்டில் பயணிக்கின்றது. இந்த அமைப்பின் அனைத்துச் செயல்பாடுகளையும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நமது செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட முறையில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உலகளாவிய முறையில் தமிழர் வரலாற்றுச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் தலையாய ஓர் அமைப்பாக இன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிலைபெற்றுள்ளது. இந்த அமைப்பு உருவாக்கியிருக்கும் ஆவணக் களஞ்சியங்கள் இன்று உலகளாவிய அளவில் ஆய்வு மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் தமிழர் அல்லாதவருக்கும் கூட ஆய்வுகளில் உதவும் வகையில் அமைந்துள்ளன என்பது இதன் சிறப்பு.
ஒவ்வொரு ஆண்டும் தங்கு தடை இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த 2024 ஆம் ஆண்டின் சாதனைப் பட்டியலில் இடம்பெறும் சில நிகழ்வுகளைக் காண்போம் . . .
சங்கம் பீடியா வலைப்பக்கம் திறப்பு விழா:
ஜனவரி மாதத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் முனைவர் ப பாண்டியராஜா அவர்களது கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்த வலைப்பக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு அவரது அனைத்து ஆக்கங்களும் சங்கம்பீடியா எனும் ஒரே தளத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இணைக்கப்பட்டது. இதே நிகழ்வில் முனைவர் ப பாண்டியராஜா அவர்களுக்கு “சங்கச் செம்மல்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழர் கலை இலக்கிய விழா:
இலங்கை மட்டக்களப்பு நகரில் வரலாறு காணாத மாபெரும் தமிழர் கலை இலக்கிய விழாவைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெற்றிகரமாக முன்னின்று செயல்படுத்தியது. இலங்கை தமிழறிஞர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். பன்னாட்டு அறிஞர்கள் கருத்தரங்கில் உரையாற்றினார்கள். ஓவியர் ஈஸ்வரராஜா குலராஜா அவர்களின் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மட்டக்களப்பு விழா மலரும் மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு என்ற நமது பதிப்பக நூலும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பு நூலகத்திற்கு நூல் நன்கொடை:
இலங்கை மட்டக்களப்பு நூலகத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல் நன்கொடையாக 1200 நூல்கள் கொண்டு சென்று சேர்க்கப்பட்டன. அவை மட்டக்களப்பு நகர நூலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
சிந்துவெளி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட நூற்றாண்டு விழா:
சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை இது தொடர்பான கருத்தரங்கை ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தி இந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்த பெருமையையும் சேர்த்துக் கொள்கின்றது. அறிஞர் பெருமக்களின் உரைகளும் கலந்துரையாடல்களும், விழா சிறப்பு நூல் வெளியீடும் இந்த நிகழ்வைச் சிறப்பித்தன.
குடியம் மரபுப் பயணம்:
ஆண்டின் இறுதி நிகழ்வாகத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு நாள் மரபு பயணம் தொல் பழங்கால வரலாற்றுச் சான்றுகளை நேரில் கண்டு வரும் வகையில் வட தமிழ்நாட்டின் குடியம் குகைப் பகுதிகளுக்கான மற்றும் அத்திரம்பாக்கம் அகழாய்வுப் பகுதிக்கான பயணமாக அமைந்தது. மனித குல இடப்பெயர்வை அறிந்து கொள்ளும் வகையில் நேரடிக் களப்பயணமாக இது அமைந்தது.
இவை தவிர்த்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயல்பாடுகளாகக் கீழ்க்காணும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன . . .
- மாதம் இருமுறை திசைக்கூடல் இணைய வழி வரலாற்று ஆய்வுரைகள் கலந்துரையாடல்கள்.
- தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் இவ்வாண்டின் இறுதியோடு 33 நூல்களை எட்டியுள்ளன. ஒவ்வொரு நூலும் ஆய்வுத் தரம் மிகுந்த நூலாக அமைகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்களில் இரண்டு இவ்வாண்டு விருது பெற்றன என்பதும் இப்பதிப்பகத்தின் நூல்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் அங்கீகாரம் ஆகும்.
- திணை காலாண்டிதழ் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழ். நான்கு இதழ்கள் பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளைத் தாங்கி இவ்வாண்டு வெளிவந்தன.
- மலேசியத் தமிழர் வரலாறு தொடர்பான தொடர் காணொளிகள் இவ்வாண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆவணப் பதிவில் இணைக்கப்பட்டன.
- கொரியா-தமிழ் ஆய்வு தொடர்பாக முனைவர் நா.கண்ணன் அவர்களது தலைமையில் உரை நிகழ்ச்சிகளும் நூல் திறனாய்வு நிகழ்ச்சிகளும் இவ்வாண்டில் நிகழ்ந்தன. கொரிய-தமிழ் ஆய்வை முன்னிலைப்படுத்தி ஓர் ஆய்வு நூலையும் இவ்வாண்டு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடிகை இணையவழிக் கல்விக் கழகத்தின் வழி ஐரோப்பியத் தமிழியல் கருத்தரங்கம் இவ்வாண்டு நிகழ்த்தப்பட்டது. மேலும், மரபணுவியல் ஆய்வுகள் தொல் மனிதக் குலத்தின் இடப்பெயர்வுகள் ஆகியன பற்றிய ஓர் ஆய்வுரையும் ஏற்பாடு செய்து நிகழ்த்தப்பட்டது.
- வையத்தலைமை கொள் பிரிவின் கீழ் பெண்களின் சமூக நிலை குறித்த இரண்டு இணையவழிக் கருத்தரங்கங்கள் நிகழ்த்தப்பட்டன.
- முதல்முறையாக ஜெர்மனியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஜெர்மனி கிளை ஏற்பாட்டில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி ஒன்றும் மே மாதம் நடைபெற்றது.
- சுவலி ஒலிப்புத்தகத் திட்டத்தின் கீழ் மேலும் நாட்டுடைமையாக்கப்பட்ட சில நூல்கள் ஒலி நூல்களாக இணைக்கப்பட்டன. இவை குறிப்பாகப் பார்வையற்றோர் கேட்டுப் பயன்பெறும் வகையில் பங்களிக்கின்றன.
- ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்தும் மெட்ராஸ் வரலாற்று மரபுப் பயணம் தமிழ்நாட்டின் தலைநகரில் கருப்பர் நகர வரலாற்றுச் சின்னங்களை மக்களுக்கு நேரில் அடையாளம் காட்டும் பயணமாக இவ்வாண்டும் அமைந்தது.
- சுவிட்சர்லாந்து நாட்டில் பாசல் நகரில் அமைந்திருக்கும் பொது மக்கள் நூலகத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை நேரில் சென்று புத்தகக் கொடை வழங்கி, அங்குத் தமிழ் நூல்களுக்கான ஒரு சிறப்புப் பகுதி தொடங்கிச் செயல்படுத்தும் கலந்துரையாடலில் பங்கு கொண்டது.
- தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளையினரின் மாதாந்திர நூல் திறனாய்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் ஓர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாகத் தொடர்ந்து நடைபெற்றது.
- அருங்காட்சியகப் பிரிவினர் ஏற்பாட்டில் அருங்காட்சியகத் தின இணைய வழி சிறப்பு நிகழ்ச்சி இவ்வாண்டும் மே மாதம் கொண்டாடப்பட்டது.
- தமிழர் பண்பாட்டின் ஓர் அங்கமாகத் திகழும் பனை மரத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தது.
இவை மட்டுமின்றி இணைய வழி ஆய்வுரைகள் அவ்வப்போது உலகளாவிய தமிழர்களின் அறிவுத் தேடலுக்கு வாய்ப்பாகவும் வழங்கப்பட்டது.
இத்தகைய பல்வேறு பணிகளை 2024 ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து இணைந்து பங்காற்றி வரும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
செயற்குழு உறுப்பினர்களின் அயராத செயல்பாடுகளும் ஆழ்ந்த ஆர்வமும் இந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமிதம் கொள்கின்றேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் அனைவரும் இணைந்து செயலாற்றலாம்.
வாருங்கள், தமிழால் இணைவோம்!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
31.12.2024












